சனி, ஏப்ரல் 04, 2020

உலகின் முதல் கால்நடை மருத்துவமனை


உலகின் முதல் கால்நடை மருத்துவமனை


 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)


மு.சிவகுருநாதன்

   (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 70) 

  
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை:



      எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவ அறிவியல் பாடநூலில் அலகு 8 ‘தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு’ என்ற பாடம் உள்ளது. இந்தப் பாடத்திலுள்ள குளறுபடிகள் எண்ணற்றவை. இனி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். பாடத்தின் இறுதியில் ‘விலங்குகளின் நல்வாழ்வு  நிறுவனங்கள்’ சில பட்டியலிடப்படுகின்றன. அவை:


  •    ப்ளூ கிராஸ்
  •   பெட்டா (PETA)
  •   CPCSEA

  
    இவற்றில் ‘பெட்டா (PETA)’ பற்றிய பத்தி கீழே தரப்படுகிறது. இது “உள்நாட்டு  இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனம்”, என்று சொல்லப்படுகிறது. பிற லாப நோக்கத்தில் செயல்படுகின்றன போலும்! ஆங்கில வழியில் இப்பகுதி இல்லை; நீக்கப்பட்டுள்ளது. நமக்குக் காரணம் விளங்கவில்லை. பொதுவாக பாடநூல்களை ஆங்கிலத்தில் எழுதி தமிழில் பெயர்ப்பதுதான் மரபாக கடைபிடிக்கப்படுகிறது. பெயர்க்கும்போது ஏன் அப்பத்தி விடாமல் சேர்க்கப்பட்டது?


    இந்த அமெரிக்க உள்நாட்டு அமைப்பிற்கு இந்தியா உள்பட எப்படி உலகமெங்கும் கிளைகள் உள்ளன? அடுத்தவரியில் ‘பல்டி’யடித்து, “உலகின் மிகப்பெரிய  விலங்கு உரிமை அமைப்பு”, என்கின்றனர்.  ஜல்லிக்கட்டுக்குத் தடை பெற்ற அமைப்பு இதுவே. அப்போது இதை ‘பீட்டா’ (PETA) என்று சொல்லப்பட்டது. அந்த நினைவு வந்துவிடக்கூடாது என்பதற்காக ‘பெட்டா’ என்று குறிப்பிடுகின்றனரோ! ஆங்கில வழியில் படிக்கும் புத்திசாலிகள் அறிந்துவிடுவார்கள் என்பதற்காக அதை மட்டும் நீக்கிவிட்டார்களோ!

    இதன் இந்திய ஆதரவாளர்கள்,  “விலங்குகளிடமிருந்து  பெறப்பட்ட உணவை உண்ணுதல்,  விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட துணிகளை அணிதல், தொந்தரவு செய்தல்” ஆகிய மூன்றில் இறுதி ஒன்றை மட்டும் கடைபிடிப்பவர்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்திய மக்களில் பெரும்பாலானோர்  பட்டுத்துணிகள் அணியாமலிருப்பதில்லை; பட்டு இவர்களது சடங்குகளில் இன்றியமையாத ஒரு பொருள். (அகிம்சா பட்டை பயன்படுத்துவதாக சாக்குபோக்கு சொல்ல வேண்டாம்.) பால், தயிர், மோர், வெண்ணைய், நெய், கோமியம் ஆகிய விலங்குகளின் பொருள்களையும் பயன்படுத்துபவர்கள். இந்த அமைப்பின் கொள்கைப்படி இவற்றையும் பயன்படுத்தக்கூடாது. அதாவது மாட்டு மூத்திரத்தைக் கூடக் குடிக்கக்கூடாது.  


    இங்கு ஓர் இடையீடு: பொதுவாக நமது உச்சரிப்பிற்கு மருந்துக்கடைக்காரர் உச்சரிப்பிற்கு எப்போதும் ஆகாது. எனவே நான் பெயர்களை ஒரு சீட்டில் எழுதிச்சென்றுவிடுவது வழக்கம். நாம் ‘பாரசிட்டமால்’ என்றால் அவர்கள் ‘பேரசிட்டமல்’ என்பார்கள். நமக்கேன் வம்பு என எழுதிக்கொடுப்பது நல்லது என்பது அனுபவப்பாடம்.

    அதைப்போலவே நமது பாடமெழுதிகளும். அவர்களது உச்சரிப்பு என்ன வகைப்பட்டது என்பதை யாரும் உணர இயலாது. இப்பாடத்தில் நீலகிரி வரையாடு ஓரிடத்தில் ‘நீலகிரி தர்’ என்றும் மற்றோரிடத்தில் ‘நீலகிரி தரர்’ (பக்.113&114) என்றும் பதிவாகிறது. நல்லவேளை நீல்கிரிஸ் என்ற எழுதவில்லை; தப்பித்தோம். இந்த லட்சணத்தில் அந்த ஆடு நமது மாநில விலங்காமே! பாவம்!!

    இதுவும் ‘விக்கிப்பீடியா’வை அப்படியே காப்பியடித்து எழுதப்பட்டது. பல லட்சங்கள் செய்து இவ்வாறு பாடநூல்கள் தயாரிப்பதற்குப் பதிலாக ‘விக்கிப்பீடியா’ வையே பாடநூலாக அறிவித்துவிட்டால் என்ன? செலவு மிச்சமாகுமே. இது குறித்து SCERT யோசிக்கலாம்! அய்யம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.


    “பெட்டா என்பது ‘விலங்குகளின் நெறிமுறை சிகிச்சைகளுக்கான மக்கள்’ என்பதைக்  குறிக்கிறது. இது அமெரிக்காவின் வர்ஜீனியா,  நோர்போல்டில் அமைந்துள்ள ஒரு உள்நாட்டு  இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும்.  இது 1980 இல் இங்க்ரிட் நியூக்ரிக் மற்றும் அலெக்ஸ் பச்சேகோ ஆகியோரால்  நிறுவப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய  விலங்கு உரிமை அமைப்பாகும். இது அனைத்து  விலங்குகளின் உரிமைகளை பாதுகாக்க  அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து  பெறப்பட்ட உணவை உண்ணுதல்,  விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட துணிகளை அணிவது, தொந்தரவு செய்வது  போன்ற மனித செயல்பாடுகளை இது  எதிர்க்கிறது”. (பக்.123)

     People for the Ethical Treatment of Animals (PETA)’ என்பதை ‘விலங்குகளின் நெறிமுறை சிகிச்சைகளுக்கான மக்கள்’ என்று மொழிபெயர்ப்பதைப் பாருங்கள்! ‘Treatment’ என்பது இங்கு சிகிச்சை அல்ல; ‘நடத்துதல்’. அய்யகோ! என்னதான் செய்வது? விக்கியின் தமிழ்ப்பதிப்பு ‘விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்’ என்று கூறுகிறது. இவர்கள் ஆங்கிலத்தில் மட்டும் காப்பியடிப்பார்கள். பிறகு அதை google translate போன்று ஏதோ ஒன்றைப் பயன்படுத்தி மொண்ணையாக பெயர்ப்பார்கள். இதுதான் இவர்கள் கடைபிடிக்கும் அறவழி! நல்லவேளை! CPCSEA (The Committee for the Purpose of Control and Supervision of Experiments on Animals) ஐ விட்டுவிட்டார்கள்!

     ப்ளூ கிராஸ் (Blue Cross)  பத்தியும் இதே கதைதான். இதுவும் விக்கி copy – paste உத்திதான்! இடையில் ஒரு வரியை மற்றோரிடத்திலிருந்து உருகி செருகிப் புலமையை வெளிப்படுத்துகிறார்கள்.  


   “Blue Cross is a registered animal welfare  charity in the United Kingdom, founded 
in 1897 as ‘Our Dumb Friends League’. The  vision of this charity is that every pet will  enjoy a healthy life in a happy home. The  charity provides support for pet owners who  cannot afford private veterinary treatment,  helps to find homes for unwanted animals, and  educates the public in the responsibilities of  animal ownership” (Page: 105)


   “Blue Cross is a registered animal welfare charity in the United Kingdom, founded in 1897 as Our Dumb Friends League. The charity provides support for pet owners who cannot afford private veterinary treatment, helps to find homes for unwanted animals, and educates the public in the responsibilities of animal ownership”.

   ப்ளூ கிராஸ் என்பது யுனைடெட் கிங்டமில்  பதிவு செய்யப்பட்ட விலங்கு நல தொண்டு  ஆகும், இது 1897 இல் ‘எங்கள் ஊமை நண்பர்கள் லீக்’ என்று நிறுவப்பட்டது. இந்த  தொண்டு நிறுவனத்தின் பார்வை என்னவென்றால், ஒவ்வொரு  செல்லப்பிராணியும் மகிழ்ச்சியான  ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க  வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.  தனியார் கால்நடை சிகிச்சையை பெற  முடியாத செல்லப்பிராணி  உரிமையாளர்களுக்கு, தங்கள் பிராணிகளுக்கு  தேவையான வசதிகளை பெற உதவுகிறது,  மேலும் விலங்குகளின் உரிமைகளை பொதுமக்களுக்கு கற்பிக்கிறது.

      ‘யுனைடெட் கிங்டமில்  பதிவு செய்யப்பட்டதாம்’, ஏன் பிரிட்டன் என்று சொன்னாலென்ன? விக்கி மூலத்தில் இருப்பதை எப்படி மாற்றுவதாம்! வீட்டு விலங்கு உரிமையாளர்கள் பொதுமக்களாகிவிட்டனர்.
  
  ‘உங்களுக்குத் தெரியுமா?’ பெட்டிச்செய்தி கீழ்க்கண்டவாறு உள்ளது.

   “இங்கிலாந்தின் லண்டனின் தெருக்களில் வேலை செய்யும் குதிரைகளைப்  பராமரிப்பதற்காக இந்த அமைப்பு  நிறுவப்பட்டது. இது 1906 மே 15 அன்று  லண்டனின் விக்டோரியாவில் தனது  முதல் விலங்கு மருத்துவமனையைத் திறக்கப்பட்டது”. (பக்.122) நல்லதுதான். கி.மு.302 – கி.மு.233 காலப்பகுதியில் வாழ்ந்த மவுரியப் பேரரசர் அசோகர் தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்கும் மாக்களுக்கும் (விலங்குகள்) மருத்துவமனை அமைத்தார். அண்டை நாட்டு மக்களும் அவர்தம் விலங்குகளும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்திருந்தார். இன்று ‘கோரோனா’ போன்ற பெருங்கொள்ளைக் காலங்களில் கூட எல்லையோர மருத்துவமனைகள் அந்நியர்களுக்கு உதவிடும் சூழல் உண்டா? CAA இந்நாட்டு மக்களையே அந்நியர்களாக்கும் சூழலில் இது எப்படி நடக்கும்?


  ‘அசோகரின் பாறைக் கல்வெட்டுகளில் இரண்டு’, சொல்வது என்ன?

      “கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசியின் நாட்டிலும், எல்லையைத் தாண்டியுள்ள சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள், கேரளா புத்திரர்கள் போன்ற மக்களும், தாமிரபரணி பகுதியும் கிரேக்க மன்னன் அன்டியோக்கஸ் அரசாளும் மக்களும், அன்டியோக்கஸிற்கு அருகிலுள்ள மன்னர்களின் மக்களும் கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி தரும் இரு மருத்துவ வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கான மருத்துவம் தரப்படுகிறது. எங்கெங்கு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தேவையான மருத்துவச் செடிகள் இல்லையோ அவை அங்கு தருவிக்கப்பட்டு வளர்க்கப்படும். எங்கெங்கு மருத்துவ வேர்களும், பழங்களும் கிடைக்கவில்லையோ அவைகளும் தருவிக்கப்பட்டு வளர்க்கப்படும். மனிதர்க்கும் விலங்குகளுக்கும் உதவ சாலைகள் தோறும் பல கிணறுகளை வெட்டி, மரங்களை வைத்துள்ளோம்”. (பக்.477, பேரரசன் அசோகன்: மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு - சார்ல்ஸ் ஆலன் (தமிழில்) தருமி, எதிர் வெளியீடு, ஆகஸ்ட் 2014)

     விலங்குநலன் பேணுவதைப் பாடநூல் கி.பி. 20 ஆம் நூற்றாண்டில் பிரிட்டனிலிருந்து தொடங்குகிறது. இந்திய மரபில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமண, பவுத்த, ஆசீவக மரபுகளிலிருந்துதான் (அவைதீகம்)  தொடங்க வேண்டியிருக்கும். மகாவீரர், புத்தர், மற்கலி கோசலர்  போன்றோர் தொடங்கிய மரபின் தொடர்ச்சியே “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய” வள்ளலாரின் ஜீவகாருண்யம். தாவரங்களையும் உயிர்களாக மதிக்கும் சாமான்ய மரபு.

‘அசோகரின் கற்றூண் சாசனங்களில் ஐந்து’ பின்வருமாறு உரைக்கிறது:

      “கடவுள்களின் அன்பிற்குரிய மன்னர் பியாதாசி இவ்வாறு பேசுகிறார்: எனது பட்டமளிப்பிற்குப் பிறகு இருபத்தி ஆறு ஆண்டுகள் கழித்த பிறகு பல விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று ஆணையிட்டது. கிளி, மைனா, அருணா, சிகப்பு வாத்து, நாட்டுவாத்து, நந்திமுக்கா, ஜெலாட்டா, வவ்வால், பெண் எறும்பு, நன்னீர் ஆமை, எலும்பில்லா மீன், வேதராயக்கா கங்காபுபுதாகா, சங்கியா மீன், ஆமை, முள்ளம்பன்றி, அணில், மான், காளைமாடு, ஓகபிந்தா, காட்டுக் கழுதை, காட்டுப் புறா, மாடப்புறா, உண்ண முடியாத, பயன்படுத்த முடியாத நான்கு கால் விலங்குகள் இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட விலங்குகள். குட்டியிட்டுப் பால் கொடுக்கும் ஆடுகள், பெண் பன்றிகள், அதேபோல் ஆறு மாதம் தாண்டாத குட்டிகள் பாதுகாக்கப்பட்டவை. சேவல்களின் ஆண்மை மாற்றப்படக் கூடாது. உயிரினங்களை மூடி நிற்கும் உமி எரிக்கப்படக் கூடாது. காடுகளில் மரங்கள் காரணமின்றியோ, அல்லது காட்டுப் பிராணிகளைக் கொல்லவோ, எரிக்கவோ கூடாது. மிருக இனத்தின் உணவிற்காக மாற்று உயிர் கொல்லப்படக் கூடாது. மூன்று காட்டுர் பாசிஸிக்  சமயத்திலும் (மழைக்காலம்) மூன்று திசாக்களிலும் பதினான்காம், பதினைந்தாம் உபோசத்துகளில் மீன்கள் கொல்லப்படவோ விற்கப்படவோ கூடாது. இதே நாட்களில் யானையும், மீன்களும் பாதுகாக்கப்பட்ட இடங்களில் அவைகள் கொல்லப்படாமல் காக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பதினான்கு நாட்களில் எட்டாவது நாளும் மற்றும் பதினான்காவது, பதினைந்தாவது திசா, புனர்வாசு மூன்று காட்டுர் பாசிஸிக் மற்ற நல்ல நாட்களிலும், காளை மாடுகளை விதையடி செய்யக்கூடாது. அதேபோல் வழக்கமாக விதையடி செய்யப்படும் ஆடுகள், பன்றிகள் போன்ற விலங்கினங்களும் விதையடிக்கப்படக் கூடாது.  திசா நாட்கள் புனர்வாசு, காட்டுர் பாசிஸிக் நாட்களில் குதிரையும் காளைகளும் குறியிடப்படக் கூடாது”. (பக்.494, மேலது)

    

     இப்பட்டியலில் பசு இடம்பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பசு ‘மிக நல்ல உணவு’ என்கிறது தைத்தீரிய பிராமணம். முள்ளம்பன்றி, முள்ளெலி, உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முயல், ஒட்டகம் ஆகியவற்றைத் தவிர ஒரு தாடையில் பல் இருக்கும் வீட்டு விலங்குகள் அனைத்தையும் (தாவர உண்ணிகள்) உண்ணலாம் என்கிறது ‘மநு’ சாத்திரம். மாட்டிறைச்சி ‘மதுபர்கம்’ எனப்பட்டது. இது இல்லாமல் அன்றைய விருந்துகள் இல்லை. யாக்ஞவல்கியர் நெய்யில் பொறிக்கப்பட்ட இளம் கன்றின் மாமிசத்தைப் பற்றிப் பேசுகிறார். பசுவின் மூத்திரம் புனிதமாகக் கருதப்பட்டபோதிலும் பசுவின் வாய் தீட்டானது; மாறாக ஆடு, குதிரை ஆகியவற்றின் வாய் சுத்தமானதாகும், என்று வேத சாத்திரங்கள் வரையறுப்பதையும் காணலாம். (பார்க்க: பசுவின் புனிதம் – டி.என். ஜா – தமிழில்: வெ.கோவிந்தசாமி, பாரதி புத்தகாலய வெளியீடு)

(அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக