செவ்வாய், ஏப்ரல் 28, 2020

வானவில்லின் குரல்


வானவில்லின் குரல்

(நூலறிமுகம்… தொடர்: 015)

மு.சிவகுருநாதன்

(இரா. எட்வின் எழுதி,  சந்தியா பதிப்பக வெளியிட்ட, ’எப்படியும் சொல்லலாம்’ என்ற கவிதைத் தொகுப்பு குறித்த  பதிவு.)

   



     கவிஞர், எழுத்தாளர், இதழாளர், கல்வியாளர், கலை, இலக்கிய, சமூகச் செயல்பாட்டாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், ஆசிரியர், தலைமையாசிரியர் என்ற பன்முக ஆளுமை கொண்ட இரா. எட்வின் அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு  ’எப்படியும் சொல்லலாம்’ தலைப்பில்லாத 69 கவிதைகளைக் கொண்டது. 

   “விளிம்பு நிலை மக்களின் வாழ்வை வரலாற்றுக் குறிப்புகளாக்கி வரிகளின் மீது பெரியாரின் கருப்பையும் லெனின் சிவப்பையும் சேர்த்துப் பூசிச் செல்வதை… வாசிக்க மட்டுமல்ல; சமூக வாஞ்சையை சுவாசிக்கவும்தான்”, என்கிறார் முன்னுரையில் கவிஞர் அமிர்தம் சூர்யா.  (வெள்ளை அறிக்கை) 

“வேண்டாம் டான்சில் வரும்
வேண்டாம் பல்லில் சொத்தை விழும்
வேண்டாம் கொலஸ்ட்ரால் வரும்” 

   கையில் காசில்லை என்பது எப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது பாருங்கள்! (பக்.13)

   திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த கொடுமையின் அவமானம் தனி மனித அவமானமா? இல்லை இந்த சமூகத்திற்கே அவமானமில்லையா? 

“நான் மலம் தின்றால் மட்டுமே கிடைக்கும்
நீ மலம் தின்ற அவஸ்தை”, (பக்.18)

     இறந்தவனுக்கு மாலை போடணும்; விலை நூற்று ஐம்பது ரூபாய். பணம் எங்கும் புரட்ட முடியவில்லை. என்ன செய்வது? 

“போன மாசம் முப்பது ரூபாதான் மால
தாயோளி பயப் புள்ள
நாளைக்கு செத்திருக்கலாம்
இல்லாட்டி
போன மாசமே
போய் தொலஞ்சிருக்கலாம்”, (பக்.46)

    கடன் வாங்கி கட்டிய வீடு, நடுத்தர வர்க்க ஊசலாட்டம். மகன், மகள், மனைவி, நான் என சொந்தம் கொண்டாடினாலும் உண்மையில் அந்த வீடு,

“தொண்ணூறு விழுக்காடு
இன்னமும்
கனரா வங்கியின் வீடு”, (பக்.50)

   கடன் நடுத்தர வர்க்கத்திற்கு உடன் பிறந்தது. எனவே பல கவிதைகளில் கடனும் வட்டிக்காரனும் முன்னுக்கு நிற்கிறார்கள். 

“கடன் வாங்கி
ரொக்கத்திற்கு வாங்கிய
வீடு”, (பக்.79)

   உண்மையில் மனிதன்தான் கூண்டுகிளி. நாடு என்னும் சிறைகளில் அகப்பட்டவன். பறவைகளுக்கு தேசமேது? இந்த பூமிப்பந்தே அதன் தாய்வீடல்லவா! காக்கைக்கு இருக்கிற சுதந்திரம் மனிதருக்கில்லை, அய்யோ பாவம்! 

“காஷ்மீரில்
குச்சி பொறுக்கிய காகம்
கூடு கட்டும்
கராச்சியில்”, (பக்.68)

  ஆசிரியருக்கு எல்லாம் தெரிந்திருக்கலாம், அவருக்கு குழந்தைகள் வைத்த பட்டப்பெயரை, கமுக்கப் பெயரை அறியாமலிருந்து என்ன பயன்?

“என்ன தெரிந்து என்ன
வகுப்பறையில் பசங்க
எனக்கு
வைத்த பெயர் தெரியாமல்”, (பக்.24)

    அடித்தட்டு மக்களிடன்தான் இன்னும் மிச்சமிருக்கிறது அன்பு. அன்பிற்கு பொருள் ஒரு பொருட்டாக இருக்க முடியாது.

“பூமிப் பந்தின்
கடைசி மனிதனுக்கும்
தாராளமாய்
தருமளவில் இருக்கிறது
பத்து தேய்த்து ஜிவிக்குமென் அம்மாவின் நெஞ்சில்
ஈரம்”, (பக்.23)

   பகத்சிங் தூக்குமேடைக் கவிதை இவ்வாறு சொல்கிறது. 
“எங்களுக்கு
லெனின் மட்டும்
கிடைத்திருந்தால்
………….
தேச விடுதலையோடு
ஜனங்களின் விடுதலையும்
சேர்ந்தே வந்திருக்கும்”, (பக்.59&60)
 
      வெறும் தேச விடுதலை எதற்கு? மக்களின் உண்மை விடுதலையைப் பெற இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ! 

   இச்சிறு கவிதைத் தொகுப்பு பல்வேறு தரப்பினரின் சிக்கல்களையும் பாடுகளையும் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. இந்த வானவில்லின் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.  

நூல் விவரங்கள்:
எப்படியும் சொல்லலாம் (கவிதைத் தொகுப்பு)
இரா. எட்வின்
முதல் பதிப்பு:  2014
பக்கங்கள்: 80
விலை: 65

 வெளியீடு:
சந்தியா பதிப்பகம்,
77, 53 வது தெரு, 9 வது அவென்யூ,
அசோக்நகர்,
சென்னை – 600083.
பேச: 044 24896979
இணையம்:   www.sandhyapublications.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக