புரட்சியாளர், பொருளியல் அறிஞர், அரசியல்வாதி,
விஞ்ஞானி… என பன்முகப் பரிமாணம் கொண்ட மனிதரின் கதை
மு.சிவகுருநாதன்
(நூலறிமுகம்… தொடர்: 002)
(டிசம்பர்
2015 இல் பாரதி புத்தகாலயம் வெளியீட்ட தேவிகாபுரம் சிவாவின் ‘மேக்நாட் சாகா - ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை’ நூல்
பற்றிய பதிவு இது.)
இன்றைய பங்களாதேஷில் டாக்காவிற்கு
அருகிலுள்ள சேறும் சகதியுமான ஒரு சதுப்புநில கிராமம் ஒன்றில் ஒடுக்கப்பட்ட தலித்
வகுப்பில் பிறந்தவர். அடிக்கடி வெள்ளத்தில் மிதக்கும் அப்பகுதியிலிருந்து படகிலும்
நீந்தியும் பள்ளிக்குச் சென்றவர். காலில் செருப்புகூட இருக்காது. தனது உழைப்பாலும்
திறனாலும் படித்து பல்கலைக்கழக அளவில் இரண்டாமிடம் பெற்றார்.
இருப்பினும் அவர் விரும்பிய
ஐ.எஃப்.எஸ். தேர்விற்கு நிராகரிக்கப்படுகிறார். பள்ளி நாள்களில் வங்கப்
பிரிவினைக்கு எதிரானப் போராட்டங்களில் பங்குபெற்றது, வங்கப் புரட்சியாளர்களின்
தொடர்புகள் ஆகியவற்றால் இது நிகழ்கிறது.
தாகூர், எம்.என்.ராய், ஜகதீஷ் சந்திர போஸ் போன்றோருடன் தொடர்பில் இருந்தவர்.
வானியற்பியல் ஆய்வுகளைத் தொடர்ந்தார். இவரது கோட்பாடுகளும் (சாஹா) அயனியாக்கச்
சமன்பாடும் சூரியன் மற்றும் விண்மீன்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றை
வகைப்படுத்தவும் பயன்பட்டது.
இவர்தான்
இந்திய வரலாற்றில் மறக்கக்கடிக்கப்பட்ட ஒரு
பெயர். இயற்பியலாளர், அணுசக்தி விஞ்ஞானி, புரட்சியாளர்,
நாடாளுமன்றவாதி, பொருளியல் அறிஞர், அரசின் ஆலோசகர் எனப் பன்முகப் பரிமாணம்
கொண்டவர் மேக்நாட் சாகா.
கல்கத்தா அறிவியல் கல்லூரியில்
சுதந்திரமான ஆய்வுகளைத் தொடர விரும்பியவரை, சர் சி.வி. ராமனால் தனக்கு கீழ்
ஆய்வுசெய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். இவர் மட்டுமல்ல சத்யன் போசும் இதை
விரும்பவில்லை. தான் மிகவும் மதிக்கும் ஜகதீஷ் சந்திரபோசின் கீழும் ஆய்வு செய்ய
சாஹா விரும்பியதில்லை, காரணம் இவரது சுதந்திர உணர்வு. அலகாபாத் பல்கலையில்
பணியாற்றியபோது அமெரிக்காவில் ராக்ஃபெல்லர் அறக்கட்டளை உதவியை நிறுத்தி தனது
கடிதத்தின் மூலம் வஞ்சம் தீர்த்துக் கொண்டார் சி.வி. ராமன்.
1935 இல் ‘Science and Culture’ இதழை நண்பர்களுடன் தொடங்கி அதில் 137
கட்டுரைகளை எழுதினார். காந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையான விமர்சித்தும்
தொழில்மயத்தை ஆதரித்தும் பல கட்டுரைகளை எழுதினார்.
1948 இல் அமைக்கப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்விக்குழுவில் இடம் பெற்று
தனது பங்களிப்பை வழங்கினார். இந்தப் புரட்சிகர அறிவியல் மற்றும் சமூக விஞ்ஞானியை
இந்திய முதலாளித்துவ ஆளும் வர்க்கம் ஓரங்கட்டியது. தொழிலதிபர் டாடாவின் உறவினர்
ஹோமி ஜஹாங்கீர் பாபா முன்னிறுத்தப்பட்டு, இவரை வெளியேற்றினர்.
வெளியே சோசலியமும் உள்ளே முதலாளித்து ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபடும் நேருவை
விமர்சிக்க நாடாளுமன்றத்தில் நுழைய முடிவு செய்தார் சாஹா. புரட்சிகர சோசலிஸ்ட்
கட்சியின் சார்பில் தேர்தலில் பங்கேற்ற காங்கிரசின் பணக்கார வேட்பாளரைத்
தோற்கடித்தார். அகதிகள் மறுவாழ்வு, ஆற்றுப்பள்ளத்தாக்குத் திட்டங்கள், தொழிற்துறை,
நாள்காட்டிச் சீர்திருத்தம் போன்றவற்றில் உரிய பங்களிப்பைச் செய்தார்.
மேக்நாட் சாகாவைப் பற்றிய தமிழில் வெளிவரும் விரிவான முதல் நூல் இது.
இந்திய ஆளும் வர்க்கத்தால் மறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தலித் அறிவியல் அறிஞரின்
வாழ்வையும் பணிகளையும் அறிந்துகொள்வதுடன் இந்திய அறிவியல் உலகம் அன்றும் இன்றும்
எவ்வாறு இயங்குகிறது எனபதையும் இந்நூல் நமக்குத் தெளிவாக உணர்த்தும்.
இவர் அறிவியல் அறிஞர் மட்டுமல்ல; ஒரு சமூக விஞ்ஞானியும் கூட. அவரது பெயர்
பற்றிய விவரங்கள் நம்மை வியப்பூட்டுவதுடன் கூடவே சாஹா எனும் பல்துறை அறிஞரை
விளங்கிக்கொள்ளப் பயன்படும்.
மேக்நாட் சாகாவிற்கு அவரது குடும்பத்தினர் மேக்நாத்
(Meghnath) என்று பெயரிட்டனர். ஒரு
அடைமழை இரவில் பிறந்த அவருக்கு மேகக்கடவுள் இந்திரனின் பெயரையே இவ்வாறு வைத்தனர்.
ஆனால் அவர் தனது பெயரை மேக்நாட் (Meghnad) என்று
மாற்றிக்கொண்டார், ஏன்?
மேக்நாத் (Meghnath) இந்துக்கடவுள் இந்திரனின் பெயர். இதைவிட
ராவணனின் மகன் இந்திரஜித்தைக் குறிக்கும் மேக்நாட்
(Meghnad) என்ற பெயரை சாகா பெரிதும் விரும்பினார்.
மைக்கேல் மதுசூதன் தத்தா எழுதிய 'மேக்நாட் வத்' (மேக்நாட் வதம்) எனும் இதிகாச நூல் இவரை மிகவும் கவர்ந்தது. இதன் நாயகன், இராமாயண எதிர் நாயகன் இராவணனின் மகன் இந்திரஜித் இவரைக் கொள்ளை கொண்டான். எனவே
இந்திரன் இந்திரஜித்தாக மாறினான்.
நம் காலத்துக் குழந்தைகளை
அறிவியல் மனப்பான்மையற்று ‘அப்துல்கலாம்’களை மட்டுமே விஞ்ஞானிகளாகக் கொண்டாடக்
கற்றுத் தந்திருக்கிறோம். மக்கள் சமூகம் தவிர்த்த கற்பித அறிவியல் நம்மைக் கரை
சேர்க்காது. இந்தியச் சமூகம் புறக்கணித்த இன்னும் பலநூறு சாஹாக்களைத் தோண்டியெடுத்து
நம் குழந்தைகளின் கைகளில் அளிக்க வேண்டும். அந்த வகையில் இது பாராட்டத்தக்க முதல்
முயற்சியாகும்.
நூல் விவரங்கள்:
மேக்நாட் சாகா - ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை
தேவிகாபுரம் சிவா
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு: டிசம்பர் 2015
பக்கங்கள்: 288
விலை: ₹ 230
தொடர்பு முகவரி:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.
தொலைபேசி: 044 24332424, 24332924,
24356935
இணையம்: www.thamizhbooks.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக