திங்கள், ஏப்ரல் 20, 2020

50 ஆண்டு நினைவுகளில் வெண்மணிப் படுகொலையும் அதன் அரசியலும்

50 ஆண்டு நினைவுகளில்  வெண்மணிப் படுகொலையும் அதன் அரசியலும்
 
 (நூலறிமுகம்… தொடர்: 007)

மு.சிவகுருநாதன்

(அன்னம் வெளியீடாக வந்துள்ள செ. சண்முகசுந்தரம் எழுதிய அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு – கீழ்வெண்மணிக் குறிப்புகள்’ என்ற வெண்மணிப் படுகொலை குறித்த கட்டுரைத் தொகுப்பு நூல் குறித்த பதிவு.)


     1968 இல் அரங்கேறிய கீழ்வெண்மணிப் படுகொலை 50 ஆண்டு நினைவில் எழுதப்பட்ட இந்நூல் கீழ்வெண்மணி நிலம், களம், வதம் என்ற பகுப்புகளில் சில குறிப்புகளை வழங்குகிறது. இதுவரையிலான வெண்மணி நூல்களுடன் கூடுதலான பார்வைகளையும் நமக்கு வழங்குகிறது. 

    இந்திய நிலவுடைமையின் வரலாறு, விடுதலைக்குப் பிந்தைய பண்ணையார்களின் உருவாக்கம், பிற்காலச் சோழர்கள் காலந்தொடங்கி நிகழ்ந்த விவசாயிகளின் கிளர்ச்சிகள் என முதல் பகுப்பான ‘நிலத்தில்’ பேசப்படுகிறது.

     அடுத்தப் பகுப்பான ‘களத்தில்’ கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டிய பி.எஸ்.ஆர். என அன்போடு அழைக்கப்பட்ட பி.எஸ். சீனிவாசராவ், கீழ்வெண்மணியில் செங்கொடி இயக்கம் வளர்ந்த கதை, பெரியார் குறித்த அவதூறுகள், ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் – ஓய்வறியா இயக்கம் ஆகிய கட்டுரையில் உள்ளன. ஏஜிகே குறித்த கட்டுரை மூன்றாகவதாக இடம் பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. பெரியார் குறித்த அவதூறுகள் பிற்காலத்திய நிலவரம். பிற்சேர்க்கையாக அல்லாமல் வரலாற்றுப் போக்கில் ஏஜிகே இடம்பெறுவதே சரியாக இருக்கும். கீழ்வெண்மணிக்கான பெரியாரின் இரு எதிர்வினைகளும் நூலில் இடம்பெறுகின்றன. 

     பசு.கவுதமன் நூலுக்கு (ஏ.ஜி. கஸ்தூர்ரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்) முன்னதாக வெளியான கீழ்வெண்மணி குறித்த பெரும்பாலான பதிவுகளில் நிராகரிக்கப்பட்ட ஒரு பெயர் ஏஜிகே என்பதையும் இந்நூல் பதிவு செய்வதோடு ஏஜிகே குறித்த கட்டுரையொன்றும் இடம்பெறுவது சிறப்பு. இதற்கான 50 ஆண்டு கால இடைவெளி தேவைப்பட்டிருக்கிறது. சமகால வரலாற்றிலே இவ்வளவு சிக்கலென்றால் பழங்கால வரலாறு எப்படியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? வரலாற்றை மீளாய்வு செய்யவேண்டிய தேவைகளை இவை நமக்கு உணர்த்திச் செல்கின்றன. 

   மூன்றாம் பகுப்பில் கீழ்வெண்மணியின் இலக்கிய ஆக்கங்கள் குறிப்பாக நான்கு நாவல்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. வெண்மணி பற்றிய கவிதைகள் ஏராளம். அவற்றை யாரும் இதுவரை தொகுத்ததாகத் தெரியவில்லை. 

     இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’, சோலை சுந்தரபெருமாளின் ‘செந்நெல்’ ஆகிய இரு வெண்மணி நாவல்களில் ‘திரிபும் புனைவும்’ முதல் கட்டுரையில் சுட்டப்படுகின்றன. அடுத்து மீனா கந்தசாமி ஆங்கிலத்தில் (The Gypsy Goddess) எழுதி பிரேம் மொழிபெயர்த்த ‘குறத்தியம்மன்’ எனும் நாவலைப் பற்றிப் பேசுகிறது. அதன்பிறகு பாட்டாளி எழுதிய ‘கீழைத்தீ’ நாவலை ‘வாசுகி சிரித்தாள்’ கட்டுரையில் விவரிக்கப்படுகிறது. ‘புத்தர் சிரித்த’ கதை அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த வாசுகி சிரித்த கதையையும் உலகமறியச் செய்யவேண்டுமல்லவா! வெண்மணியில் படுகொலை செய்யப்பட்ட 44 பேரில் மிகவும் சிறிய குழந்தையே வாசுகி (3 வயது).  இங்கும் ‘குறத்தியம்மனுக்கு’ முன்னதாக ‘கீழைத்தீ’யை வைத்திருக்கலாம். இந்த வைப்புமுறைக்கு ஏதேனும் காரணமுண்டா என்பது தெரியவில்லை. 

    இறுதியாக ஆசிரியர் குறிப்பிட்ட இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயடு அழித்தொழிப்பு பற்றிய புனைவுக் கட்டுரை ‘வதம்’ இடம்பிடிக்கிறது. கீழ்வெண்மணி பற்றிய பதிவுகளில் இந்நூலுக்கு தனியிடம் உண்டு என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். விரிவஞ்சிய சுருக்கமானக்  குறிப்பாகவும் இவற்றைக்  கொள்ளலாம். 

   இறுதியாக ஒன்று:

      “பொற்கால சோழர்கள் ஆட்சியில் வரிச்சுமைப் பற்றிக் குறிப்பிடும்போது, “முதலாம் குலோத்துங்கன் காலத்தில் (1070-1120) பசுக்களுக்கும், எருதுகளுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது”, (பக்.35) பசு, எருதுகளுக்கான வரிகள் (நல்லா, நல்லெருது) வசூலிக்கப்பட்டது  உண்மைதான். இவர் சுங்க வரியை (உல்கு) விலக்கியதால் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என அழைக்கப்பட்டார். தமது ஆட்சிக்காலத்தில் இருமுறை நிலங்களை அளந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு (1/6) வசூலித்தார். இதுதான் குறைவான வரி என்று சொல்லப்படுகிறது. முன்பு மூன்றில் ஒரு பங்கு (1/3) இருந்தது. இதனால் அவர் சிறந்த அரசர் என்று சொல்ல வரவில்லை. மக்கள் கலக்கமடைந்த பல்வேறு வரிகள் இருக்கும்போது பசுவுக்கு வரி விதித்தால் நமது வரலாற்று ஆசிரியர்கள் சித்தம் கலங்கினர் போலும்!

    பொதுவாகப் பொற்காலப் பெருமை பேசுவோர் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் காலப்பெருமைகளைத் தான் விதந்தோதுவர். குலோத்துங்கன் தெலுங்கு சாளுக்கிய மரபினன் என்பதால் குறைகளை அவன் மீது அவன் பின்னோர்கள் மீது சுமத்துவது வாடிக்கை. வெண்மணி ஆய்வு நூலும் அவ்வாறு அமைந்துவிடக்கூடாதல்லவா!
 
   சோழர்கள் கால ‘பொற்கால’ ஆட்சியில் 400 க்கும் மேற்பட்ட வரிகள் மற்றும் கட்டணங்கள் இருந்ததாகச் சொல்லபடுகிறது. 

   பிற்கால சோழ அரசர்கள் பல பெண்களை மணந்தனர்; தேவதாசிகள் வேறு. ஆனால் ஒரு பெண்ணையோ ஆணையோ மணக்கும் மக்களுக்கு திருமண வரி (கண்ணாலக் காணம்) விதித்தனர். 

   இந்நூலில் வெட்டிவேலை பற்றிய குறிப்பு உள்ளது. (பக்.63) வேளாண்மைக்கு வரி விதிப்பதில்கூட பொருளுண்டு. பிணம் புதைத்தல்/எரித்தல், துணி வெளுத்தல், கழிவுகளை அகற்றுதல்/சுத்தம் செய்தல், முடி திருத்துதல் ஆகிய ‘வெட்டி’ வேலைகளுக்கு உணவு, பழந்துணிகள், பொருள்கள், தானியங்கள் போன்றவையே வழங்கப்பட்டன. இத்தகைய பணிகளைச் செய்யும் மக்களுக்குக் கூட வரிவிதித்தக் கொடுமையையும் காணலாம். (வண்ணாரப் பாறை - வண்ணார் பயன்படுத்திய பாறைக்கு வரி)

   வேளாண்மையில் ஊடு பயிர் சாகுபடி செய்யவும் வரி (ஊடுபோக்கு) வசூலானது. சாமன்ய மக்கள் வளர்க்கும் ஆட்டிற்கு வரி (ஆட்டுக்கிறை) போடப்பட்டது. இது மட்டுமல்ல நீருக்கு வரி விதித்தவர்கள் பிற்காலச் சோழர்கள்; இதற்கு வேண்டுமானால் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நீர்க்கூலி (தண்ணீர் வரி), ஊர்க்கழஞ்சு (ஊரின் பொதுவான ஓடைக்கு வரி), வட்டி நாழி (நீர்ப் பாய்ச்ச கழனி வரி நாழிக்கணக்கில்) ஆகியன இவர்களின் தண்ணீர் வரிகளில் சில. 

     திருவிதாங்கூர் சமஸ்தானத்தைப் போன்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலை இறை’ (தலை வரி) ஆண்களின் மீசைக்கு வரி, பெண்களின் முலைகளுக்கு வரி, வளைந்த கைப்பிடிக் குடைக்கு வரி, தாலி வரி என்று என்று வரிகள் இல்லாததற்காக கொஞ்சம் ஆறுதலடையலாம். 

     கீழ்வெண்மணிப் படுகொலை மற்றும் அதன் சித்தரிப்பிற்குள் ஊடாடும் அரசியலை மட்டுமல்ல; ‘பசு வரி’ அரசியலையும் நாம் தவறவிடலாகாது.

நூல் விவரங்கள்:

அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு – கீழ்வெண்மணிக் குறிப்புகள்  
செ. சண்முகசுந்தரம்

முதல் பதிப்பு: டிசம்பர் 2018
பக்கம்: 192
விலை: 150

வெளியீடு:
அன்னம்

தொடர்பு முகவரி:

அன்னம்
மனை எண் 01,
நிர்மலா நகர்,
தஞ்சாவூர் – 613007.

மின்னஞ்சல்:  annamakaram@gmail.com 
அலைபேசி: 7598306030

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக