திங்கள், ஏப்ரல் 13, 2020

என்றும் தீராத சுவாசக்கோளாறு!


என்றும் தீராத சுவாசக்கோளாறு!

 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

மு.சிவகுருநாதன்

   (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 78) 

  
         கொரோனா’ வைரஸ் எனும் சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் கொடிய சூழலில் உலகம் சிக்கியிருக்கிறது. நமது கல்விப்புலத்திலும் பாடநூல்களிலும் வெளிப்படும் சுவாசக்கோளாறு மிக மோசமாக உள்ளது. இதை தொடர் எண் 71 இல் சுட்டிக்காட்டினோம். இப்போது நான்காம் வகுப்பு மூன்றாம் பருவ அறிவியலிருந்து சுவாசக் குழப்பத்தைக் காண்போம்.

    அலகு 3 ‘நாம் சுவாசிக்கும் காற்று’ என்பதாகும். தலைப்பே சிக்கலாக உள்ளது. ‘நாம்’ என்பது தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை உள்ளடக்காதுதானே!  ‘உயிரினங்கள் சுவாசிக்கும் காற்று’ அல்லது வெறுமனே ‘காற்று’ என்றே தலைப்பிட்டிருக்கலாம். தலைப்பில் என்ன? இருந்துவிட்டு போகட்டுமே என்கிறீர்களா? உள்ளேயும் குழப்பம் மிகுவதைத்தான் நாம் ‘சுவாசக்கோளாறு’ என்று கூற வேண்டியுள்ளது. பாட இறுதி வினாக்களிலும்,

“கோடிட்ட இடங்களை நிரப்புக”,

 “3. நாம் ___________ வாயுவை உள்ளிழுக்கிறோம்”, (பக்.97) என்று கேட்டு “நாம் ஆக்சிஜன் வாயுவை உள்ளிழுக்கிறோம்”, என்று எழுத வைக்கிறார்கள். இது சரிதானே, என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம், இதன் பொருள் பாடநூலில் கையாளப்படுவதை கொஞ்சம் பார்த்துவிடலாம்.

‘அன்றாட வாழ்வில் காற்றின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில்,

1. காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் சுவாசத்திற்கு தேவைப்படுகிறது. (பக்.88) என்பது சொல்லப்படுகிறது.

‘காற்று ஒரு கலவை’ என்ற பகுதியில்,

    “நாம் சுவாசிக்கும் காற்று பல வாயுக்களின்  கலவையாக உள்ளது. மேலும், திட மற்றும்  திரவ துகள்களும் காற்றில் உள்ளன. காற்றில்  ஆக்ஸிஜன், நைட்ரஜன் போன்ற வாயுக்களும்  நீராவியும் உள்ளன. இந்த வாயுக்களைத் தவிர,  அதில் தூசியும் புகையும் கலந்துள்ளன.

   காற்று  அதில் இருக்கும் அனைத்து வாயுக்களின்  பண்புகளையும் காட்டுகிறது.

எ.கா: காற்றிலுள்ள ஆக்ஸிஜன் எரிதலுக்கு  துணைபுரிகிறது. விறகைப் பயன்படுத்தி  சமைக்கும்போது, நாம் ஊதும் காற்று எரிக்க  உதவுகிறது”  (பக்.89)

    இங்கும் “நாம் சுவாசிக்கும் காற்று”தான்.  காற்றில் கார்பன் டை  ஆக்சைடு இருப்பதாகவே சொல்லப்படவில்லை. இது ஏனென்று தெரியவில்லை? 


   அடுத்த பக்கத்தில்தான்,


       “காற்றின் உள்ள வாயுக்களின் அளவானது இடத்திற்கு இடம் மாறுபடும். காற்று ஒரு தனிமம்  அன்று. அது வெவ்வேறு கூறுகளாலானது. 

    நைட்ரஜன் வாயு (78%) கார்பன் டை  ஆக்சைடு (0.03%) ஆர்கான்  மற்றும் பிற வாயு (0.07%) ஆக்ஸிஜன் வாயு (21%)”, (பக்.90) என்று கார்பன் டை  ஆக்சைடின் இருப்பு சொல்லப்படுகிறது.  தொடர்ந்து பாடம் பின்வருமாறு செல்கிறது.

   “ஆக்ஸிஜன் காற்றில் உள்ள வாயுக்களில் ஆக்ஸிஜன் மிக  முக்கியமானதாகும். இது காற்றில் சுமார் 21% உள்ளது. அனைத்து  உயிரினங்களும் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது.

ஆக்ஸிஜனின் பயன்கள்

1. அனைத்து உயிரினங்களும் சுவாசிக்க ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகின்றன.

கார்பன் டைஆக்சைடு

   காற்றில் கார்பன் கார்பன் டைஆக்சைடு  0.03% அளவு மட்டுமே  உள்ளது. இது குறைவாக இருந்தாலும், அதன் பயன்பாடுகள்  மிக அதிகம்.

கார்பன் டைஆக்சைடு  பயன்கள்

1.   ஒளிச்சேர்க்கையில் பயன்படுகிறது”.  (பக்.92)

   “காற்றில் நீராவியின் அளவு சுற்றுச்சூழலுக்கேற்ப மாறுபடும். நாம் சுவாசிக்கும்போது, காற்றிலிருந்து  ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராவியை வெளியே விடுகின்றோம்”, (பக்.90)


   இங்கு அனைத்து உயிரினங்கள் ஆக்சிஜனை சுவாசிப்பது சொல்லப்படுகிறது. “ஒளிச்சேர்க்கையில் பயன்படுகிறது”, மட்டும் சொல்லி எவை ஒளிச்சேர்க்கை செய்கின்றன என்று விலக்குவதில்லை.   

   ‘முயல்வோம்’ என்ற தலைப்பில், ‘பின்வருவனவற்றை வகைப்படுத்துக’, என்று  ‘ஆக்ஸிஜனைக் கொடுப்பவை / கார்பன் டை ஆக்சைடை வழங்குபவை’ எனப் பிரிக்கச் சொல்கிறது.

   “நாய், பூனை, தென்னை மரம், குரங்கு, கத்திரிக்காய் செடி, பப்பாளி செடி” ஆகியன பட்டியலில் உள்ளன. இந்த ஆறில் உள்ள ‘நாய், பூனை, குரங்கு’ மூன்று விலங்குகளை ‘கார்பன் டை ஆக்சைடை வழங்குபவை’ என்றும் ‘தென்னை மரம், கத்திரிக்காய் செடி, பப்பாளி செடி’ ஆகிய மூன்று தாவரங்களையும் ‘ஆக்ஸிஜனைக் கொடுப்பவை’ என்று வகைப்படுத்த பாடநூல் சொல்கிறது. இது புதிராகவல்லவா இருக்கிறது.

    ‘நாய், பூனை, குரங்கு’ போன்ற விலங்குகளும்  என்றும் ‘தென்னை மரம், கத்திரிக்காய் செடி, பப்பாளி செடி’ போன்ற தாவரங்களும்  கார்பன் டை ஆக்சைடை வழங்குபவைதானே. சுவாசத்தின்போது ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்பட்டால்  கார்பன் டை ஆக்சைடு வெளியிட்டுத்தானே ஆகவேண்டும்? ‘கார்பன் டை ஆக்சைடை வழங்குபவை’ பட்டியலில் ஆறும் இடம் பெறவேண்டும்.

     மனிதன் உள்ளிட்ட விலங்குகள், தாவரங்கள் சுவாசத்தின்போது கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். தாவரங்கள் மட்டும்  ஒளிச்சேர்க்கையின்போது (உணவு / ஸ்டார்ச் தயாரித்தல்) ஆக்சிஜனை வெளியிடும். இதனால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது. எனவேதான் மரங்களை மிகுதியாக வளர்க்க வேண்டும் என்கிற விளக்கம் பாடநூலில் தேடியும் கிடைக்கவில்லை.

    இப்பாடப்பகுதிகளைப் படிக்கும் குழந்தைகள் கட்டாயம் குழம்பி போவார்கள். விலங்குகள் ஆக்சிஜனை சுவாசிக்கும்; தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கும் என்கிற எளிய சமன்பாட்டிற்கு வந்துவிடுவார்கள். இதுதான் பெரும்பாலும் நடக்கிறது.

    “ஒர் வளர்ந்த மரமானது ஒரு நபரால் வெளியேற்றப்படும் மூன்றில் ஒரு பங்கு (1/3)  கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொள்கிறது. மேலும், இது ஒரு நபருக்குத் தேவையான  அளவு ஆக்ஸிஜனை அளிக்கிறது. எனவே, ஒரு மனிதன் உயிர்வாழத் தேவையான  ஆக்ஸிஜனை பெறுவதற்கு மூன்று மரங்கள் தேவை”. (பக்.93)

   இந்தத் தாவரங்களுக்கும் ஆக்சிஜன் தேவையென்பதை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள். ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் வெளியிடும் ஆக்சிஜன் பிற விலங்குகளுக்கும் தங்களுக்கும் சுவாசிக்க உதவுகிறது என்பதை குழந்தைகளிடம் விதைக்க வேண்டாமா?

    ‘காற்று மாசுபாடு’ என்ற தலைப்பில் உள்ளவை.

    “வளிமண்டல சமநிலையானது மனிதனின் செயல்களால் சீர்குலைக்கப்படுகிறது. இதனால்  சுற்றுச்சூழலின் முக்கிய பிரச்சனைகளான காற்று மாசுபடுதலும், புவி வெப்பமடைதலும் நிகழ்கிறது.  காற்று புகைக்கரி, வாகனங்கள் வெளியேற்றப்படும் புகை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து  வரும் பிறதுகள்கள் போன்றவற்றை கொண்டு செல்கிறது. இவை காற்று மாசுபாட்டிற்கு முக்கிய  காரணங்களாகும்”. (பக்.93)

    ‘காற்று மாசுபடுவதால் ஏற்படும் விளைவுகளில்’, ‘உலக  வெப்பமயமாதல்’, பற்றியும் பாடநூலில்

   “இது உலகின் வெவ்வேறு பகுதிகளின்  காலநிலைகளை மாற்றுகிறது. இது விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில்  பாதிப்பு ஏற்படுத்துகிறது. பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் கடல் நீர்  மட்டம் உயர்தல் ஆகியவை புவி  வெப்பமடைதலின் முக்கிய விளைவுகளாகும்”. (பக்.94)

    மேலே சொல்லப்பட்ட காற்று மாசுபாடு, புவி வெப்பமடைதல் ஆகிய எவற்றிலும் கார்பன் டை ஆக்சைடின் பங்கு பற்றி எவ்விதக் குறிப்புகளும் இல்லை. இதுவும் குழந்தைகளைக் குழப்பும்.  

‘காற்று மாசுபாட்டை குறைக்கும் வழிமுறைகளில்’,

  “4. கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதற்கு அதிகமான மரங்களை நட வேண்டும்”. (பக்.96) என்று சொல்லப்படுகிறது. தாவரங்களில் கார்பன் டை ஆக்சைடு உதவியால் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது என்று விளக்கமாகச் சொல்லக்கூட நம் பாடநூல் அவகாசம் எடுத்துக்கொள்வதில்லை.

   விலங்குகள், தாவரங்கள் ஆகியன எவற்றைச் சுவாசிக்கும் என்கிற குழப்பம் குழந்தைகளிடம் நீடிக்கும் நிலையில், உயிரினங்கள் அனைத்தும் ஆக்சிஜனை சுவாசிக்கும்; கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். இவ்வாறு வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்சைடுடன் நீர், பச்சையம், சூரிய ஒளி ஆகியவற்றைக் கொண்டு தாவரங்கள் மட்டும் ஒளிச்சேர்க்கை எனும் உணவு (ஸ்டார்ச்) தயாரித்தலில் ஈடுபடும் என்பதைக் குழந்தைகளிடம் தெளிவாகக் கொண்டுச் சேர்க்கப் பாடநூல் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

   கொசுறாக, இதை கொஞ்சம் பொருத்திக் காட்டுங்களேன்.

“IV. பொருத்துக.

 1. நைட்ரஜன் - காற்று மாசுபாடு
 2. பலூன் - புகை மற்றும் மூடுபனி
 3. புகை - 78%
 4. நுரையீரல் புற்றுநோய் – காற்று”, (பக்.97)  

 (அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக