புதன், ஏப்ரல் 08, 2020

சூழலியல் புரிதலின்றி எழுதப்படும் அறிவியல் பாடங்கள்


சூழலியல் புரிதலின்றி எழுதப்படும் அறிவியல் பாடங்கள்


 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)


மு.சிவகுருநாதன்

   (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 74) 

  
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை:


      பாடத்திட்ட உருவாக்கப் பணிமனையின்போது அறிவியலின் ஊடாக சூழலியலைச் சேர்க்க, ஆசிரியப் பெருமக்களிடையே கடும் எதிர்ப்பு இருந்ததை, அதில் கலந்துகொண்ட நண்பர் ஒருவர் தெரிவித்தார். சூழலியலை புவியியல் பாடத்துடன்தான் இணைக்க வேண்டும் அறிவியலுடன் அல்ல, என்பதே அவர்களின் கருத்தாக முன்வைக்கப்பட்டது. சூழலியலுக்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லை என்ற கற்பிதம் ஆசிரியர்களிடம் நிலவுவது இன்றைய கல்விமுறையை எடுத்துக்காட்டும் கண்ணாடி. பிறகெப்படி சூழலியல் புரிதல்களுடன் அறிவியல் பாடங்கள் எழுதப்படும்?

   சூழலியல் சார்ந்த அறிவியல் பாடம் ஒன்றிலிருந்து சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம். (எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவ அறிவியல் ‘தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு’) 

     “Long distance travel by birds to  escape severe environmental  conditions is called migration.  Many birds and many other animals migrate  long distances during unfavourable season.  Siberian Crane migrates from Siberia  to India during winters to escape harsh  conditions in Siberia and to get comfortable  conditions and food in India. Siberian  crane can travel average of 200 miles on a  single day”. (Page: 95)

    “கடுமையான சுற்றுச்சூழல்  நிலைமைகளிலிருந்து தப்பிக்க  பறவைகள் நீண்ட தூரம்  பயணம் செய்வது இடம்பெயர்வு என்று  அழைக்கப்படுகிறது. சாதகமற்ற பருவத்தில்  நீண்ட தூரம் பல பறவைகள் மற்றும் பல  விலங்குகள் இடம் பெயர்கின்றன. சைபீரியாவில் கடுமையான  சூழ்நிலைகளில் இருந்து தப்பிப்பதற்கும்,  இந்தியாவில் வசதியான சூழ்நிலைகள் மற்றும் உணவைப் பெறுவதற்கும் சைபீரிய  கிரேன் குளிர்காலத்தில் சைபீரியாவிலிருந்து  இந்தியாவுக்கு குடிபெயர்கிறது. சைபீரிய  கிரேன் ஒரே நாளில் சராசரியாக 200  மைல்கள் பயணிக்கிறது”, (பக்.109)

    ‘migration’ ஐ ‘இடம்பெயர்வு’ என்கின்றனர். மனிதர்கள் புலம் பெயர்வது போலில்லை இது. ஓராண்டில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் நடைபெறும் பெயர்வு மீண்டும் அதே இடத்திற்கு பறவைகள் திரும்பச் சென்றுவிடும். இதனால்தான் ‘வலசை போதல்’ என்ற அழகான சொல் பயன்பாட்டில் உள்ளது. உணவு மற்றும் சாதகமான சூழலுக்கு மட்டுமல்ல; இனப்பெருக்கத்திற்குமாகவே இந்த வலசை போதல் நடக்கிறது.

    சைபீரிய  கிரேன் (Siberian Crane) என்று சொல்வதேன்?    சைபீரிய  நாரை என்று சொல்வதில் என்ன சிக்கல்? இங்கு ஏன் ஒலிபெயர்ப்பு? தமிழில் பெயரில்லாத விலங்குகளின் பெயர்களை ஒலிபெயர்த்து எழுதுவதில்லை தவறில்லை.

    “நம் நாடு பல்வேறு  வகையான இனங்கள் மற்றும் வளமான தாவரங்கள் மற்றும்  விலங்கினங்களுக்கான  வீடாகும். பெங்கால் புலிகள், ஆசிய சீட்டா மற்றும் பல பறவைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. ஆனால் சுற்றுச்சூழலானது, காடழிப்பு, வாழ்விட இழப்பு,  மனிதர்களின் குறுக்கீடு, மற்றும் விலங்குகளை வேட்டையாடுவது போன்ற பல்வேறு  காரணங்களால் அழிந்துவிட்டன, பல ஆபத்தில்  உள்ளன. அவற்றில் சில மட்டுமே பூமியில்  எஞ்சியுள்ளன, விரைவில் அவைகளும் அழிந்து  போகக்கூடும். இந்தியாவில் கிட்டத்தட்ட 132  வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆபத்தான நிலையில் உள்ளன என்று  தெரிவிக்கப்படுகிறது. பனிச்சிறுத்தை, வங்காள  புலி, ஆசிய சிங்கம், ஊதா தவளை மற்றும்  இந்திய ராட்சத அணில் ஆகியவை இந்தியாவில்  ஆபத்தான நிலையிலுள்ள விலங்குகள்”. (பக்.113)
    
    ஆசிய சீட்டா (Asiatic Cheetah) விற்கு சிவிங்கி என்றபெயர் வழங்கப்படுகிறது. Leopard என்பதும் இதனையேக் குறிக்கும். Tiger – புலி; Panther – சிறுத்தை என்றறிக. 

 
     “காடுகள் அழிக்கப்படுவதால் பல  ஆல்காக்கள், பூஞ்சைகள், பிரையோபைட்டுகள்,  பெர்ன்கள் மற்றும் ஜிம்னோஸ்பெர்ம்கள் மறைந்து வருகின்றன. மேலும், காணாமல்  போகும் ஒவ்வொரு தாவங்களையும் சார்ந்த பல  வகையான விலங்குகள் மற்றும்  நுண்ணுயிரிகள் அழிந்து போகின்றன.  இதேபோல், அழிந்துப் போகும் விளிம்பில் உள்ள விலங்குகளின் பட்டியல் முடிவற்றது. இறால்கள்,  சிப்பிகள், நண்டுகள், ஸ்க்விட் (மீன்வகை),  ஆக்டோபஸ், கணவாய்மீன், வண்டுகள்,  தட்டான் பூச்சி, வெட்டுக்கிளிகள், மீன் மற்றும்  தவளைகள் கூட தங்கள் தோல் வழியாக விஷ  வாயுக்களை உறிஞ்சி இறந்து  கொண்டிருக்கின்றன. வெட்டுக்கிளி ஒரு பூச்சி  வகை. இது இந்தியாவில் மறைந்து வருகிறது”. (பக்.114)

     “Many algae, fungi, bryophytes, ferns  and gymnosperms are disappearing with the  destruction of forests. And, each disappearing  species may take away with it many species of  animals and microbes which depend on them  for food and shelter. Similarly, list of animals on  the verge of being lost is endless. Prawns, oysters,  lobsters, crabs, squid, octopus, cuttlefish,  beetles, dragonfly, grasshoppers, fish and even  frogs are dying of absorbing poisonous gases”,  (Page: 99)

        பெர்ன்கள்’ (பெரணிகள்) டெரிடோஃபைட்டா பிரிவைக் குறிக்கும். பெரணிகளைத் தவிர அப்பிரிவைச் சேர்ந்த பல தாவரங்களிலும் அழிவிலுள்ளவைதான். எனவே டெரிடோஃபைட்டாகள் என்றே சொல்லலாம். 

    “தட்டான் பூச்சி, வெட்டுக்கிளிகள், மீன் மற்றும்  தவளைகள் கூட தங்கள் தோல் வழியாக விஷ  வாயுக்களை உறிஞ்சி இறந்து  கொண்டிருக்கின்றன. வெட்டுக்கிளி ஒரு பூச்சி  வகை. இது இந்தியாவில் மறைந்து வருகிறது”. (பக்.114)

   இவை எவ்வாறு அழிகின்றன அல்லது அதீதமாக பெருக்கமடைகின்றன என்பதற்கான விளக்கம் துளியுமில்லை. கொசுக்கள் ஏன் பெருகின்றன? சில சமயங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்புகள் ஏன் நிகழ்கிறது?  இத்தகைய சிந்தனை உசுப்பல்கள் உயர் சிந்தனை வினாக்களில் கூட இல்லை? “இன்று டைனோசர்களைக் கண்டுபிடிக்க முடியுமா?”, (பக்.126)  என்று புத்திசாலி வினா ஒன்று இடம்பெறுகிறது. “டைனோசர்கள் அழிந்துவிட்டன”, என்று சொல்லியபிறகு ‘கண்டுபிடிக்கும்’ உயர்சிந்தனையை எங்கு கொண்டு சேர்ப்பது? 

ஒரு இணையப் படம்

    2019 இறுதியில் கொரோனா பரவலுக்கு முன்னதாக தலைப்பு செய்திகளில் அடிபட்டது வெட்டுக்கிளி படையெடுப்பு. ஆப்பிரிக்கப் பாலைவனங்களில் சாதகமாக சூழலில் பல்கிப்பெரும்  இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் (desert locust) ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளில் வேளாண்மையை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, தெற்கு சூடான், உகாண்டா, கென்யா, ஓமன், பாகிஸ்தான், இந்தியா எனப் பல்வேறு நாடுகளைப் பாதித்தது. இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பாதிப்பு உண்டானது.  

   பாசிப்பொலிவு அல்லது பெருக்கம் (Algal bloom), ஊட்டச்சத்து மாசு எனும் ஆகாயத்தாமரைப் பெருக்கம் (Eutrophication) போன்று கொசுக்கள், வெட்டுக்கிளிகள் பெருகக் காரணம் என்ன? காகங்கள், பருந்துகள், பிணந்திண்ணிக் கழுகுகள் (பாரு) அழிவதன் பின்னணி என்ன? அதன் உடன் விளைவுகள் சூழலை எவ்விதம் பாதிக்கும்?  என்கிற சிந்தனை உசுப்பல்கள் இன்றி பக்கம்பக்கமாக பாடநூலை எழுதிக் குவிப்பதனால் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை.

    கொசு, வெட்டுக்கிளி போன்றவை உருமாற்றம் நடைபெறும் உயிரிகள். எனவே இவை முட்டை, புழு (லார்வா), பூச்சி என்ற உருமாற்ற வளர்நிலைகளில் இவற்றை பல்வேறு உயிரிகளுக்கு உணவாகப் பயன்படும். தலைப்பிரட்டை, சிறிய தவளைகள், சிட்டுக்குருவி போன்ற சிறிய குருவியினங்கள், ஓணான், பல்லி போன்ற சிறிய ஊர்வன விலங்குகளுக்கு இவை உணவாகும்.

   இந்த பெரும்பாllலான உயிரினங்களை நவீன வேளாண்மை தனது வேதியுரங்கள், பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகள் போன்றவற்றால் ஒழித்துக் கட்டி விட்டது.   எனவே   கொசு, வெட்டுக்கிளிப் பெருக்கம் பேரிடராக மாறுகிறது.

   நமது சுற்றுப்புறத்தை தூய்மை செய்யும் காகம், பருந்து, கழுகு போன்றவை வேதி மற்றும் ‘டைகுளோபினாக்’ போன்ற மருந்து நச்சுகளால் அழிவை நோக்கிச் சென்றுவிட்டன. “காடழிப்பு, வாழ்விட இழப்பு,  மனிதர்களின் குறுக்கீடு, மற்றும் விலங்குகளை வேட்டையாடுவது” மட்டுமல்ல; நவீன வேளாண்மை, தொழிற்சாலைகள் உள்ளிட்ட மனிதச் செயல்பாடுகளின் பங்கு மிக அதிகம். இவற்றை கண்டும் காணாமல் பாடநூல் எத்திசையில் பயணிக்கிறது என்பதை கூர்ந்து நோக்கினால் புலப்படும்.

    உணவுச் சங்கிலி, உணவு வலைகளில் ஏற்படும் இடையூறு சூழலை எவ்வாறு பாதிக்கும் என்பதைச் சொல்ல மறுப்பது ஏன்? என்று தெரியவில்லை.

     ‘உயிர்வழிப்பெருக்கம்’ பற்றி எழுதும்போது,

    “ஆற்றல் கொண்ட வேதிச்சேர்மம் இயற்கை சூழ்நிலைக்காரணிகளுக்கு அப்பாற்பட்டு,  சுற்றுப்புறத்தில் உள்ள அளவைக்காட்டிலும்  பன்மடங்கு பெருகி அவை உயிர்களுக்குள் சேர்வதே உயிர்வழிப்பெருக்கமாகும். இவை பாதரசம், ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் மற்றும் பாலிக்குளோரினேட் பைபீனைல்கள் மற்றும் டி.டி.டி போன்ற பூச்சிக்கொல்லிகளாக இருக்கலாம். இந்த பொருட்களை கீழ்நிலை உயிரினங்கள் உணவாக உட்கொள்ளும்  பொழுது இந்த பாதிப்பு தொடங்கிறது. இந்த  விலங்கை உயர்மட்ட விலங்குகள் உணவாக உட்கொள்ளும் பொழுது நச்சுத்தன்மை அந்த  விலங்கினத்தையும் பாதிக்கிறது”. (பக்.121 & 122)

   Lower food chain ஐ கீழ்நிலை உயிரினங்கள் என்றும் Higher food chain ஐ   உயர்மட்ட விலங்குகள் என்று மொழிபெயர்க்கின்றனர். உணவுச் சங்கிலி, உணவு வலை பற்றி பேசக்கூடாது என்கிற எண்ணம் போலும்! இந்த ‘மேல், கீழ்’ என்ற கெட்ட வார்த்தைகளை தூக்கியெறிதல் நலம் பயக்கும். (எ.கா. மேலவை – மாநிலங்களவை, கீழவை -  மக்களவை, உயர்சாதி – உயர்த்தப்பட்ட சாதி, கீழ்சாதி – தாழ்த்தப்பட்ட சாதி)     Lower food chain ஐ சிறிய உயிரினங்கள் என்றும் Higher food chain ஐ   பெரிய உயிரினங்கள் என்றுகூட சொல்லலாம். 


    ‘உங்களுக்குத் தெரியுமா?’ பகுதிகளில்  வாங்கரி மாத்தாய்,  சுந்தர்லால் பகுகுணா ஆகியோர் அறிமுகப்படுத்தபடுகின்றனர். நல்லதுதான். அன்று இவர்களது பணிக்காக அரசுகள் அச்சுறுத்தின; இன்று பாடநூல் இவர்களது பெயர்களை வதம் செய்கின்றது. Wangari Maathai - வாங்கரி மாதாய்  என்றும், Sunderlal Bahuguna - சுந்தர்லால் பகுணா என்றும் பாடநூல் எழுதுகிறது. இவர்களது சூழலியல் புரிதல் அப்படி. வாங்கரி மாத்தாய்,  சுந்தர்லால் பகுகுணா என்றே எழுத வேண்டும்.

   “1977 ஆம் ஆண்டில்  கென்யாவில் பச்சை பட்டை இயக்கத்தை வாங்கரி மாதாய்  நிறுவினார். கென்யாவில்  இந்த இயக்கம் 51  மில்லியனுக்கும் அதிகமான  மரங்களை நட்டுள்ளது.  2004 ஆம் ஆண்டுக்கான  அமைதிக்கான நோபல்  பரிசு அவருக்கு  வழங்கப்பட்டது”. (பக்.112)

   “Wangari Maathai founded the  Green Belt  Movement in  Kenya in the year 1977. 
GBM has planted over 51  million trees in Kenya. She  was awarded the Nobel  Peace Prize for 2004”. (Page: 97)

  “சிப்கோ இயக்கம் முதன்மையான வன பாதுகாப்பு இயக்கம். ‘சிப்கோ’ என்ற சொல்லுக்கு ‘ஒட்டிக்கொள்வது’ அல்லது ‘கட்டிப்பிடிப்பது’ என்று பொருள். இந்த இயக்கத்தின் நிறுவனர் சுந்தர்லால் பகுணா ஆவார். மரங்களை பாதுகாத்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் காடுகளை அழிக்காமல் பாதுகாத்தல் என்ற நோக்கத்துடன் இது 1970 இல் தொடங்கப்பட்டது”, (பக்.108)

   “Chipko Movement is primarily  a forest conservation movement.  The word ‘Chipko’ means  ‘to stick’ or ‘to hug’. Sunderlal Bahuguna  was the founder of this movement. It was  started in 1970s with  the aim of protecting  and conserving trees  and preserving forest  from being destroyed”. (Page: 94)

   ‘Green Belt  Movement’ – ‘பச்சை பட்டை இயக்கம்’ ஆகிறது. பச்சை என்பது வெறும் நிறம் மட்டுமே; பசுமை என்பது உயிர்ப்பைக் குறிக்கும் ஒரு சூழலியல் சொல். எனவே  ‘பசும்பட்டை இயக்கம்’ என்று சொல்வதே சிறப்பு. இல்லாவிட்டால் இவற்றை மொழிபெயர்க்காமலே விடுவது மிகவும் சிறந்தது.

    “மரங்களை பாதுகாத்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் காடுகளை அழிக்காமல் பாதுகாத்தல்”, - ஏன் மொழி இவ்வாறு தடுமாறுகிறது? இதைப் படிக்கும் குழந்தைகளே கேலி செய்வர்.  எல்லாம் ‘Google translate’ மாயம்!  

   நீங்களே சோதித்துப் பாருங்களேன்! இப்பத்தியை copy செய்து Google translate இல் paste செய்து பாருங்கள்! ஆச்சரியம், ஆனால் உண்மை. கீழ்க்கண்ட மொழியாக்கம் அப்படியே கிடைக்கும். மாதாய், பகுணா ரகசியம் இப்போது புரிகிறதா?


  “சிப்கோ இயக்கம் முதன்மையாக வன பாதுகாப்பு இயக்கமாகும். ‘சிப்கோ’ என்ற சொல்லுக்கு ‘ஒட்டிக்கொள்வது’ அல்லது ‘கட்டிப்பிடிப்பது’ என்று பொருள். இந்த இயக்கத்தின் நிறுவனர் சுந்தர்லால் பகுன. மரங்களை பாதுகாத்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் காடுகளை அழிக்காமல் பாதுகாத்தல் என்ற நோக்கத்துடன் இது 1970 களில் தொடங்கப்பட்டது”.  (நன்றி: Google translate)



(அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக