பொதிகைச்சித்தர்: தொடரும் தேடல்
‘கவிதா நிகழ்வு – ஓர் அறிமுகம்’ எனும்
தலைப்பில் தினமணி தமிழ்மணியில் ஜூலை 07, 1990 இல் எழுதிய கட்டுரை ஒன்றில், வே.மு.பொதியவெற்பன்
பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“‘போராடும் மானுடம்’ என்னும் முற்றிலும்
தமிழகக் கலைஞர்களாலேயே நிகழ்த்தப்பட்ட முதல் கவிதா நிகழ்வினைப் புரட்சிப்
பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் 19.07.86ல் புதுவையில் நிகழ்த்தினோம்.
இந்த இயக்கத்தில் என்னுடன் கவிஞர்கள் ஜமாலன்,
இரவிக்குமார், பழமலை மற்றும் மக்கள் கலைமன்றக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
முந்தைய கவிதா நிகழ்வுகளிலிருந்து இந்தக்
கவிதா நிகழ்வு மூன்று விதங்களில் வித்தியாசப்படுகிறது.
முதலாவதாக முந்தைய கவிதா நிகழ்வுகள் ஈழக்
கவிதைகளை மட்டுமே கொண்டு நிகழ்வதாயின. மாறாக எனது கவிதா நிகழ்வு தமிழக – ஈழ -
இந்திய – சர்வதேசீயக் கவிதைகளை அகப்படுத்தி நிகழ்த்தப்பட்டது.
இரண்டாவதாக ஈழக் கவிதா நிகழ்வுகள் ஒரு கவிதையை
அதன் முழு வடிவினதாகவே கொண்டு நிகழ்த்தப்பட்டன. குவிமையப் பொருளை ஊடுசரமாக்கி
கொல்லாஜ் முறையில் வழங்கியது சோதனை ரீதியிலான எனது பங்களிப்பாகும். இவ்வாறு
முழுமையாகக் கவிதையைத் தராமல் சிதைப்பது அக்கவிதையின் முழுமையைச் சிதைக்கும் என
எம்.ஏ. நுஃமான் என்னிடம் விமர்சித்தார். ஒரு கொல்லாஜ் (Collage) முயற்சியில்
எடுத்தாளப்படும் பொருள்கள் தம் தன்மையினின்று விடுபட்டு கொல்லாஜின் ரூபமயமாகி
விடும் என்பதே கொல்லாஜ் நியதி. அந்த ரீதியில் எடுத்தாளப்பெற்ற கவிதைகள் எனது
கொல்லாஜ் பின்னல்களுக்கூடாகக் குவிமையப் பொருளில் சங்கமித்து ஓருருப் பெருவதை நிகழ்வின் அனுபவம் எனக்கு உணர்த்துகிறது. எனவே
கவிதை இங்கு சிதைக்கப்படவில்லை. நிகழ்வின் பொருண்மை ‘சிதைவாக்கம்’ பெற்றுள்ளது
என்பதே உண்மையாகும்.
மூன்றாவதாக, நாடகீயக் கூறுமிக்க கட்புலப்
படிமங்களைச் சந்தமீதூர்ந்த ஒளிப் படிமங்களுடனும் காட்சிச் சித்திரமாக்குதல் –
ஒத்திசைக்கும் ஆதியிசை உடனிகழ்வு ஆகியவற்றுக்கு உரிய களமமைத்துள்ளேன்
என்ற போதிலும் இதுவரையிலான நிகழ்வுகளில்
ஒத்திகை உடன் பங்கேற்பாளர்களின் குரல் வெளிப்பாட்டில் ஏற்ற இறக்கங்கள் (The
modulation of Voice) தக்க முறையில் பக்க வாத்தியங்களின் நிகழ்வுடனான ஒத்திசைவு
(Harmony) இவை போல்வன் இன்னும் கைகூடவில்லை”.
படிப்பதற்குச் சற்றுக் கடினமான,
தனித்துவமிக்க மொழி நடைக்குச் சொந்தக்காரர் வே.மு.பொதியவெற்பன் எனும்
பொதிகைச்சித்தர். வேலம்மாள் முத்தையா என தாய் தந்தையரின் பெயர்களை முன்னொட்டாக
இணைத்துக் கொண்டவர். இவரது கட்டுரைகள் மேற்கோள்களால் நிறைந்தது என்கிற
குற்றச்சாட்டு உண்டு. தன் சொந்த எழுத்து என்கிற மாயையைத் தகர்ப்பதும் எழுத்துகளை
கொல்லாஜ் ஆக கலைத்துப் போடுகிறார். கவிதா
நிகழ்வில் அவர் செய்யும் செயல்பாடுகள் உரைநடையிலும் தொடர்வதைக் காணலாம். மேலும் இதன் மூலம் பல்வேறு
பக்கங்களையும் ஆய்ந்தறியும் சமூக விஞ்ஞானியாகிறார்.
அவர் தன்னைப் பற்றிப் பாடல்கள் பலவற்றில்
குறிப்பிட்டிருப்பார். அவற்றிலிருந்து சில:
‘என் தொழில்’ எனும் தலைப்பில் பறை – தொகை
நூலில் (ஆகஸ்ட் 1990) உள்ள பாடல்.
போலிகளின்
நரிமுகத்தைப்
பொய்ம்மைகளின்
அறிமுகத்தைத்
தோலுரித்துக்
காட்ட வந்தேன் மெய்யா – அத்
தொழிலில்
நான் சக்கலியே அய்யா!
ஒப்புர(வு)
ஓங்கிடவே
உள்மலங்கள்
நீங்கிடவே
துப்பரவுப்
பாங்குறவே மெய்யா – நான்
தூய்மைசெயும்
தோட்டிதா னய்யா!
நடமாட்டப்
பிணங்களுக்கும்
நாள்போட்டு
கணக்குமிட்டு
சுடுகாட்டில்
எரித்திடுவேன் மெய்யா – அச்
சுடலையாண்டி
வெட்டிதா னய்யா!
கலப்படத்துக்
கைவரிசை
இலக்கியத்துச்
சந்தையிலே
புலப்படவே
பிடிக்க வந்தேன் மெய்யா – நான்
புலனாயும்
உளவாளி அய்யா!
கமுக்கமெலாம்
வெளிச்சமிடக்
கலைவடிவிற்
பளிச்சிடவே
தமுக்கடித்தே
பாடவந்தேன் மெய்யா – நான்
தப்பறையும்
பறையன்தா னய்யா! -
‘தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்’ நூலின்
துரை,மடங்கன் முன்னுரையிலிருந்து…
“என் மார்க்க(ம்) மூதாதை பதினெண்மர் பள்ளி
ஈரோடும்
வடலூரும் சந்திக்கும் புள்ளி
என்
தீர்க்க தேடலுக்கே இல்லை முற்றுப்புள்ளி
இடை
இடையே மடைமாறும், தொடரும், காற்புள்ளி",
தஞ்சையில் நடைபெற்ற விமர்சனக் கூட்டமென்றில்
பாடலாகச் சொல்லப்பட்ட ஏற்புரை:
“நாற்றைப்
பறித்து நட்டாற் போல் வேற்று நிலத்தும் வேர் பிடிப்பேன்
ஊற்றுக்
கண்ணாய் மடைதிறந்து உலகளாவிடும் என் பயணம்
மண்ணில்
ஊன்றின என் பாதம் வெட்ட வெளிதான் என் ஞானம்
பண்ணில்
ஊறின என் கானம் பரவசத்தின் அதிமோனம்”,
‘கவிதாசரணில்’
இடம் பெற்றது,
“எவன்
அதிகாரத்த்தில் தேங்க மாட்டோனோ
எவனுக்குள்
அதிகாரம் தங்கமாட்டோதோ
அவனே
சித்தன் அவனே பித்தன்
அவனே
பித்தன் அவனே பிரேமிள்
அவனே
பொதிகைச் சித்தன்…”
‘கருமை
செம்மை வெண்மையைக் கடந்து…’ நூல் பின்னுரையில் உள்ளது:
“மன்பதை
எதிரியர் என் எதிரி
மானுடந்
தழுவிடில் சகபயணி
என்பதைச்
சொல்வதே என் வாழ்க்கை
இருப்பே
சிம்ம சொப்பனமாய்
யாதுமாகி
நிற்பதனால்
யாராகவும்
இங்கு நானில்லை
தீதும்
நன்றும் தரவாரா
திருவில்
நின்றதென் செம்மை”
– வே.மு.பொதியவெற்பன்
இடதுசாரி இயக்கச் செயல்பாட்டாளர்,
சி.பி.எம்மின் தமுஎச (இன்று தமுஎகச) தஞ்சாவூர் மாவட்டச் செயலாளாராகப் பணி
புரிந்தவர்.
மா.லெ.
குழுவினரின் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில் (புபஇ) சே.கோச்சடை, அ.மார்க்ஸ்,
பா.கல்யாணி, பழமலய் போன்றோருடன் இணைந்து
செயல்பட்டவர்.
கவிஞர்
சூரியமுகி எனும் பெயரில் சூரியக் குளியல் என்ற கவிதை மற்றும் பாடல்கள் நூலை
வெளியிட்டார். (புபஇ. வெளியீடு: ஜூன் 1986)
இப்போது பொதிகைச்சித்தர் என்ற பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார்.
தோழமை, சிலிக்குயில் பதிப்பாளர்; சிலிக்குயில்
புத்தக விற்பனையாளர். முனைவன் இதழாசிரியர், நிறப்பிரிகை ஆசிரியர் குழுவில் முதல்
இதழில் இடம்பெற்றவர்.
புதுமைப்பித்தன், பிரமிள் ஆய்வாளர்.
‘புதுமைப்பித்தன் கதைகள் அகலமும் ஆழமும்’ என்ற நூலை எழுதியவர். (பொன்னி வெளியீடு,
அக். 2006) புதுமைப்பித்தன், பிரமிள் பற்றிய இவரது இன்னொரு நூல்
‘புதுமைப்பித்தமும் பிரேமிள் சித்தமும்’ (மருதா வெளியீடு, நவ. 2005)
முன்பே
குறிப்பிட்ட கவிதா நிகழ்வு எனும் கவிதைக் கலை வடிவ இயக்குநர். நூலின் பெயர்
‘நிகழ்கலை அனுபவமாகும் கவிதையின் ஒன்னொரு பரிணாமம் (கவிதா நிகழ்வு அறிமுகமும்
‘போராடும் மானுடம்’ நிகழ்த்துப் பனுவலும்) சிலிக்குயில் வெளியீடு: நவ. 1989
சித்தர் மரபைக் கொண்டாடுபவர், தனது
புனைபெயரில் பொதிகைச்சித்தரானவர். இவரது சித்தர் மரபு பற்றிய ஆய்வு நுஉல்
‘மனமிறக்கும் சாகாக்கலை’ மனோரா, சென்னை 2005
தொகை
நூலாசிரியர்: பறை 1990 – சிலிக்குயில் வெளியீடு: 1990
பறை
2015 மணல் வீடு வெளியீடு: 2015
தொகுப்பு
நூல்கள் மற்றும் பிற நூல்கள்:
பொதியவெற்பன்
பொன்விழா மலர், இராசாராமன் அறக்கட்டளை, கங்கை கொண்ட சோழபுரம்.
புதுமைப்பித்தன்
சம்சார பந்தம் – கமலா புதுமைப்பித்தன் (புதுமைப்பித்தன் நூற்றாண்டு சிறப்பு
வெளியீடு: பரிசன்., டிச. 2005
சிலிக்குயிலுக்கு
ஒரு செங்கவிதாஞ்சலி 11.09.1980
இலங்கையிலிருந்து ஓர் இலக்கியக்குரல் –
01.07.1983
சிறுகதைகள்
தொகுப்பு:
‘வேர்மூலம்’
(நிகழ்தசாப்தச் சிறுகதைகள்), ருத்ரா – தஞ்சை (இவையிரண்டு பொதியின் மணிவிழா சிறப்பு
வெளியீடுகள்) 26.04.2008
திராவிட இயக்கத்தை எதிர்க்கும் ஜெமோ வை
விமர்சனம் செய்யும் இவரது விமர்சனக் கட்டுரை நூல்கள் இரண்டு. ஒன்று: பெரியார்
பரம்பரையும் ஜெயமோகச் சுயமோகமும் (பிரேமிளுடன்) கலைநிலா திருச்சி நவ. 2003.
இரண்டு: திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல். இதில் ஜெமோ வுடன் தமிழவன்.
கருப்புப்பிரதிகள் வெளியீடு: டிச. 2011
மணிக்கொடி ஆய்வு நூல்: ‘சொல்லின் மந்திரமும்
சொல் ஓய்ந்த மௌனமும்’ (முன்னீடியர், மணிக்கொடிக் கலைஞர்கள் பற்றிய ஆய்வு நூல்)
மருதா வெளியீடு, கவிதைகளாய்வு நூல்: ‘சமகாலக் கவிதைகளும் கவிதைக் கோட்பாடும்’
(பொதி மணிவிழா சிறப்பு வெளியீடு: வம்சி புக்ஸ், மே 2008
பதிப்பியல், மெய்யியல், இறையியல் ஆய்வுகளும்
இதழிய, கலை விமர்சனங்களுமான நூல்: ‘கருமை செம்மை வெண்மையைக் கடந்து…’ நியூ
செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு: ஜூலை 2015
தொல்காப்பிய, திருக்குறள் உரையியல் ஆய்வு நூல்:
‘தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்’ விஜயா பதிப்பக வெளியீடு: நவ. 2016
பொதியின் சமீபத்திய நூல், அன்னம்
வெளியீடாக…
புனைவுகளின்
அழகியலும் அரசியலும் மற்றும் கதையாடலாய்வுக் கட்டுரைகள்: ‘வானத்தின் மீது
மயிலாடக்கண்டேன் மயில் குயிலாச்சுதடி’ அன்னம் வெளியீடு: செப். 2018
பொதி பெற்ற விருதுகள்:
‘புதையுண்ட
மௌனங்களின் அகழ் மீட்பில்’ எனும் கையெழுத்துப்படிக்கு ஏர்வாடி மணல்வீடு மற்றும்
களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை விருது (24.01.2009). இவற்றில் சில
கட்டுரைகள் ‘தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்’, ‘கருமை செம்மை வெண்மையைக் கடந்து…’
ஆகிய நூல்களில் உள்ளன.
‘குறளி’
முதல் இதழில் வெளியான ‘தொ.ப.வின் எடுத்துரைப்பில் புனா ஒப்பந்தம்’ என்ற
கட்டுரைக்கு நக்கீரன் இதழின் ‘சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை’ சிறந்த அரசியற்
கட்டுரைக்கான விருது (15.06.2013)
தலைமுறைகள் கடந்து சமூக, கலை, இலக்கிய,
அரசியல் பெருவழியில் தொடர்ந்து தேடலும் விமர்சனமுமாக இயங்கி வருகிறார். அவரது
தேடலும் வாசிப்பும் படைப்புகளும் என்றும் தொடரட்டும்.
(இன்று (26.04.2020) தோழர் வே.மு.பொதியவெற்பன் (பொதிகைச்சித்தர்)
அவர்களின் 72 வது பிறந்த நாள் … )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக