வியாழன், ஏப்ரல் 23, 2020

பறவைகளை நேசிக்க, பாதுகாக்க ஒரு சூழலியல் கையேடு

பறவைகளை நேசிக்க, பாதுகாக்க ஒரு சூழலியல் கையேடு 

(நூலறிமுகம்தொடர்: 010)

மு.சிவகுருநாதன்

(அழகான தாளில் முழுவண்ணத்தில் எதிர் வெளியீடாக டிசம்பர் 2017 இல் வெளியான, ஏ.சண்முகானந்தம், முனைவர் சா.செயக்குமார் ஆகியோர் எழுதிய   ‘தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்’ என்ற  நூல் பற்றிய  பதிவு .)



      ‘தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்’ பறவைகள், பறவையியல் ஆய்வுகள், குறிப்புகள், காப்பிடச் சிக்கல்கள் என பல்வேறு தரவுகளைக் கொண்ட தகவல் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது. இதன் சிறப்பம்சம் அழகான தாளில் வண்ணப்படங்களுடன் கண்ணுக்கு விருந்து படைக்கும் ஒன்றாக உள்ளது. இதைக் காண்போர் அவ்விடங்களுக்குச் சென்று பறவைகளைக் காணும் உந்துதல் பெறுவர். வெறும் சுற்றுலா வழிகாட்டியாக நின்றுவிடாமல் சூழலியல் பாதிப்புகளையும் பேசுவதன் மூலம் இதன் பயன் உயர்கிறது. 

   பண்டைத் தமிழகத்தின் இயற்கை வரலாறு, நீர்நிலைகள் பற்றிய பதிவுகள், பழந்தமிழ் நூல்களில் பறவைகள் பற்றிய செய்திகள், வலசை போதல், இயல் - அயல் தாவரங்கள் மற்றும் விலங்குகள், பறவைகளின் பயன்பாடுகள், உடலமைப்பு, இனப்பெருக்கம், பறவைக்கூடுகள், அதன் முட்டைகள், இந்தியப் பறவையியல் ஆய்வுகள், அதன் முன்னோடியான சாலிம் அலி, பறவைகள் காப்பிட வரலாறு, இந்திய, தமிழகப் பறவைகள் காப்பிடங்கள், தேசியப் பூங்காக்கள் என விரிவான செய்திகள் முன்னுரையாகப் பேசப்படுகின்றன. பறவையியலைப் புரிந்துகொள்ள இயற்கையோடு உறவாட இது உதவிகரமாக இருக்கும்.

    அடுத்த பகுதியில், 

  • பழவேற்காடு
  • வெள்ளோடு
  • கரைவெட்டி
  • வேட்டங்குடி
  • கோடியக்கரை (கோடிக்கரை அல்ல)
  • கரிக்கிலி
  • வேடந்தாங்கல்
  • உதயமார்த்தாண்டபுரம்
  • வடுவூர் (வடூவூர் அல்ல)
  • சித்திரங்குடி
  • மேல்செல்வனூர் – கீழ்செல்வனூர்
  • காஞ்சிரங்குளம்
  • கூந்தன்குளம்
  • சுசீந்திரம்
  • திருப்புடை மருதூர் (இது காப்பிடமாக அறிவிக்கப்படவில்லையெனினும் இங்கு பறவைகள் அதிகம் கூடுவதால் இவற்றின் விவரமும் இணைக்கப்பட்டுள்ளது.)
 
    ஆகிய தமிழகப் பறவைகள் காப்பிடங்களின் பெயர்க்காரணம், பரப்பளவு, அங்குள்ள பறவைகள், முக்கியத்துவம், வாழ்விடச் சிக்கல்கள் போன்றவைப் பட்டியலிடப்படுகின்றன. மேலும் அவை குறித்து அழகான படங்களும் பக்கங்களை நிறைக்கின்றன. 

    பறவையியல் அறிஞர் சாலிம் அலி (பக்.77), பறவை மனிதர் பால்பாண்டி (பக்.149), பறவை ஆர்வலர் திருப்பூர் அம்சா (பக்.75), திருப்புடைமருதூர் பறவை மனிதர் நாராம்பூ (பக்.166), வங்கரி மாத்தாய் (பக்.37), மரம் நட்டவர்கள் – பக்தூர் ராணா, சாலு மரத்திம்மக்கா (பக்.41), கார்ல் லின்னேயஸ் (பக்.47) போன்ற பறவையியல் மற்றும் சூழியலாளர்கள் தகுந்த இடத்தில் அறிமுகம் செய்யப்படுகின்றனர். 



    மாநில மலர் - மாநில மரம் (பக்.15), மாநிலப் பறவை – மாநில விலங்கு (பக்.16), அலையாத்திக் காடுகள் (பக்.80), உலகின் பெரிய நன்னீர் ஏரியான பைக்கால் ஏரி (பக்.25), பறவைகள் பற்றிய செய்திகள் (பக்.103,107&119), வெளி மான் (பக்.112&113), தொண்டு குதிரை (பக்.116), பறவைகளுக்கு வளையமிடுதல் (பக்.117), பசுமைப்புரட்சி (பக்.123), தெலங்கானா அமீன்பூர் ஏரி (பக்.151), பறவைகளின் நிறமிக்குறைபாடு (பக்.155), அயல் உயிர்கள் – திலேப்பியா (159), பறவைக்காய்ச்சல் (பக்.167) என பல சூழியல் செய்திகள் ஆங்காங்கு தரப்படுகின்றன. 

    இறுதியாக தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள், நீர்நிலைகள் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. பல மாவட்டங்களில் பறவைக் காப்பிடங்களே இல்லை. எனவே அங்கு பறவைகளோ, நீர்நிலைகளோ இல்லை என்று பொருளல்ல. அதற்கான இடங்கள் பல உள்ளன. அவற்றை மேம்படுத்தி பறவைகளையும் சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. 

   பின்னிணைப்பாக பறவை பார்த்தலுக்கான (Bird Watching) அடிப்படைகள், செல்லும்போது எடுத்துச் செல்ல வேண்டியவை, கடைப்பிடிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை அனைத்தும் பட்டியலிடப்படுகின்றன. இந்திய மாநிலங்களின் பறவைகள் காப்பிடப் பட்டியலும் உள்ளது. தமிழக நீராதாரங்கள், பறவை நூல்கள், பறவைகள் அதிகம் கூடுமிடங்கள், பறவைகளின் தமிழ், ஆங்கில, அறிவியல் பெயர்கள், அவற்றின் உணவுப்பழக்கம், பசுமை நாள்கள், காப்பிட முகவரிகள் என நீண்ட இணைப்புகளும் உள்ளன. 

   சூழலியல் அழிவிற்கானக் காரணப்பட்டியலில் (பக்.170) சதுப்புநிலங்களையும் அலையாத்திக் காடுகளையும் (கண்டல்) சீரழிக்கும் இறால் பண்ணைகளைப் பற்றிய பேச்சே இல்லை என்பது வருத்தமாக உள்ளது. அலையாத்திக் காடுகள் (பக்.80) குறிப்பிலும் சீர்கேடு குறிப்பிடப்படவில்லை. மேலும் கோடிக்கரையின் சிக்கல்களிலும் (பக்.115) இதைப் பற்றிய தரவுகள் இல்லை. அனல் மின்நிலையங்களுடன் இறால் பண்ணைகளும் பேரழிவிற்குக் காரணமாக அமைகின்றனர். 

     வடுவூர், உதயமார்த்தாண்டபுரம் போன்ற பகுதிகளில் வேளாண் கழிவுகளுடன் நன்னீர் மீன் பண்ணைகள், அவற்றின் வேதிப்பொருள்களும் பறவைகளையும் சூழலையும் பாதிப்பதையும் அறியலாம். பூச்சிக்கொல்லி மருந்துகள் (பக்.170) என்று சொல்ல வேண்டாம்; பூச்சிக்கொல்லிகளே போதும். வேளாண் நஞ்சுகளினால் பாதிக்கப்பட்ட உயிரிகளே இப்பறவைகளின் உணவாக உள்ளது. இதனால் அவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன. 

    “திருமறைக்காடு காலப்போக்கில் மருவி, கோடிக்கரையானதாகக் கருத இடமுண்டு”, (பக்.110) என்று சொல்லப்படுகிறது.  ‘திருமரைக்காடு’ ‘திருமறைக்காடு’ எனத் திரிந்துப் பின்னர் வேதாரண்யம் என்று மருவியது எனலாம். கோடிக்கரை கோடியக்கரை என்று மருவியது என்று வேண்டுமானல் சொல்லலாம். கோடிக்கரை என்று தற்போது யாரும் சொல்வதில்லை; கோடியக்கரை அருகே உள்ள காடு கோடியக்காடு என்றே அழைக்கப்படுகிறது.

  தமிழகப் பள்ளிப் பாடநூல்களைப் போல பெரும்பாலான தரவுகளுக்கு ‘விக்கிபீடியா’வைப் பெரிதும் நம்பியிருப்பதை  அதனை அப்படியே இந்நூலில் பயன்படுத்துவது மிகுந்த அயர்ச்சியைத் தருவன. இவற்றின் தரவுகளை கொஞ்சமாவது ஒப்புநோக்கி சரிசெய்துப் பயன்படுத்துவது நல்லது. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நூல் இந்த அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டுவது நலம். 

  எடுத்துக்காட்டாக உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் காப்பிடம், “திருவாரூரிலிருந்து 65 கி.மீ. தொலைவில்”, (பக்.129) இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது ‘விக்கிபீடியா’ தரவு. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்றால் சுமார் 45 கி.மீ. தொலைவிலுள்ளது. திருவாரூரிலிருந்து மன்னார்குடி – முத்துப்பேட்டை வழியாகச் சுற்றிவந்தால்  65 கி.மீ. ஆகலாம். கோடியக்கரை “வேளாங்கண்ணியில் இருந்து 28 கி.மீ. தூரத்தில்”, (பக்.111) என விக்கி தரவை அப்படியே சொல்கிறது நூல். மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினத்திலிருந்து தொலைவைக் குறிப்பிடுவதே சரி (40 கி.மீ.). வடுவூர் தஞ்சைக்கு அருகில் இருப்பதால் (பக்.133) அவ்வாறேக் குறிப்பிடலாம். 

   காப்பிட முகவரிகளில் (பக்.209) கோடியக்கரை, வடுவூர், உதயமார்த்தாண்டபுரம் ஆகிய மூன்றுக்கும் நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலக முகவரியே உள்ளது. திருவாரூரில் மாவட்ட வன உயிரினக் காப்பாளர் இல்லை போலும்! பெரம்பலூர் மாவட்ட கரைவெட்டிக் காப்பகத்திற்கும் நாகப்பட்டின முகவரி குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சுசீந்திரம், ஊசுட்டேரி ஆகிய இடங்களுக்கு முழு முகவரி இல்லை. (பக்.210) விழுப்புரம் மாவட்ட வன அலுவலகம் புதுச்சேரியில் உள்ளதா? 

   பசுமை நாள்கள் பட்டியலில் பறவையியல் அறிஞர் சாலிம் அலி பிறந்த நாள் டிசம்பர் 12 என்றுள்ளது. (பக்.208) ச.முகமது அலி எழுதிய நூலில் 1896 நவம்பர் 12 இல் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. (பக்.17, தென் திசை வெளியீடு) எது சரி? எது தவறு? என்று தெரியவில்லை. சாலிம் அலியின் நினைவு நாள் 1987 ஜூன் 20 என அந்நூலில் உள்ளது. பசுமை நாள்களில் அது குறிப்பிடப்படவே இல்லை. ‘விக்கி’ ஒரே கட்டுரையில் ஜூலை 27, ஜூன் 20 ஆகிய இரு நாள்களை அவர் இறந்த நாளாகச் சொல்கிறது. 

    நன்றிக்குரியவர்கள் பட்டியலில் ஏ.சண்முகானந்தம், சா.செயக்குமார் என நூலாசிரியர்கள் இருவரின் பெயரும் இடம்பெறுவது சற்று வியப்பாக உள்ளது. 

"மரங்கள்,
வளமான மேல் மண்ணை நிலைப்படுத்துகிறது.
நிழல் தருகிறது.
பழங்களைத் தருகிறது.
கார்பனை உள்ளிழுத்து, மனிதனுக்கு தேவையான 
உயிர்வளியை (ஆக்சிஜன்) தருகிறது.
காற்றின் கலவையை ஒழுங்கு செய்கிறது.
மரங்கள்…
மனித குலத்திற்குக் கிடைத்த மாபெரும் பரிசு…",   (பக்.33&34)

     என்று வங்கரி மாத்தாயின் வரிகள் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. அது ஆங்கிலத்தில் எப்படியுள்ளது என்று நமக்குத் தெரியவில்லை. ‘உள்ளிழுத்தல்’ (inhale) என்பது சுவாசத்தையே குறிக்கும். “கார்பனை உள்ளிழுத்து”, என்று சொல்வது தகாது. “கார்பன் டை ஆக்சைடை உணவு தயாரிக்க அல்லது உணவுக்காக எடுத்துக் கொண்டு”, என்று கூறலாம். “மனிதனுக்கு தேவையான ஆக்சிஜன்”, மட்டுமல்ல; தாவரங்களுக்கும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன்”, என்பதேப் பொருத்தமானது. தாவரங்கள் சுவாசிக்க ஆக்சிஜன் வேண்டாமா என்ன? பாடநூல் குழப்பங்களைப் போல சூழலியல் நூலும் குழப்பங்களுக்கு வித்தாகலாமா?

நூல் விவரங்கள்:
 தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்
ஏ.சண்முகானந்தம்
முனைவர் சா.செயக்குமார்

முதல் பதிப்பு: டிசம்பர் 2017
பக்கங்கள்: 216 (வண்ணப்படங்களுடன்…)
விலை: 500

வெளியீடு:
எதிர் வெளியீடு,
96, நீயூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642002.
பேச: 04259 226012  9942511302
இணையம்:  www.ethirveliyedu.in

மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக