வெள்ளி, ஏப்ரல் 17, 2020

கல்விக்கூட நிறுவனத்திடமிருந்து விடுபட முடியுமா?


கல்விக்கூட நிறுவனத்திடமிருந்து விடுபட முடியுமா?  

(நூலறிமுகம்தொடர்: 004)

மு.சிவகுருநாதன்

(எதிர் வெளியீடாக ஜனவரி 2020 இல் வெளியான, இவான் இல்லிச்சின்  ‘கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்’ என்ற மொழிபெயர்ப்பு நூல் பற்றிய  பதிவு.)


     1960 களின் தொடக்கத்தில் உலகெங்கிலும் ஜனநாயக எழுச்சிகளும் மாணவர் கிளர்ச்சிகளும் தோன்றியதும் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட கோட்பாட்டு ரீதியான புத்தெழுச்சிகளின் வெளிப்பாடாக பாவ்லோ ஃப்ரைய்ரே, இவான் இல்லிச் போன்ற மாற்றுக் கல்விச் செயல்பாட்டாளர்களின் சிந்தனைகளை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பார் பேரா. அ.மார்க்ஸ். 

    தமிழ் மற்றும் இந்தியச்சூழலில் பாவ்லோ ஃப்ரைய்ரே விவாதிக்கப்பட அளவிற்கு இவான் இல்லிச் பேசப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்த மாற்றுக் கல்விச் சிந்தனையாளர்களுக்குள்ளும் கருத்தியல் வேறுபாடுகள் உண்டு என்பதையும் நாம் நினைவில் கொள்ளுதல் அவசியம்.

   மேலும் இங்கு மாற்றுக்கல்வி வெறும் கருத்தியல் ரீதியான விவாதங்கள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டன. நடைமுறையில் அவற்றை ஒரு அளவிற்கு மேல் கொண்டுசெல்ல இயலாது என்பதும் உண்மையே. அடிப்படைகள் எதனையும் மாற்றாமல் சில கற்பித்தல் உத்திகளையும் ஆசிரியரது அணுகுமுறைகளும் மாறினால் அது மாற்றுக் கல்வி எனக் கற்பிதம் செய்யப்பட்டதுண்டு. மேலும் மாற்றுக் கல்வியென்று பழங்கல்வியைத் திணிப்பதும் வீட்டுப் பள்ளிகள் (Home Schooling) என்று பேசுவதும் ஒருபுறம் நடக்கவே செய்கிறது. இதன் அபத்தங்களையும் இதிலுள்ள வன்முறைகளையும் இனங்காண வேண்டியதும் அவசியம்.  

   1971 இல் இவான் இல்லிச் (Ivan Illich) எழுதிய  கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம் (Deschooling Society) எனும் நூலில் 7 அத்தியாயங்கள் உள்ளன. அவை:


  1.  நாம் ஏன் கல்விக்கூடத்தை நிறுவன அமைப்பிலிருந்து அகற்ற வேண்டும் (Why we must disestablish school?)
  2. கல்விக்கூடத்தின் புறத்தோற்றவியல் (Phenomenology of school)
  3. முன்னேற்றத்தைச் சடங்குகளுக்கு உட்படுத்துதல்  (Ritualization of progress)
  4.  நிறுவன நிறமாலை (Institutional spectrum)
  5. அறிவுக்கொவ்வாத முரண்பாடின்மை (Irrational consistencies)
  6. கற்றல் வலைப்பின்னல்கள் (Learning Webs)
  7.  எபிமீத்திய மனிதனின் மறுபிறப்பு (Rebirth of Epimethean Man)


     தென் அமெரிக்காவில் ஏழை மக்களிடம் சேவையாற்றிய பாதிரியாரான இவான் இல்லிச் 1970 களில் முன்வைத்த மாற்றுச் சிந்தனைகள் எந்த அளவிற்கு இன்றைய உலக மற்றும் இந்தியச் சூழலுக்குப் பொருந்தும் மற்றும் பொருந்தாத் தன்மைகளையும் இருப்பதைக் காணலாம். இத்துடன் 1991 க்கு பிறகான உலகமயச் சூழல் கல்வி உள்ளிட்ட அனைத்தையும் மாற்றியமைத்திருப்பதையும் நாம் கவனிக்காதிருக்க இயலாது. 

    குடும்பம், அரசு, ராணுவம், பள்ளி போன்றவை அனைத்துவித ஒடுக்குமுறை அமைப்புகளாகவே நிலவி வருகின்றன. இவற்றை மாற்றியமைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளது. இதிலிருந்து வெளியேறுதல் அல்லது தப்பித்தோடுதல் ஒன்றே தீர்வாக இருக்கக்கூடியச் சூழலும் உள்ளது. இதன் தீவிரத்தை பின்வரும் வரிகள் உணர்த்தும்.

  “இராணுவ நிறுவனம் அபத்தமானது என்பது வெளிப்படை. ஆனால் பிற நிறுவனங்களின் அபத்தத்தைக் கண்டுபிடிப்பது கடினம். ஏனென்றால் அது மறைவானது ஆனால் பயங்கரமானது. அணுஆயுத அழிவைத் தடுக்க வேண்டும் என்றால் எந்தப் பொத்தானை அழுத்தக் கூடாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் சுற்றுச்சூழல் அழிவை எந்தப் பொத்தானும் தடுக்க முடியாது”, (பக். 144)

   “கல்விக்கூடம் நமக்குள் ஓர் ஆழமான அச்சத்தை விதைத்துள்ளது. இந்த அச்சம் குற்றம் காண்பதிலேயே இருக்கிறது”, (பக்.33) இவான் இல்லிச். “பிரேசில் நாட்டு ஆசிரியர் பாலோ ஃப்ரையர் இதனை அனுபவத்தின் மூலம் அறிந்திருந்தார். வயதுவந்த ஒருவர் அவருடைய முதல் வார்த்தைகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அல்லது பொருள்தரக் கூடியதாக இருந்தால் அவர் நாற்பது மணி நேரத்தில் வாசிக்கத் தொடங்கி விடுவார் என்று அவர் கண்டுபிடித்தார்”, (பக்.33)

 “1962 ஆம் ஆண்டு எனது நண்பர் ஃப்ரையர் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு துரத்தப்பட்டுக் கொண்டிருந்தார். காரணம் என்னவென்றால் அவர் கல்வியாளர்கள் முன்னரே தேர்ந்தெடுத்த சொற்களைக் கொண்டு பாடம் நடத்த மறுத்து, அவருடைய மாணவர்கள் கொண்டு வந்த சொற்களை வைத்தே பாடம் நடத்தினார் என்பதுதான்”, (பக்.34) என்று தனது நண்பர் பாவ்லோ ஃப்ரைய்ரேவை மதிப்பிடுகிறார். 

     “வரலாற்றில் கிறித்தவத் திருச்சபைக்கு மூன்று பணிகள் இருந்து வந்திருக்கின்றன. அவற்றை இப்போது கல்வி அமைப்பு நிறைவேற்றுகிறது. அது சமுதாயத்தின் கட்டுக்கதைகளின் (Myth) இருப்பிடம். தொன்மைக்கதையின் முரண்பாடுகளை நிறுவனமாக்குகிறது. தொன்மைக் கதைக்கும் உண்மை நிலைக்கும் உள்ள வேறுபாடுகளைத் திரை போட்டு மறைக்கிறது”, (பக்.57)

   இங்கு திருச்சபையின் பணியை மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் அரச நிறுவனங்கள் செய்து முடிக்கின்றன. நமது பாடத்திட்டங்கள், கலைத்திட்டங்கள் அனைத்திலும் பாரம்பரியச் சுமையேற்றப்பட்டுள்ளதைக் காணலாம். ஆனால், அது இந்தியா பன்மைத் தன்மையை வெளிபடுத்துவதாக இல்லை. 

   “கல்விக்கூடம் பாடத்திட்டத்தை விற்கிறது. பாடத்திட்டம் என்பது மற்ற விற்பனைப் பொருட்களை போன்ற தயாரிப்பு முறைகளும் கட்டமைப்பும் உள்ள பொருட்களின் சிப்பம். பல பள்ளிகளில் பாடத்திட்டம் தயாரிப்பது அறிவியல்பூர்வமான  ஆராய்ச்சிப்படி தொடங்குவதாகச் சொல்லிக் கொள்வார்கள்”,  (பக்.61) இம்மாதிரியான சிப்பங்களின் அறிவையும் அனைத்து விழுமியங்களையும் ஒன்றாக அடைத்து வழங்கிவிடலாம் என்பது கட்டுக்கதை என்கிறார். 

     வயதினடிப்படையில் திரட்டப்பட்டக் குழந்தைகள், இவர்களை முறைப்படுத்த பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள், கட்டாயப் பாடத்திட்டம் மற்றும் கட்டாய வருகைப்பதிவு என  நிறுவனமயமான பள்ளி தனது அதிகாரத்தையும் மேலாண்மையையும் மீண்டும் நிறுவிக்கொள்கிறது. 

   “கல்வித் துறையில் முன்னெடுப்பவர்கள் தாங்கள் தொகுக்கும் பாட நிரல்களை நீர் ஊற்றும் கருவிகளாக இன்னும் கருதிக் கொண்டிருக்கிறார்கள்”, (பக். 99) 1970 களில் உலக அளவில் வைக்கப்பட்ட விமர்சனம் இன்றும் நமக்குப் பொருந்துவதாக இருப்பது கல்வியின் அவலத்தைச் சுட்டுவதாகும்.

    கல்விமுறை அதன் கெட்டித்தட்டிப்போன மதிப்பீடுகளால் மத நிறுவனத்திற்கு ஈடாக வளர்ந்துள்ளது. அது தனியார் தொழிற்சந்தையாக மாற்றப்பட்டுள்ள அவலம் இன்று பேருருவாய் நிற்கிறது. 

   “கல்விக்கூடம் புதிய உலகச் சமயம் மட்டுமல்ல. அது மிகவும் வேகமாக வளரும் தொழிற்சந்தை. நுகர்வோரைத் தூண்டிவிடுதல்  பொருளாதாரத்தின் முதன்மை வளர்ச்சியாக ஆகிவிட்டது”, (பக். 68)

   “கல்விக்கூடங்களை மாறிகள் அல்லது மாறக்கூடியவை என்று கொளவது ஒரு மாயை ஆகும்”, (பக். 105) என்று சொல்வதிலிருந்து நமது கல்வியமைப்பையும் புரிந்துகொள்ள இயலும்.  

   “இந்த நேரத்தில்தான் சீனாவின் முன்மாதிரி முதன்மை பெறுகிறது. மூவாயிரம் ஆண்டுகளாகச் சீனாவில் கற்றல் முறைக்கும் தேர்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதன் மூலம் உயர்கல்வி காக்கப்பட்டு வந்திருக்கிறது”, (பக். 105) எனினும் உலக வல்லரசாக பன்னாட்டுக் கல்வியை ஏற்ற சீனாவில் மாவோவின் பண்பாட்டுப் புரட்சியின் வெற்றியை காலம்தான் சொல்ல வேண்டும் என்று கணிக்கிறார். 


  • கல்விப் பொருள்களின் பார்வைக்குறிப்பு
  • திறன் பரிமாற்றங்கள்
  • உடனொத்தோரை இணையாக்கல்
  • பொதுவான கல்வியாளர்கள் பற்றிய பார்வைக் குறிப்புச் சேவைகள் 


     என நான்கையும்  மாணவர்கள் கல்வி வளத்தைப் பெறும் மாற்று அணுகுமுறையாக இவான் இல்லிச் குறிப்பிடுகிறார். (பக்.110 & 111)

   “குரு-சீடன் உறவு அறிவுக்கட்டுப்பாட்டுக்கு மட்டும் உரியது இல்லை” (பக். 133) “உண்மையான குரு-சீடன்  உறவு என்பதன் தன்மை அதனுடைஅய் விலைமதிப்பற்ற பண்புதான். அரிஸ்டாட்டில் அதனை ஒழுக்கநெறி சார்ந்த நட்பு என்று அழைக்கிறார்”, (பக். 134) இதுவும் நமது சூழலில் மோசமான ஒன்றாக இருக்க இயலும். புராண மரபுகளை முன்வைப்பதும் சிக்கலான ஒன்றுதான். 


  • கல்வி விழுமியங்களில் உள்ள சில மனிதர்களின் ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாட்டை நீக்குதல்
  • திறன்களைப் பகிரும் உரிமைப்பெறவும், கேட்பவர்களுக்கு கற்பிக்கவும், பயிற்சி தரவும் சுதந்திரம்.
  • படைப்பாற்றல் வளங்களை விடுவித்தல்.
  • நிறுவப்பட்ட தொழில் மற்றும் சேவைக்குத் தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ளும் கட்டாயத்திலிருந்து விடுதலை (பக்.136 & 137)

  
    ஆகிய நான்கையும் கல்விப்புரட்சியின் இலக்குகளாக வரையறுக்கிறார் இவான். சுமார் 50 ஆண்டுகள் கடந்த பின்னும் சூழல்கள் பெரிதும் மாறிவிடவில்லை என்பதையும் இன்றுள்ள புதிய சூழல் கல்வி உள்ளிட்ட அனைத்தையும் இப்புரட்சிக்கு எதிர்திசையில் இட்டுச்சென்றுள்ளது என்பதையும் அறிந்து வருத்தமடைவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

நூல் விவரங்கள்:

கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்
இவான் இல்லிச்
(தமிழில்) ச. வின்சென்ட்

முதல் பதிப்பு: ஜனவரி 2020
பக்கம்: 152
விலை: 150

வெளியீடு:
எதிர் வெளியீடு,
96, நீயூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642002.
பேச: 04259 226012  9942511302
இணையம்:  ethirveliyedu.in
மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக