புதிய வெளிச்சத்தை நோக்கி பயணிக்கத் தூண்டும் கதைகள்
மு.சிவகுருநாதன்
(‘இந்நூல் என் வாசிப்பில்…’ என்றும்
‘ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய நூல்கள்’ என்ற தலைப்புகளில் இதுவரை நூற்றுக்கணக்கான
விமர்சனங்கள் இப்பக்கத்தில் வெளியானது. அவை ‘நூலறிமுகமாக’ மீண்டும் தொடர்கின்றது.)
(நூலறிமுகம்… தொடர்: 001)
(2019 இல் அடையாளம் வெளியீடாக கேரன்
சிவன் மொழிபெயர்ப்பில் ‘நான் யார்?
தேடலும் வீடுபேறு அடைதலும் - 173 ஜென் கதைகளாலும் 10 மாடு மேய்க்கும்
படங்களிலிருந்தும் விழிப்புணர்வு பெறுங்கள்’ எனும் நூல் பற்றிய
பதிவு இது.)
காஞ்சிபுரத்தை ஆண்ட இடைக்கால பல்லவ மன்னர் இரண்டாம்
கந்தவர்மனின் மூன்றாவது மகன் போதிதருமர் மகாயானப் பிரிவுகளில் ஒன்றான ஜென் பவுத்தத்தைத்
தோற்றுவித்தவராகக் கருதப்படுகிறார். குங்ஃபூ தற்காப்புக் கலையை உண்டாக்கியவரும் இவரே.
அன்றைய பவுத்த மையமாகத் திகழ்ந்த காஞ்சியில் அரசர்களின் கடைப்பிள்ளையை பவுத்த மடங்களுக்கு
தானமளிப்பதும் தீட்சை பெறுவது வழக்கமாக இருந்ததாகச் சொல்கிறார்கள். இந்த ஜென் பவுத்தம்
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரவியுள்ளது.
தத்துவ
விவாதங்களை விட தியான மார்க்கத்தை முன்னெடுத்த இந்த மரபு தத்துவத்தை முற்றாகக் கைவிட்டதாகக்
கருத வேண்டிய அவசியமில்லை. பவுத்தக் கருத்துகளை சாமான்யர்களுக்கு புரியும் வடிவில்
எளிமையாக கதைவடிவில் நமக்கு அளிக்கின்றன.
கதைகள் நமக்குப் புதிதில்லை; பழக்கமான ஒன்றுதான்.
ஆனால் ஜென் கதைகள் வழமையான நீதிக்கதைகள் அல்ல; நமக்குள் உள்நுழைந்து கேள்விகளைக் கேட்பவை.
நம்மை சிந்திக்கத் தூண்டுபவை. இந்த சிந்தனைகளுடான நம்மை புதிய வெளிச்சத்தில் பயணிக்கத்
தூண்டுபவை.
“ஜென் கதைகளைப் படிப்பது ஒரு கலை. அது ஒரு படைப்புச்
செயல்”, என்கிறார் போதி ஜென்டோ – ஜென் தியான மையப் பங்குத்தந்தை ஆமா சாமி. இந்நூலுக்கு
முன்னுரை மற்றும் சில அறிமுகங்களையும் இவர் எழுதியிருக்கிறார். இவது சீடர் கேரன்
சிவன் இக்கதைகளை மொழிபெயர்த்துள்ளார்.
- மாட்டைத் தேடுதல்
- மாட்டின் சுவடுகளைக் கண்டறிதல்
- மாட்டைக் காணுதல்
- மாட்டைப் பிடித்தல்
- மாட்டை வயப்படுத்துதல்
- மாட்டின் மீது அமர்ந்து வீடு திரும்புதல்
- மாட்டை மறந்து, தேடுபவன் தனிமையில்…
- மாடும் தேடுபவனும் – இருவரும் மறந்துவிடுதல்
- உலகப் பிறப்பிடத்துக்கும் தொடக்கத்துக்கும் திரும்புதல்
- சந்தையில் நுழைதல்
என 10 இயல்களாக 173 ஜென் கதைகள் இந்நூலில்
உள்ளன. ஜென் மரபில் மாடும் மேய்க்கும் படங்கள் என்று சொல்லப்படும் குவோ அன் ஷிஹ்
யுவான் (ககுவான்) வரைந்து தலைப்பிட்ட 10 படங்களே இதன் இயல்களாக விரிகின்றன.
மாடு
மேய்த்தல், தொலைத்தல், தேடல், கண்டடைதல், கைப்பற்றுதல், தன்வயமாதல் எனும் நெடும்
பயிற்சி வேண்டும் பகுத்தறிவுச் செயல்முறையாகும். எனவேதான் இது வழக்கமான சூழ்ச்சி,
தந்திரங்கள் நிறைந்த நீதிகளை எல்லாருக்கும் எல்லாக் காலங்களுக்குமானவைகளாக
முன்வைப்பதை இவைகள் செய்வதில்லை.
ஜென் என்பது என்ன? “மின்னல் மின்னுகிறது,
தீப்பொறிகள் பொழிகின்றன, உங்கள் கண்களின் ஒரு சிமிட்டலில் நீங்கள் பார்க்க
வேண்டியதைப் பார்க்கத் தவறிவிட்டீர்கள்”, (பக்.03) அவ்வளவுதான்.
“நடப்பது
ஜென், அமர்வது ஜென்; பேசிக்கொள்வது அல்லது மௌனம், செயலூக்கம் அல்லது அமைதி,
சாரம்சத்தில் அது அமைதி” (பக்.91)
அமைதிதான், ஆனால் வெறும் அமைதியல்ல; ‘செயலூக்கம் அல்லது அமைதி’ என்பதாக
நம்மைப் புரிந்துகொள்ள வைக்கிறது.
“வருத்தம் வரும்போது, வருத்தமாக இருங்கள்; பயம்
வரும்போது, பயந்தவாறு இருங்கள்”, (பக்.250) என இயல்பாக இருக்க வைக்கிறது ஜென்.
“நீங்கள் ஒரு புத்தனைச் சந்திக்க நேர்ந்தால்
அந்தப் புத்தனைக் கொன்று போடுங்கள். நீங்கள் ஒரு மூதாதையரைச் சந்திக்க நேர்ந்தால்,
மூதாதையரைக் கொன்றுவிடுங்கள். நீங்கள் உங்கள் பெற்றோரைச் சந்தித்தால், உங்கள்
பெற்றோரைக் கொல்லுங்கள்” என்று ஜென் குரு சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைய
வேண்டாம். (கதை:126) இறந்தவர்களை மீண்டும்
கொல்ல முடியுமா என்ன? இங்கு ‘கொல்லுதல்’ என்பது அவர்களுடைய கருத்துகளையும்
கற்பனைகளையும் துறத்தல் என்று பொருளாகும். பற்றுகளைத் துறப்பதுபோல் நம்மையும் நம்
அடையாளங்களையும் சுயத்தையும் துறத்தல் சாத்தியமாகும்போது ஒருவருக்கு ஜென் மனநிலை
வந்துவிடுகிறது.
“அப்புறம்,
முதல்முறையாக விடுதலையடைவீர்கள். விஷயங்களில் சிக்கிக்கொள்ளமாட்டீர்கள். அதோடு
எங்கு போக வேண்டும் என்று விரும்பினாலும் சுதந்திரமாகக் கடந்து போவீர்கள்”, என்று
குரு மேலும் சொன்னபிறகு தெளிவடைவீர்கள். (பக்.183)
இறுதியாக, ஒரு ஜென் கதையுடன் விடைபெறுவோம். விடை பெறுவது சாத்தியமா என்ன?
ஜென் தத்துவங்களில் முழ்குவோம்.
“இரண்டு மனிதர்கள் அசைந்து கொண்டிருந்த ஒரு கொடியைக் குறித்து
விவாதித்துக் கொண்டிருந்தனர்.
"காற்றுதான் உண்மையில் அசைந்து கொண்டிருக்கிறது",
என முதல் மனிதர் சொன்னார்.
" இல்லை, கொடிதான் அசைந்து கொண்டிருக்கிறது",
எனத் தீர்மானமாகச் சொன்னார் இரண்டாவது
மனிதர்.
அந்தப் பக்கம் எதேச்சையாக நடந்து வந்து கொண்டிருந்த ஒரு ஜென்
குரு, இருவரின் விவாதத்தைக் கேட்டு அதில் தலையிட்டார்.
"அசைவது கொடியுமில்லை; காற்றுமில்லை", என்று
சொன்னவர்,
" உங்கள் மனம்தான்
அசைகிறது", என்றார். (பக். 9, கதை: 7, அசையும் மனம்)
நூல் விவரங்கள்:
நான்
யார்? தேடலும் வீடுபேறு அடைதலும்
(173
ஜென் கதைகளாலும் 10 மாடு மேய்க்கும் படங்களிலிருந்தும் விழிப்புணர்வு பெறுங்கள்)
தொகுப்பும் செம்மையாக்கமும்: கேரன் சிவன்
முதல் பதிப்பு: 2019
பக்கங்கள்: 268
விலை: ₹ 260
வெளியீடு:
அடையாளம்,
1205/1, கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் – 621310,
திருச்சிராப்பள்ளி – மாவட்டம்.
பேச:
04332 273444, 9444772686
மின்னஞ்சல்: info@adaiyaalam.net
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக