புதன், ஏப்ரல் 22, 2020

தமிழகத்தில் விரிவான சமூக ஆய்வுக்கான முன்னோட்டம்

தமிழகத்தில் விரிவான சமூக ஆய்வுக்கான  முன்னோட்டம்

(நூலறிமுகம்… தொடர்: 009)

மு.சிவகுருநாதன்

(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் வெளியீடாக க.காமராசன் மொழிபெயர்ப்பில், நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு ஆகியோர் எழுதிய  ‘தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ.800-1500)’ என்ற நூல் பற்றிய பதிவு.)


    பேரா. எ.சுப்பராயலு, பேரா. நொபொரு கராஷிமா இருவரும் தனித்தனியாகவும் இணைந்தும் எழுதி வெளியிட்ட நான்கு கட்டுரைகளை க.காமராசன் மொழியாக்கியுள்ளார். 

  • தமிழ்நாட்டில் தீண்டாதார்
  • சோழர் காலத்தில் சமூக மாற்றத்தின் சில தன்மைகள்
  • புதிய ஓம்படைக் கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும்
  • பதினைந்தாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டில் ஓர் உழவர் கிளர்ச்சி

       ஆகிய நான்கு கட்டுரைகளிலும் பின்னிணைப்பாக நொபொரு கராஷிமாவின் ‘நானும் எனது ஆய்வுகளும்’ என்ற கட்டுரையும் நூலில் உள்ளன. 

  • “சோழர் காலத்தின்போது தீண்டாதார் என்று கருதப்பட்ட பல சமூகங்கள் இருந்த போதிலும் அவர்கள் யார் என அடையாளம் காண எம்மால் இயலவில்லை.
  • உழவு, புல் வெட்டுதல், தோல் தொழில், நெசவு உள்ளிட்ட கைவினைத் தொழில் மேற்கொண்டிருந்த பறையர்கள் சமூகத் தரநிலையில் அடிமட்டத்திற்கு நெருங்கிய நிலையில் இருந்தனர்.
  • பறையர்களும் புலையர்களும் அடிமைகள் ஆக்கப்பட்டு, விற்கவும் வாங்கவும் பட்டனர். வெள்ளாளர்களும்கூட அடிமைகள் ஆக்கப்பட்டு, விற்கவும் வாங்கவும் பட்டனர்". (பக்.11&12)
    இத்துடன் பல விடயங்களை ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததாகக் குறிப்பிடும் ஆசிரியர்கள் தீண்டாதாரின் வாழ்நிலைமைகள் அதிகம் மாற்றமடையவில்லை என்றாலும் மேலதிகமான ஆய்வுகள் தேவை என்பதை வலியுறுத்துகின்றனர்.

     ‘தமிழ்நாட்டில் தீண்டாதார்’ என்ற கட்டுரையில் இந்த ஆய்வுகள் சங்க இலக்கியத்தில் தொடங்கி இடைக்காலப் பக்தி இலக்கியத்தில் நந்தனாரைப் போன்று கோயிலுக்கு நுழைய அனுமதிக்கப்படாத வைணவ பக்தர் திருப்பாணாழ்வார் பற்றிய ஆய்வு வரை நீளவேண்டும். கல்வெட்டுகள் தொடங்கி பிரிட்டிஷ் ஆவணங்கள், அரேபிய, சீன, ஐரோப்பிய பயணிகளின் குறிப்புகள் ஆகியவற்றை நுணுக்கமாக ஆராய வேண்டிய தேவையை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. 

    ‘சோழர் காலத்தில் சமூக மாற்றத்தின் சில தன்மைகள்’ என்ற கட்டுரை கிபி. 850-1279 காலகட்டக் கல்வெட்டுகளில் இடம்பெற்ற சாதிப்பெயர்களைக் கொண்ட ஆய்வாகும். இக்கல்வெட்டுகள் அக்காலத்தில் பொருளாதார வசதி பெற்றவர்களால் உருவாக்கப்பட்டவை. இதன் மூலம் அக்காலச் சமுதாயத்தின் முழு வடிவம் கிடைக்கவில்லை என்றாலும் இவற்றில் பறையர், புலையர் ஆகியோரைப் பற்றி அரிதாகவே தகவல்கள் கிடைப்பதால் அவர்களின் நிலை பரிதாபமாக இருந்ததைக் கணித்தறிகிறது. அவர்கள் தீண்டாத்தகாதவர் என்று வெறுக்கப்பட்டதும் நிலவுடையாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தியதும் அவர்களுடைய குடியிருப்புகளான புலைச்சேரி நத்தங்கள் நிலவுடைமையாளர்களால் விற்கப்பட்டதும் வெளிப்படுத்தப்படுகிறது. 

    சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் பிரம்மதேயம் (பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை) கூறப்படுகிறது. தானமளிப்பது அதிகாரப் பூர்வமாக எப்போது தொடங்கியது எனத் தெரியவில்லை என்று குறிக்கின்றனர். குப்தர் / வாகாடகர் காலச் செப்புப் பட்டயங்களில் இந்த தானத்தை அபகரித்துக்கொள்பவன், 

  • அவனுடைய பித்ருக்களுடன் மலத்திலும் அழுகலிலும் நெளியும் புழுவாகப் பிறப்பான்.
  • கீழுலகம் அதாவது நரகத்திற்கு செல்வான்.
  • பத்தாயிரம் பசுக்களைக் கொன்ற பாவத்திற்கு உள்ளாவான்.

  என்றெல்லாம் குறிப்பதே ‘ஓம்படைக் கிளவி’ எனப்படுகிறது. இது பல்லவர் காலக் கல்வெட்டுக்களிலும் காணக்கிடைக்கிறது. பிற்காலச் சோழர் காலத்தில் ‘துரோகி’ என்னும் சொல், ராஜ துரோகி, இனத் துரோகி, நாட்டுத் துரோகி, சைவத் துரோகி, குருத் துரோகி  எனும் கூட்டுச் சொற்களாக ‘ஓம்படைக் கிளவி’ப் பகுதிகளில் இடம் பெறுவதும் விளக்கப்படுகிறது. (பக்.27)

     பட்டப்பெயர், தொழில், குடிவழி அல்லது குருதி வழி ஆகியவற்றை சாதிக்கான குறிப்பீடாக எடுத்துக்கொள்ளலாம். ‘அந்தணன் தலையாக பள்ளன் கடையாக’ என்று குடுமியான்மலை கல்வெட்டு சொல்வதைப்போல, சாதி மற்றும் சாதிக்குழுக்களின் படிநிலைகளையும் ஒன்றையொன்று எதிர்த்தெழுந்த ஆதிக்கப் போட்டிகளை புதிய வகை  ‘ஓம்படைக் கிளவி’கள் வெளிப்படுத்துகின்றன. (பக்.41) (புதிய ஓம்படைக் கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும்)

    ‘பதினைந்தாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டில் ஓர் உழவர் கிளர்ச்சி’ என்ற கட்டுரையில் விஜயநகர ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற உழவர் கிளர்ச்சியில் படைத்தலைவர்கள் (முதல் வர்க்கம்) நில உடமையாளரான காணியாளர்கள் (இரண்டாம் வர்க்கம்), இடங்கை மற்றும் வலங்கைப் பிரிவினர் (மூன்றாம் வர்க்கம்) என மூன்றாக பிளவுற்று 2 ஆம் வர்க்கத்தினர் 3 ஐயும் இவர்களிருவரையும்  முதல் வர்க்கத்தினரும் நசுக்கினார். ஒரு கட்டத்தில்  மூன்றாம் வர்க்கத்தினரான  இடங்கை, வலங்கைப் சாதியினரான உழுகுடிகளும் கைவினைஞர்களும் மற்ற இரு வர்க்கத்திற்கு எதிராகத் திரண்டனர். இறுதிக்கட்டத்தில் இரண்டாம் வர்க்கமான காணியாளர்கள் இவர்களுடன் இணைந்து அதிகார வர்க்கத்தை எதிர்க்க முன்வந்ததையெடுத்து கிளர்ச்சி ஒரு எதிர்ப்பியக்கமாக மாறியதை எடுத்துக்காட்டுகிறது. (பக்.52)

    நொபொரு கராஷிமாவின் ஃபுகுஒகா விருது உரை ‘நானும் எனது ஆய்வுகளும்’ என்ற பின்னிணைப்புக் கட்டுரையாக உள்ளது.  இதில் அவரது இளமைப்பருவம், கல்வி, ஆய்வுகள், இந்தியா மற்றும் தென் இந்தியாவை ஆய்வு செய்ய தெரிவு செய்ததன் நோக்கம், ‘ஆசியா என்றால் என்ன?’, என்று வினா எழுப்பி அதற்குரிய விளக்கத்தையும் அளிக்கிறார். 

           இதுவரையில் நொபொரு கராஷிமாவின் நூல்களில் சுருக்கமான தென் இந்திய வரலாறு – பிரச்சினைகளும் விளக்கங்களும் – நொபோரு கராஷிமா (தமிழில்) ப.சண்முகம் (வெளியீடு: அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்), வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் – சோழர் காலம் (850-1300) - நொபோரு கராஷிமா (தமிழில்) எ.சுப்பராயலு, ப.சண்முகம், சு.இராஜகோபால், ஆர்.பூங்குன்றன், இல.தியாகராஜன், சு.இராஜவேலு, மு.சிவானந்தம் (வெளியீடு: பாரதி புத்தகாலயம்) ஆகிய இரு நூல்கள் தமிழில் கிடைக்கின்றன என்று கருதுகிறேன். 

      எனவே, நொபொரு கராஷிமா, பார்ட்டன் ஸ்டெயின், எ.சுப்பராயலு போன்றோரது ஆய்வுகள் முழுமையாகத் தமிழில் வெளிவர வேண்டும். அவர்களது ஆய்வு வெளிச்சத்தில் இன்னும் கூடுதலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இக்கட்டுரைகள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன. 

நூல் விவரங்கள்:

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ.800-1500)

நொபொரு கராஷிமா
எ.சுப்பராயலு
(தமிழில்) க.காமராசன்

 முதல் பதிப்பு: டிசம்பர் 2017
இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2018
பக்கங்கள்: 84
விலை: 70

வெளியீடு:


நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் (NCBH),
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600098.

044-26258410, 26251968, 26359906, 48601884
மின்னஞ்சல்: info@ncbh.in
இணையம்: www.ncbhpublisher.in





இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்,       திருவாரூர் 

முகநூல்: முனியப்பன் சிவகுருநாதன்


வலைப்பூ: மு.சிவகுருநாதன்


வலைப்பூ: பன்மை


twitter 


மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com 

வாட்ஸ் அப்:   9842802010
அலைபேசி:    9842402010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக