வெள்ளி, ஏப்ரல் 24, 2020

குழந்தைகளுக்கான மக்கள் சூழலியல் நூல்கள்

குழந்தைகளுக்கான மக்கள் சூழலியல் நூல்கள்  

(நூலறிமுகம்தொடர்: 011)

மு.சிவகுருநாதன்

(திருப்பூர்  குறிஞ்சி பதிப்பக வெளியீடாக வெளியான, சூழலியலாளர் கோவை சதாசிவம்  எழுதிய   உயிர்ப்புதையல், ஊர்ப்புறத்துப் பறவைகள், பூச்சிகளின் தேசம்  ஆகிய மூன்று நூல்கள் குறித்த  பதிவு.)






      சூழலியல் பல காலமாக மேட்டுக்குடிக்கானதாகவே இருந்து வந்திருக்கிறது. அவர்கள் புரிதலற்ற இந்த மேட்டுக்குடிச் சூழலியலை இன்றும் பேசி வருகிறார்கள். உலகமயம் எல்லாவற்றையும் பெரிதும் மாற்றிவிட்டது. நம்மாழ்வார் பேசிய இயற்கை விவசாயத்தை இனி மலட்டு விதைகளை விற்கும் ‘மாண் சாண்ட்டோ’ நிறுவனமும் பேசும். காடுகளையும் யானை வழித்தடங்களையும் அழித்த ஜக்கி வாசுதேவ் சுற்றுச்சூழலைக் காக்கக் கிளம்பியிருப்பதும், பணம் வசூல் செய்து மரம் நடுவதாகக் கொள்ளையடிக்கும் வன்முறைகளும் நடந்தேறுகின்றன. மேலும் ஊரெங்கும் ‘நர்சரிகள்’ தொடங்கி அயல் தாவர விற்பனையிலும் கொழிக்கிறார்கள். இது கூட பலருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்கிறதோ இல்லையோ சுய பாதுகாப்பாக உள்ளது.

   சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மக்கள் சார்ந்தது; இது கார்ப்பரேட் நிறுவனங்களால் செய்வதல்ல. இத்தகைய புரிதலோடு மக்கள் சார்ந்த சூழலியலை தமிழ்ச்சூழலில் முன்னெடுக்கும் வெகுசிலரில் எழுத்தாளர் நக்கீரன், கோவை சதாசிவம் போன்றோருக்கு சிறப்பிடம் உண்டு. இருவரும் கவிஞர்கள், களச்செயல்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள், குழந்தை இலக்கியப் படைப்பாளிகள். எனவே சூழலியலை மக்களிடமும் குழந்தைகளிடமும் கொண்டு சேர்க்கும் அரிய பணியைச் செய்து வருகின்றனர். 

   தமிழகப் பள்ளிப் பாடநூல்கள் உருவாக்கத்தில் எழுத்தாளர் நக்கீரன், கோவை சதாசிவம் ஆகியோரது பணி அவசியம், அதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நேரிலும் கடிதம் மூலமாக உரியவர்களிடம் வேண்டுகோள் விடப்பட்டது. நமது அதிகார வர்க்கம் இதற்கெல்லாம் அசைந்துகொடுப்பதில்லை. அதனால்தான் எவ்வித சூழலியல் புரிதலின்றி எழுதப்பட்ட பல அறிவியல் மற்றும் புவியியல் பாடங்கள் நமது குழந்தைகளின் கைகளில் திணிக்கப்பட்டுள்ளது. 

    இலக்கியம், சூழலியல், பண்பாடு எதுவானாலும் நமது பாடத்திட்டங்கள், பாடநூல்கள் வழியே கற்றுக்கொள்ள ஒன்றுமில்லாத நிலைதான். வாசிப்பு எனும் சுயகல்வியே இவற்றை நமக்களிக்கும். பள்ளிகளில் நூலகங்கள் உண்டு. அவற்றில் ஆண்டுதோறும் ‘கமிஷன்’ வாங்குவதற்காகவே ஆயிரக்கணக்கில் நூல்கள் என்னும் குப்பைகள் வாங்கிக் குவிக்கப்படுகின்றன. இதற்காகவே காளான்கள் போல் முளைக்கும் பதிப்பகங்கள் அட்டைகளை மாற்றி எதேதோ குழந்தைகளின் தலைகளில் கொட்டுகிறார்கள்.
 
உயிர்ப்புதையல்

     

      தோழர் கோவை சதாசிவம் குழந்தைகளுக்காகவும் சூழலியல் குறித்தும் எழுதிய 10 நூல்கள் நம்மிடம் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக கவனிப்போம். 



   “உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்”, என்று வலியுறுத்துகிறோம். அந்த உயிருக்கு அடிப்படையான இயற்கையிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதே நமது மக்கள் சூழலியர்களின் கோரிக்கை. அப்படித்தான், “மேற்குத் தொடர்ச்சி மலை மீதான் அன்பும் தேடலும் துளிர்த்தது”.(பக்.03) இந்த மலையைத்தான் ‘அம்மாவின் அம்மா’ என்றழைக்கிறார். தமிழகத்தில் அதிக மழைபெறும் ‘தேவலா’வைத் தோற்றோம். இனி வால்பறையையும் இழக்கக்கூடாது என்கிற ஆதங்கம் மேலோங்குவதை உணர முடிகிறது.

     ‘விதை நெல்’ மரபழிக்கப்பட்டு எங்கும் மரபணு மாற்றப் பயிர்களின் உற்பத்தி, காடழித்து மழைவளம் குறைதல், காவிரியின் துணையாறுகளான பவானி, நொய்யல், அமராவதி ஆகிய வேதி நஞ்சான கொடுமைகள், அதனால் ஒரத்துப்பாளையம் அணையை திறக்க எதிர்ப்பு, பெரிய அணைகள் கட்டி மின் திட்டங்களைச் செயல்படுத்துவதால் ஏற்படும் வன உயிர்கள் மற்றும் மனிதர்களது வாழ்வாதார இழப்பு, தாது மணல், கிரானைட் கொள்ளை, சுரங்கங்கள் தோண்டுவது, கனிம வளங்களைக் கொள்ளையடிப்பது போதாதென்று அறிவியலாய்வு என்கிற பெயரில் மலைகளைத் தகர்க்கும் நியூட்ரினோ திட்டம், நிலம், ஆறுகளுடன் இணைந்த கடலும் மாசாக்கப்பட்டிருக்கும் அவலம், அணு, அனல் மின் நிலையங்கள், வேளாண் மற்றும் தொழிலகக் கழிவுகளால் சதுப்புநில வளங்களும் இயற்கை உயிர்ச்சூழலான பவளப்பாறைகளும் அழியும் நிலை, புவியின் மேலாடையான மணல், ஆக மொத்தத்தில் பருவநிலை மாற்றத்தால் தகிக்கும் புவிப்பந்து  என அனைத்தும் இங்கு விளக்கப்படுகின்றன. 

   மலை ஒரு தாயென்றால் மரமும் தாய்தான். யூக்லிப்டஸ் போன்ற சூழலைக் கெடுக்கும் அயல் தாவரங்களை விடுத்து, இயற்கை மருத்துவத்திற்கும் பல்லுயிர்ப் பெருக்கக் கருவறையாகத் திகழும் ஆலமரத்தையும் (பக். 36), நிலத்தடி நீரைத் தக்கவைக்கும் நமது பண்பாட்டு அடையாளமான பனை மரம் போன்றவற்றையும் வளர்க்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது. 

   பழம் தின்னி வவ்வால்கள், இருவாட்சிகள், சிங்கவால் குரங்குகள், நீலகிரி கருமந்திகள், பாறு கழுகுகள், புலி, நீலகிரி வரையாடுகள், யானைகள் ஆகியன நமது சூழலை எவ்வாறு பாதுகாப்பானதாக மாற்றுகின்றன. இவைகளில் அழிவால் நிகழும் பாதிப்புகளும் விளக்கப்படுகின்றன. பார்வையாளர்களை விரும்பாத சிம்பன்சிகள் கற்களை பெயர்த்தெடுத்து வைத்திருந்து பார்வையாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நிகழ்விலிருந்து மனிதனைப் போன்று ஊகித்து அறியும் திறன் இருப்பதைப் புலப்படுத்துகிறது. “உயிர்களிடத்திலான அன்பு மனிதருக்குள் துளிர்க்க வேண்டும்”, என்று முடிக்கிறார். (பக்.62)

   அருணாச்சலப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களின் பறவையாக உள்ள இருவாட்சி (Great Horn Bill) பெண் பறவையின் இனப்பெருக்கக் காலத்தில் 70 நாள்கள் அவற்றிற்கு உணவு தேடித்தந்து தாயையும் சேய்களையும் மரப்பொந்தில் வைத்துப் பேணுவதை அறிய முடிகிறது. இதைப்போல ஒவ்வொரு பறவைகளும் அரிய குணங்களைக் கொண்டு விளங்குவது இயற்கையின் விந்தையாகும். 

    பறவைகள் மட்டுமல்ல, யானைகளும் பல நூறு கிலோ மீட்டர்கள் வலசை போகும். இதைத்தான் யானை வழித்தடம் என்கிறோம். காடழிப்பால் இவற்றைக் குலைத்துள்ள அவலம் புரிகிறது. சூழலைச் சுத்தம் செய்யும் பிணந்தின்னிக் கழுகுகள் (பாறு) டைகுளோபிஃனாக் கால்நடை மருந்தினால் அழிகின்றன. இறந்தவர்களின் உடலை இவற்றிற்கு அளிக்கும் பார்சி மக்களின் பிணங்களைத் தின்ன உரிய எண்ணிக்கையில் இவை இல்லை எனச்சொல்லப்படுகிறது. 

    இத்தகைய உயிர்ப்புதையலைத் தவறவிட்டோமானால் நமக்கு வாழ்வில்லை என்பதை எளிய மொழியில் இந்நூல் விளக்குகிறது. இங்கு ‘உயிர்ப்புதையல்’ என்பது தாவரங்களும் விலங்குகளும் மட்டுமல்ல; அவை வாழ ஆதாரமாக விளங்கும் மண், மலைகள், நிலம், காற்று, காடு, தாவரங்கள், விலங்குகள் என எல்லாமான பூமியும் கூட. இவற்றை குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.


ஊர்ப்புறத்துப் பறவைகள்

     உள்ளத்திற்கு மகிழ்வு, அமைதி கிடைக்க வேண்டுமானால் பறவைகளைக் கவனித்தால் போதும்; வேறெதுவும் தேவையில்லை. இது அழகுணர்ச்சி, ரசனை ஆகியவற்றைக் கூட்டி சூழல் விழிப்புணர்வை உண்டாக்கும் என்கிறார் ஆசிரியர்.



  • தையல் சிட்டு
  • தூக்கணாங் குருவி
  • நா கணவாய் (மைனா)
  • பைங் கிளி
  • பனங் காடை
  • கருங் கரிச்சான்
  • நாட்டு உழவாரன்
  • கருங் குயில்
  • மடையான்
  • சிறிய நீர்க்காகம்
  • உண்ணிக் கொக்கு
  • கொண்டலாத்தி
  • செம்பகம்
  • செம்மூக்கு ஆள்காட்டி
  • புள்ளி ஆந்தை
  • மாடப் புறா
  • ஊர்ப் பருந்து
  • ஊதா தேன் சிட்டு
  • புள்ளிச் சில்லை
  • சின்னான்
  • வெண்தலைச் சிலம்பன்
  • வெண்மார்பு மீன்கொத்தி
  • பொன்முதுகு மீன்கொத்தி
  • காக்கை
  • சிட்டுக் குருவி


     ஆகிய பறவைகள்தான் இந்நூலில் விவரிக்கப்படுகின்றன. அவற்றின் இயல்புகள், வாழிடங்கள், அதன் நிலை ஆகியன சுவைபட விரிகின்றன. பனிச்சிகரம், மலைமுகடு, புகலிடங்களில் இவை வாழ்வதில்லை. நமது வீட்டுக்கூரைகள், வீதிகள், மரங்கள், வயல்வெளிகளில் வாழ்பவை எனவே ‘ஊர்ப்புறத்துப் பறவைகள்’ என்கிறார். 

     தூக்கணாங்குருவிகள் கூடுகட்டும் அழகு, ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, பீகார் ஆகிய நான்கு மாநிலங்களின் மாநிலப் பறவையான வனப்புமிக்க பனங்காடை, இருவாட்சிகளைப் போல இனப்பெருக்கக் காலங்களில் பெண்பறவைக்கு உணவு தேடித்தரும் கொண்டலாத்தி என பறவைகளின் பண்புகளில் உள்ளம்  நெகிழலாம்.

        “மனிதர்களின்றி பறவைகளால் வாழமுடியும்,
ஆனால் பறவைகளின்றி மனிதர்களால் வாழமுடியாது”, (பக்.96)

     என்ற பறவையியல் அறிஞர் சாலிம் அலியின் கருத்துகளின் உண்மை விளங்க வேண்டும், என்று கூறி இந்நூலை நிறைவு செய்கிறார்.


பூச்சிகளின் தேசம்


   எழுத்தாளர் நக்கீரன் மதிப்புரையில் சொல்வதைப்போல, கானுலா அழைத்துச் செல்வதுபோல் உரையாடல் வழியில் செய்திகளை சரளமாகக் கூறிச் செல்கிறார்.  



  • கரையான்
  • எறும்பு
  • நத்தை
  • கண்கொத்திப் பாம்பு
  • தும்பி (தட்டான்)
  • மின்மினி
  • அட்டைகள்
  • வண்ணத்துப்பூச்சி
  • கரப்பான் பூச்சி
  • சிலந்தி
  • தேனீ
      ஆகிய பூச்சிகள் இங்கு கவனம் கொள்ளப்படுகின்றன. இவை ஒன்றும் மனித குல எதிரிகள் அல்ல. இவையும் பூமிப்பந்தில் வாழத் தோன்றியவை. இவற்றை அழிப்பது மனிதனது பணியல்ல; இவற்றோடும் இயற்கையோடும் இணைந்து வாழ்தலின் இன்றியமையாமை உணர்த்தப்படுகிறது. பூமி மனிதர்களுக்கான வீடு மட்டுமல்ல; இவற்றிற்காக கூடு. 

    எண்டோசல்பான் பூச்சிக்கொல்லியின் விளைவுகளும் விவரிக்கப்படுகின்றன. அயல் தாவரமாக இருப்பினும் தொட்டா சுருங்கியின் சிறப்புகள் சொல்லப்படுகின்றன. வேலிக்கருவேல மரங்கள், பார்த்தீனியம், சவுண்டல் போன்ற அயல் தாவரங்கள் சூழலைக் கெடுப்பவை என்பதும் சொல்லப்படுகிறது. 

     கரையான் புற்றை பாம்புப் புற்று எனச்சொல்லும் மூடத்தனம் நீங்கவும் கரையான்களின் வாழ்வியல் எடுத்துக்காட்டப்படுகிறது. வழி தவறாத நத்தைகள், வான வில்லை உடம்பில் கட்டியிருக்கும் வண்ணத்துபூச்சி, தேனீக்களின் நடனமொழி. ரத்தம் உறைதலைத் தடுக்கும் சுரப்பியைக் கொண்ட இருபால் உயிரியான அட்டை, இரவில் ஒளிரும் மின்மினிகள் என பூச்சிகளின் தேசம்தான் எவ்வளவு அழகானது? எண்ணற்ற பூச்சிகளின், பறவைகளின், விலங்குகளின் தேசத்தை நாம் வெறும் மனிதர்களின் தேசமாக மாற்றி விட்டோமே!

   குழந்தைகளைக் கவரும் எளிய, இனிய நடை இவரது நூலுக்குத் தனிச்சிறப்புச் சேர்க்கிறது. இது சூழலியலை மக்களிடம் கொண்டு சேர்க்க பெரிதும் உதவுகிறது.     
  
நூல் விவரங்கள்:

 உயிர்ப்புதையல் (காடும் காடு சார்ந்த உலகமும்)
கோவை சதாசிவம்
நான்காம் பதிப்பு: மார்ச் 2017
பக்கங்கள்: 144
விலை: 110
ஊர்ப்புறத்துப் பறவைகள் (சூழலைப் பேசும் காலத்தின் குரல்)
கோவை சதாசிவம்
ஆறாம் பதிப்பு: மார்ச் 2017
பக்கங்கள்: 96
விலை: 80
பூச்சிகளின் தேசம்  (சிற்றுயிர்களின் பேரியக்கம்)
கோவை சதாசிவம்
 மூன்றாம் பதிப்பு: மார்ச் 2017
பக்கங்கள்: 144
விலை: 120
 வெளியீடு:
குறிஞ்சி பதிப்பகம்,
4/610, குறிஞ்சி நகர்,
வீரபாண்டி – அஞ்சல்,
திருச்சி – 641605.
கைபேசி: 9965075221  9894777291
மின்னஞ்சல்:  kurinjisadhasivam@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக