செவ்வாய், ஏப்ரல் 07, 2020

இயல் தாவரங்களும் அயல் தாவரங்களும் 


இயல் தாவரங்களும் அயல் தாவரங்களும் 


 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)


மு.சிவகுருநாதன்

   (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 73) 

  
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை:


      எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவ அறிவியல் பாடநூலின் ‘தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு’ பாடத்தில் ‘ஆபத்தான நிலையிலுள்ள உயிரினங்களை பாதுகாத்தல்’ வழிமுறைகளில், “பூர்வீக மரங்களை நடவு செய்வதன் மூலம்  விலங்குகளுக்கு உணவை வழங்கும்” (பக்.116) எனவும், (வழங்கலாம் என்று இருந்திருக்க வேண்டும்.)  தொடர்ந்து ‘உங்களுக்குத் தெரியுமா?’ பகுதியில், “நம் சுற்றிலும் வேப்பமரம்,  ஆலமரம் போன்ற பூர்வீக மரங்களை நடவு செய்வது  விலங்குகளுக்கு உதவியாக இருக்கும். பல  பறவைகளுக்கு தங்குமிடமாக இந்த  மரங்கள் உள்ளன”, (பக்.116) என்று சொல்லப்படுகிறது. (குடை மரம் நீக்கம்?!)

  இவை ஆங்கில வழியில் இவ்வாறு உள்ளது.

    “Planting native trees will provide food to  the animals”, மற்றும் 

   “Planting the native trees like  Neem tree, Umbrella tree and  Banyan tree in our surrounding  will be helpful for the animals. Many birds  and animals find shelter in those trees”. (Page: 100)

   இதிலிருந்து ‘native trees’ என்பதைப் ‘பூர்வீக மரங்கள்’ என்று சொல்வதை அறிய முடிகிறது. அது என்ன பூர்வீக மரம்? மரபணு ஆய்வுகள் செய்ய வேண்டுமா? இந்தியாவில் இன்று உள்ள மக்கள் கூட பல்வேறு காலகட்டங்களில் ‘வந்தேறி’களாக மரபணு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இயல் தாவரங்கள் (native plants), அயல் தாவரங்கள் (alien plants) என்ற அழகான சொல்லாடல்கள் தமிழில் உள்ளன. பாடமெழுதிகளின் கண்களில் இது படுவதேயில்லை. ஏனெனில் அவர்களது வாசிப்பு அவ்வளவு ஆழமானது!

    தமிழகத்தில் இன்று காணப்படும் பூக்கும் தாவரங்கள்  (angiosperms) சுமார் 5,700. பண்டைய காலத்தில் இவை 7,000 ஆக இருந்திருக்கலாம்; எஞ்சியவை அழிந்தன. 5,700 களில் 4,700 மட்டுமே இயல் தாவரங்கள்; 1000 அயல் தாவரங்கள் என பேரா. கு.வி.கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கிறார். (பார்க்க: தமிழர் – தாவரங்களும் பண்பாடும் - பேரா. கு.வி.கிருஷ்ணமூர்த்தி, வெளியீடு: பாரதி புத்தகாலயம்)
 
     மிளகு, பனை, செங்காந்தள், ஏலக்காய். இலவங்கம், சந்தனம், தேக்கு, கருங்காலி போன்ற தமிழகத்திற்கே உரித்தான (Endemic plants) 140 தாவரங்கள் உள்ளன. இந்தியாவில் 600 இடவரையத் தாவரங்கள் (Endemic species) உள்ளன.  இவற்றை மட்டுமே பூர்வீகத் தாவரங்கள் என்று சொல்லமுடியும். இன்றைய சூழலில் இது நகைப்பிற்கிடமானது.

    வேம்பு, சுரை, புளி, மிளகாய், தென்னை, உருளைக்கிழங்கு, தேயிலை போன்ற பல தமிழகத்திற்கு அயல் தாவரங்கள்தான். இவை இங்கு நுழைந்த காலங்கள் வேறு, அவ்வளவே. வேம்பு, சுரை ஆகியன் சங்ககாலத்திலிருந்தே இங்கு உள்ளது. புளி 11 ஆம் நூற்றாண்டிலும், மிளகாய் 17-18 ஆம் நூற்றாண்டிலும், உருளைக்கிழங்கு 18-19 ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவிற்குள் நுழைந்தவை.

   நாம் உண்ணும் உணவில் 80% அயல் தாவரங்கள் ஆக்ரமித்துள்ள நிலையில் பூர்வீகத்தாவரங்களை மட்டும் பயன்படுத்த கட்டாயப்படுத்த இயலாது. உருளை, காரட், பீட்ருட், டர்னிப், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், மிளகாய், புளி, மக்காச்சோளம், பார்லி, ஓட்ஸ், கோக்கோ, ஆப்பிள், திராட்சை, பேரி, கொய்யா, பிளம், அன்னாசி போன்ற பலவும் அயல் தாவரங்களே.

  காப்பி, தேயிலை, ரப்பர், சவுக்கு, தென்னை, யூக்லிப்டஸ் போன்ற தோட்டப்பயிர்களும், அரகேரியா, போகன்வில்லா, குடை மரம் போன்ற அலங்காரத் தாவரங்களும் நமது நாட்டைச் சேர்ந்ததல்ல.

     அயல் தாவரங்களில் மிக வேகமாக வளரும் களைகள் (Alien invasive species)  நிறைய உள்ளன. அவற்றிற்கு சீமைக்கருவேலம், பார்த்தீனியம், நெய்வேலிக் காட்டாமணக்கு, ஆகாயத்தாமரை (ஐக்கோர்னியா / வெங்காயத்தாமரை) சால்வீனியா, சூபாபுல், உண்ணிச்செடி (லான்டானா) போன்றவற்றைச் சுட்டலாம். 

   இன்றைய நிலையில் களைகளாகச் சூழலுக்குக் கேடு செய்பவைகள் மற்றும் யூக்லிப்டஸ் போன்று மண் வளத்தைக் கெடுப்பவைகள் போன்றவற்றை மட்டுமே நாம் அயல் தாவரங்களாக வரையறுக்க இயலும். பூர்வீகத் தாவரங்கள் என்கிற மரபணு ஆய்வில் இறங்க வேண்டாம்; மரபணு மாற்றப் பயிர்களும் நமக்கு வேண்டவே வேண்டாம்.      

    வேப்பமரம்,  ஆலமரம் ஆகியவற்றுடன் Umbrella tree ஐ சேர்த்துள்ளனர். நமக்கேன் வீண் வம்பு என்று தமிழில் பெயர்க்கும்போது விட்டுவிட்டனர். ‘குடை மரம்’ என்று அழைக்கப்படும் (Schefflera actinophylla) Araliaceae குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை வாழிடமாகக் கொண்டவை. இதை எப்படி பூர்வீகத் தாவரப்பட்டியலில் இணைத்தனர் என்பது நமக்கு விளங்கவில்லை? 

    ஒரு குறிப்பிட்ட மண்ணுக்கேற்ற உள்ளூர் தாவரங்களே விரைவாகவும் நன்றாக வளரும்; சூழலுக்கும் நலமாகவும் இருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘நர்சரி’ கொள்ளையர்களில் இருவகை உண்டு. ஒன்று  ‘நர்சரி’ பள்ளிகள்; மற்றொன்று அயல் தாவர வகைகளை ஏமாற்றி விற்கும் கூட்டம். இவர்கள் நம்மூர் மண்ணிற்கு ஒத்துவராத தாவரங்களை விற்றுப் பணமாக்குவர். 


   மேலும் இப்பாட இறுதியில் ‘சொற்களஞ்சியம்’ இப்படி இருக்கிறது.

பல்லுயிர் - பல்வேறு வகையான வாழ்க்கை வடிவங்கள் உயிர் உருப்பெருக்கம்  - உணவுச் சங்கிலியில் அடுத்தடுத்து அதிக அளவில் உயிரினத்தின் திசுக்களில் நச்சு இரசாயனம் போன்ற பொருட்களின் செறிவு  அதிகரிக்கும்.

காடழிப்பு - காடுகளை அகற்றுதல்

உள்ளூர் இனங்கள் - குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே காணப்படும் தாவரங்கள் மற்றும்  விலங்குகள் இனங்கள்

ஃப்ளோரா - ஆபத்தான உயிரினங்களைப் பற்றி பதிவு செய்தல்.

சிவப்பு தரவு புத்தகம் - ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் நிகழும் விலங்குகளின் வாழ்க்கை.

மக்கள் பல்லுயிர் பன்முகத்தன்மை பதிவு -  ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது கிராமத்தின் நிலப்பரப்பு மற்றும்  மக்கள்தொகை உள்ளிட்ட உள்நாட்டில் கிடைக்கக்கூடிய உயிர் வளங்கள் பற்றிய விரிவான உருவாக்கம் கொண்ட ஒரு  ஆவணமாகும். (பக்.124)

ஆங்கில வழியில் ‘GLOSSARY’ பின்வருமாறு உள்ளது.  

Biodiversity - Variety of life forms.

Bio magnification - Increasing concentration of substances such as toxic chemical in the tissues of  organism at successively higher level in a food chain.

Deforestation - Removal of forest.

Extinct species - Species which have disappeared completely from the earth.

Endangered species - A species of plant or animal that is in immediate danger of biological extinction.

Endemic species - Plants and animals species that are found only in a particular area.

Flora - Plant life occurring in a particular region.

Fauna - Animal life occurring in a particular region.

National Park - Protected area of land in which a typical ecosystem with all its wild plants and  animals are protected and preserved in natural surroundings. 

Reforestation - Replanting of trees. 

Red Data Book - Recording about endangered species.

Wildlife Sanctuary - Protected area of land, wetland or sea reserved for the conservation of wild  animals, birds and plants. (Page: 107)

     “ஒவ்வொரு ஆண்டும், மே 22  உலக பல்லுயிர் தினமாக கொண்டாடப்படுகிறது.  பல்லுயிர் என்பது பல்வேறு தாவரங்கள்,  விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள்,  நுண்ணுயிரிகள், பூச்சிகள், வாழ்விடங்கள்,  சுற்றுச்சூழல் அமைப்பு போன்றவற்றை விவரிக்கப் பயன்படும் சொல், இது நமது  பூமியை மிகவும் தனித்துவமாகவும்,  வசிகரமானதாகவும் ஆக்குகிறது”. (பக்.113)


   “Biodiversity is a term used  to describe the different plants, animals,  marine life, microorganisms, insects,  habitats, ecosystem etc. that make our  planet so unique and so fascinating”. (Page: 98)

   “பல்லுயிர் - பல்வேறு வகையான வாழ்க்கை வடிவங்கள் உயிர் உருப்பெருக்கம்  - உணவுச் சங்கிலியில் அடுத்தடுத்து அதிக அளவில் உயிரினத்தின் திசுக்களில் நச்சு இரசாயனம் போன்ற பொருட்களின் செறிவு  அதிகரிக்கும்”.

   என்ற பகுதியில் பல்லுயிர், உயிர் உருப்பெருக்கம்  ஆகிய சொற்களுக்கு விளக்கம் உள்ளதெனத் தேடிக் கண்டடைக.

   பல்லுயிர் - பல்வேறு வகையான வாழ்க்கை வடிவங்கள் – என்பது சரியாக இருக்காது. பல்வேறு வகையான உயிரினங்களின் தொகுப்பு; பல்லுயிர்ச் சூழல்; பூமி மனிதர்களுக்கு மட்டுமானது என்கிற மூடத்தனத்தைத் தகர்க்கும் வகையில்  Biodiversity விளக்கப்படுதல் அவசியம். பூமியெனும் உயிர்க்கோளம் பல்லுயிர் வாழும் கோளம்.  

‘காடழிப்பு - காடுகளை அகற்றுதல்’ என்பது சரியா? அகற்றுவது, நீக்குவது, மாற்றுவது (Removal)  என்பதெல்லாம் அழிப்பதற்கு (destroy) ஈடாகுமா?


‘Endangered Species’ எனும் பகுதியில்,

   “Our country is a home  for variety of species and  rich flora and fauna. Flora  is the plant life occurring in  a particular area. Fauna is  the animal life occurring in  a particular area”. (Page: 98)

ஃப்ளோரா - ஆபத்தான உயிரினங்களைப் பற்றி பதிவு செய்தல்.

சிவப்பு தரவு புத்தகம் - ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் நிகழும் விலங்குகளின் வாழ்க்கை.

   ஆகியவற்றை மாற்றி வைத்திருக்கிறார்கள். ‘கொண்டு கூட்டுப் பொருள் கொள் முறை’யில் இவற்றை அறிந்துத் தெளியலாம். தமிழுக்கு Flora  மட்டும்போதும்; Fauna தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டனர்.

“ஃப்ளோரா - ஆபத்தான உயிரினங்களைப் பற்றி பதிவு செய்தல்.

சிவப்பு தரவு புத்தகம் – ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் நிகழும் விலங்குகளின் வாழ்க்கை”.

   மேற்கண்ட இரண்டையும் இடம் மாற்றிப் பொருள் கொள்க. இடம் மாற்றினாலும் Flora விற்கு “ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் நிகழும் விலங்குகளின் வாழ்க்கை”, என்றுதான் இவர்கள் சொல்ல வருகிறார்கள். தாவரமா, விலங்கா என்ற குழப்பம்? அது என்ன ‘வாழ்க்கை’? சொல்லுக்கு சொல் மொழிபெயர்க்க வேண்டுமா? ஓரிடத்தில் வாழும் தாவரங்கள் (Flora), ஓரிடத்தில் வாழும் விலங்குகள் (Fauna) என்று சொன்னால் ஏதேனும் சட்ட சிக்கல் வருமோ?

    People’s Bio-diversity Register (PBR) என்பது  ‘மக்கள் பல்லுயிர் பன்முகத்தன்மை பதிவு’ அல்ல; பதிவேடு.  இம்மாதிரியான மொழிபெயர்ப்புக் குளறுபடிகள் தீரப்போவதில்லை. பாவம்! இதைப் படிக்கும் குழந்தைகள்!


(அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக