திங்கள், ஏப்ரல் 06, 2020

பாடநூல்கள் உருவாக்கத்தில் ஒருங்கிணைப்பின்மை


பாடநூல்கள் உருவாக்கத்தில் ஒருங்கிணைப்பின்மை 


 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)

 மு.சிவகுருநாதன்

   (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 72) 

  
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை:

      எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவ அறிவியல் பாடநூலின் ‘தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு’ பாடத்தில்  மட்டுமே எண்ணற்ற அபத்தங்கள் உள்ளன. அறிவியல் ஆசிரியர்களுக்கு இது ஒரு பொருட்டாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் நமது கல்விமுறை அப்படி! பத்தாம் வகுப்பாக இருந்தால் ஏதாவது பேச வாய்ப்புண்டு; பொதுத்தேர்வு ஆச்சே!

      அடுத்த கல்வியாண்டிற்காக (2020-2021) பாடநூல் அச்சிடும் பணிகள் 90% முடிந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. முன்பே எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்று திட்டமிட்டதால் முப்பருவ அளவில் இல்லாமல் மொத்தமாக முழுப்பாடநூல்கள் அச்சிடப்பட்டு விட்டதாகவும் தகவல். பிற்பாடு பொதுத்தேர்வை ரத்து செய்விட்டார்கள்; ஆனால் முப்பருவ முறை கேள்விக்குறியோடு நிற்கிறது? 


      பாடநூல் பிழைகளைத் திருத்துவது என்னும் சடங்குகள் மாவட்ட ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் மூலம் நடத்தி முடிக்கப்பட்டிருக்கும். அவர்களால் பிழைகள் கண்டறியப்பட்டதாகத் தெரியவில்லை. ஒன்பதாம் வகுப்பில் சரியாக இருந்தவற்றை மறுபதிப்பில் தவறாக மாற்றிய வரலாறுகள் உண்டு. ஔரங்கசீப் கடைசி முகலாய மன்னர் இல்லையென்றால் அதற்குரிய ஆதாரங்களை SCERT யிடம் அளித்து உரிய வகையில் முறையிட்டு திருத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் தொலைந்தது போங்கள்! அவரே கடைசி அரசராக இருந்துவிட்டு போகட்டுமே!

    அரசு பாடநூல்களை அச்சிட்டு வழங்குகிறது, ஒழுங்காகப் படித்துவிட்டு போக வேண்டியதுதானே; பிழையென்று பேசுவதே ராஜதுரோகம். எனவே ராஜவிசுவாசிகள் இப்பணியை எப்படி மேற்கொள்வார்கள் என்பது அறிந்ததே. மணியடிக்கச் சொன்னால் மணியடிக்கணும், கைத்தட்டச் சொன்னால் கைத்தட்டணும், விளக்கேத்தச் சொன்னா ஏத்துணும், எதுவும் கேள்வி கேட்கக்கூடாது, வாழ்க மக்களாட்சி!

    ஒரே பாடத்தில் அடுத்தடுத்த வகுப்புகளில் கூட ஒருங்கிணைந்து பாடநூலை உருவாக்காததால் ஒழுங்கின்மை, திரும்ப வருதல், ஒரே கருத்துகள் – பாடப்பொருள் மட்டும் பேசப்படுதல் போன்ற பல்வேறு அபத்தங்கள் உருவாகின்றன. இதில் அறிவியல், சமூக அறிவியல் பாட உருவாக்கத்தில் ஒருங்கிணைப்பை வேண்டுவது நியாயமில்லைதான்!  

   ‘தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு’ பாடத்தில்  ‘வாழ்விட பாதுகாப்பு’ என்ற பத்தி இவ்வாறு செல்கிறது.

    “இயற்கை சுற்றுச்சூழலில் வாழும்  உயிரினங்களைப் பாதுகாப்பதாகும். தேசிய  பூங்காக்கள், வனவிலங்குகள் அல்லது   பறவைகள் சரணாலயங்கள் மற்றும்  உயிர்க்கோள இருப்புக்கள் போன்ற சில  பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இயற்கை வாழ்விடங்களுடன் ஆபத்தான அழிவிலுள்ள உயிரினங்களை பராமரிப்பதன் மூலம் இது  நிறைவேற்றப்படுகிறது. இந்தியாவில், சுமார் 73 தேசிய பூங்காக்கள், 416 சரணாலயங்கள் மற்றும் 12 உயிர்க்கோள இருப்புக்கள் உள்ளன”. (பக்.118)

    10 ஆம் வகுப்பு சமூக அறிவியலில், “இந்திய வனவிலங்கின் செழுமைத்தன்மையையும், பன்மையையும்  பாதுகாக்க 102 தேசிய பூங்காக்கள் மற்றும் 515 வனவிலங்குகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன”, என்றும் சொல்கிறது. 2019 ஜூனில் தயாரான இப்பாடநூல் விவரங்கள் 2019 செப்டம்பர் வாக்கில் தயாரான பாடநூலுக்குக் கிடைக்காமல் போன மர்மம் என்ன? உயிர்க்கோளப் பெட்டகங்கள், உயிர்க்கோளக் காப்பகங்கள்,  உயிர்க்கோள இருப்புகள் என மாற்றி மாற்றி எழுதுவதும் தொடர்கதைதான்!


  10 ஆம் வகுப்பில் இடம்பெறும் முழுப்பகுதியையும் கீழேக் காண்க.

 “இந்திய வனவிலங்கு வாரியம் 1952 (IBWL)

     1952 ஆம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக் குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்க நிறுவப்பட்ட அமைப்பு  இதுவாகும். வனவிலங்குகளைப் பாதுகாக்கவும்,  வேட்டையாடுதல், கடத்துதல் மற்றும் சட்டவிரோத வணிகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் இந்திய அரசு 1972 – இல் வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. 1992- இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சபையின் உயிரியல் பன்மை மரபு என்ற கருத்தரங்கில் நாடுகள் தத்தமது உயிரியல் வளங்களைப் பயன்படுத்தும் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்டது.. இந்திய வனவிலங்கின் செழுமைத்தன்மையையும், பன்மையையும்  பாதுகாக்க 102 தேசிய பூங்காக்கள் மற்றும் 515 வனவிலங்குகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன.

உயிர்க்கோள பெட்டகம் அல்லது காப்பகங்கள்

     உயிர்க்கோள பெட்டகம் என்பது நிலம் மற்றும் கடலோர சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று. மக்கள் இவற்றின் ஒருங்கிணைந்த அங்கமாகும். இந்திய அரசாங்கம்  18 உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றின் பணி இயற்கை வாழ்விடத்தின் பெரும் பகுதிகளைப் பாதுகாத்தல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேசிய பூங்காக்களைப் பாதுகாத்தல்  இவைகளின் பொருளாதார பயன்பாட்டு அண்மைப்  பகுதிகளைப் பாதுகாத்தல் போன்றவற்றை உள்ளடக்கியது.

இந்தியாவின் உயிர்க்கோள காப்பகங்கள்

   இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் 11 காப்பகங்கள் (மன்னார் வளைகுடா, நந்தா தேவி, நீலகிரி, நாக்ரேக்,  பச்மாரி, சிம்லிபால், சுந்தரவனம், அகத்திய  மலை,பெரிய நிக்கோபார் ,கஞ்சன்ஜங்கா மற்றும் அமர்கன்டாக்) யுனெஸ்கோவின் (UNESCO) மனித மற்றும் உயிர்க்கோள காப்பக திட்டத்தின் கீழ்  செயல்படுகின்றன.

வ. எண் /   உயிர்க்கோள  காப்பகங்கள் / மாநிலம் 

1 அச்சனக்மர்- அமர்கண்டாக் மத்தியபிரதேசம்,  சத்தீஸ்கர் 
2 அகத்தியமலை கேரளா 
3 திப்ரு  செய்கொவா அசாம் 
4 திகேங் திபங் அருணாச்சல பிரதேசம் 
5 பெரிய  நிக்கோபார்  அந்தமான் நிக்கோபார்  தீவுகள் 
6 மன்னார்  வளைகுடா தமிழ் நாடு
7 கட்ச் குஜராத் 
8 கஞ்சன்ஜங்கா சிக்கிம் 
9 மானாஸ் அசாம்
10 நந்தா தேவி உத்ரகாண்ட்
11 நீலகிரி தமிழ் நாடு 
12 நாக்ரெக் மேகாலயா 
13 பச்மாரி மத்தியப்பிரதேசம் 
14 சிம்லிபால் ஒடிசா 
15 சுந்தரவனம் மேற்கு வங்கம் 
16 குளிர்  பாலைவனம் இமாச்சலப்பிரதேசம் 
17 சேஷாசலம்  குன்றுகள் ஆந்திரப்பிரதேசம் 
18 பன்னா மத்தியப்பிரதேசம்”,  (பக். 119, 10 சமூக அறிவியல் தொகுதி 01)


   எட்டாம் வகுப்பில் உயிரினங்களைப் பாதுகாக்கும் ‘அரசு முயற்சிகள்’ சொல்லப்படுகின்றன. அதில்,

    “தாவரங்களையும் விலங்குகளையும்  பாதுகாப்பதற்காக, அரசாங்கம் நிறைய  முயற்சிகளை எடுத்துள்ளது மற்றும் அவற்றைப்  பாதுகாக்க சில நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக,  திட்ட புலி என்பது வனவிலங்கு பாதுகாப்பு  திட்டமாகும், இது 1972 இல் இந்தியாவில்  வங்காள புலிகளை பாதுகாக்க தொடங்கப்பட்டது. இது ஏப்ரல் 1, 1973 அன்று  செயல்படுத்தப்பட்டது . இது மிகவும்  வெற்றிகரமான வனவிலங்கு பாதுகாப்பு  முயற்சிகளில் ஒன்றாக மாறியுள்ளது. புலி  திட்டத்தின் கீழ் மூடப்பட்ட இந்தியாவின் முதல்  தேசிய பூங்கா கார்பெட் தேசிய பூங்கா ஆகும்.  ‘திட்டப் புலி’ காரணமாக இந்தியாவில் புலிகளின் மக்கள் தொகை 2006 ல் 1400 -ல் இருந்தது.  2018 இல் 2967 ஆக உயர்ந்துள்ளது. இதனை மேம்படுத்த அரசாங்கம் பின்வரும் சட்டங்களை இயற்றியுள்ளது

1. மெட்ராஸ் வனவிலங்கு சட்டம், 1873.
2. அகில இந்திய யானை பாதுகாப்பு சட்டம்,  1879.
3. காட்டு பறவை மற்றும் விலங்கு பாதுகாப்பு  சட்டம், 1912.
4. வங்காள காண்டாமிருக சட்டம், 1932.
5. அகில இந்திய வனவிலங்கு பாதுகாப்பு  சட்டம், 1972.
6. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986  (பக்.116) 

ஆங்கில வழியில்,



"Government Initiatives


In order to preserve the plants and animals,  government has taken lot of initiatives and  some acts have been passed to protect them. For  example, Project Tiger is a wildlife conservation  project initiated in India in 1972 to protect the  Bengal Tiger. It was launched on 1st April 1973  and has become one of the most successful  wildlife conservation ventures. Corbett National  Park was the first National Park in India to be covered under project Tiger. Due to ‘Project  Tiger’ the population of Tiger has increased in  India from 1400 in 2006 to 2967 in 2018. The  government has enacted the following Acts.

1. Madras Wildlife Act, 1873.
2. All India Elephant Preservation Act, 1879.
3. The Wild Bird and Animal Protection Act,  1912.
4. Bengal Rhinoceros Preservation Act, 1932.
5. All India Wildlife Protection Act, 1972.
6. Environmental Protection Act, 1986. (Page: 101)

     எங்கும் வல்லினம் மிகக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவார்கள் போலும்! அது தமிழ்ப் பாடத்திற்குதானே என்றும் இவர்கள் சொல்லக்கூடும். ஆங்கிலத்தில் இவர்கள் இம்மாதிரி இலக்கணப் பிழைபட எழுதுவார்களா? இருக்கலாம், யார் கண்டது?  ஆங்கிலப் பாடங்களைத் தனியே ஆய்வு செய்தால்தான் தெரியும்.  

     ‘Project Tiger’ என்பதை .  ‘திட்டப் புலி’ என்று மொழிபெயர்ப்பதைப் பாருங்கள். ‘புலிகள் பாதுகாப்பு திட்டத்தை’ ஏதோ ஒரு புலிபோல் ஆக்கிவிட்டனர். புலி மட்டும் என்ன வாழுதாம்? ‘Bengal Tiger’ ஓரிடத்தில் வங்காள புலி (வங்காளப் புலி எல்லாம் கிடையாது) என்றும் பிறிதோரிடத்தில் ‘பெங்கால் புலி’ எனவும் பாதி ஒலிபெயர்ப்பர். இதை வங்கப்புலி என்பது எவ்வளவு அழகாக இருக்கிறது. இப்படியான ஒரு மொழிநடையை நீங்கள் பாடநூலில் எங்கும் காண இயலாது.

  பத்தாம் வகுப்பில் இருப்பது  எவ்வளவோ பரவாயில்லை.

   “புலிகள் பாதுகாப்பு திட்டம் 1973-ல்  தொடங்கப்பட்டது. புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும்  நோக்கத்தோடும் புலிகள் பாதுகாப்பகங்கள்  தொடங்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் இருந்த புலிகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்து  1979-இல் 3015 ஆக இருந்தது. இதேபோல் மற்ற பாதிக்கப்பட்ட பாரசிங்க (சதுப்பு நில மான்),  காண்டாமிருகம், யானைகள் போன்றவற்றின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. (பக். 119, 10 சமூக அறிவியல் தொகுதி 01)

   “இந்தியாவில் புலிகளின் மக்கள் தொகை 2006 ல் 1400 -ல் இருந்தது.  2018 இல் 2967 ஆக உயர்ந்துள்ளது” (பக்.116) அது என்ன புலிகளின் மக்கள் தொகை?, ‘the population of Tiger’ தான்! எவ்வளவு அழகான மொழிபெயர்ப்பு! கண்டு களியுங்கள்! புலிகளின் எண்ணிக்கைதான் இங்கு ‘மக்கள் தொகை’யாகிறது.
 
   www.projecttiger.nic.in இணையதளத்தில் புள்ளி விவரங்கள் கிடைக்கின்றன. பத்தாம் வகுப்பில் 1979-இல் 3015 என்று சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு என்னாவாயிற்று என்று தெரியவில்லை. கண்டிப்பாகக் குறைந்துள்ளது. எனவே அதிகரித்த ஆண்டுகளை மட்டும் சொல்லி ஏமாற்றும் சூழ்ச்சி இதிலுள்ளதைக் காணலாம். இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும்போதே அதிக வீழ்ச்சி கண்டு இப்போது சற்று முன்னேறியிருப்பதாகக் கொள்ளலாம்.

    எட்டாம் வகுப்பில்,  “2006 -ல் 1400 -ல் இருந்தது.  2018 இல் 2967 ஆக உயர்ந்துள்ளதை” எழுதியுள்ளனர். 2006 இல் 1411, 2010 இல் 1706, 2014 இல் 2226,  2018 இல் 2967 என்று அரசு சொல்கிறது. 1979 ஐ ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. அணுமின்சக்தி கணக்கு காட்டுவார்களே அதைப்போல புலிக் கணக்கும் காட்டப்படுகிறது.

  “இதனை மேம்படுத்த அரசாங்கம் பின்வரும் சட்டங்களை இயற்றியுள்ளது”, (பக்.116)  என்று 1873 லிருந்து போடப்பட்ட சட்டங்களைப் பட்டியலிடக்கூடாது. அவையனைத்தும் புலிகளுக்காகப் போட்ட சட்டமல்ல; ‘அகில இந்திய வனவிலங்கு பாதுகாப்பு  சட்டம், 1972’, மட்டுமே இதற்கானது.  அச்சட்டத்திற்கு பிறகும் 1979 இல் 3015, 2018 இல் 2967 என்று புலிக்களின் எண்ணிக்கை இருப்பது நமது நாட்டில் சட்டங்களின் செயல்பாட்டை அறிய உதவும் சான்றாக இருக்கும்.  


(அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக