ஞாயிறு, ஏப்ரல் 26, 2020

இயற்கையும் கொஞ்சம் சிறார் விளையாட்டுகளும்


இயற்கையும் கொஞ்சம் சிறார் விளையாட்டுகளும்

(நூலறிமுகம்தொடர்: 013)

மு.சிவகுருநாதன்

(திருப்பூர்  குறிஞ்சி பதிப்பக வெளியீடான, சூழலியலாளர் கோவை சதாசிவம்  எழுதிய    பல்லி, தவளை, சில்லுக்கோடு  ஆகிய மூன்று நூல்கள் குறித்த  பதிவு.)


பல்லி (ஓர் அறிவியல் பார்வை) 

   பல்லித் தவறி கீழோ அல்லது மனித உடலிலோ விழுந்தால் ‘பஞ்சாங்கம்’ புரட்டும் மனிதர்களில் ஒருவராக நியூட்டன் இருந்திருந்தால்? அறிவியல் எப்படி வளர்ந்திருக்கும்? “வயது முதிர்ந்து உடல் தளர்ந்து, பிடிமானமற்று  அல்லது நோய்வாய்ப்பட்டு உணவு உண்ணாமல் கீழே பல்லி விழுகிறது”, (பக்.09) என்று தெளிவைத் தருகிறார் ஆசிரியர். 

     எப்போதாவது இப்படி விழும் பல்லிகள் சுவற்றில் தலைகீழாகக்கூட ஓட்டிக்கொள்வதும் கண்ணாடியில் செல்வதையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? பல்லியின் கால் பாதங்களில் உள்ள நுண்ணிய காற்றுப்பைகள் அவ்விடத்தை வெற்றிடமாக்கி ஒட்டிக்கொள்கிறது. இந்த நுட்பத்தைக் கொண்டு மருந்துவ அறிவியல் மேம்பாடு அடைந்திருக்கும் செய்தியும் நமக்குக் கிடைக்கிறது. 

   உயிரிகள் எதற்கெல்லாம் ஒலியெழுப்பும்? உணவு, இணைதேடல், இனச்சேர்க்கை, சண்டை என அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பல்லி மட்டும் சோதிடம் சொல்லும் உயிரியாகிப்போன மூடநம்பிக்கை இங்கு தகர்கிறது. 

    உதட்டில் வரும் கொப்பளங்கள் பல்லியின் சிறுநீர்  அல்லது எச்சத்தால் வருவதாக ஒரு மூடநம்பிக்கையுண்டு. இதுவொரு தொற்றுநோய், பல்லிகள் பழிபோட வேண்டாமென்கிறார் ஆசிரியர். 

  பல்லியின் உடலில் உள்ள நுண்ணுயிரிகள் மனித ரத்தத்தில் சேரும்போது வாந்தி, குமட்டல், காய்ச்சல், வயற்றுப்போக்கு ஏற்படுகிறது. எனவே, பல்லி விழுந்த உணவு நஞ்சாகுமா? என்ற வினாவிற்கு விடை கிடைக்கிறது. 

   இயற்கையைப் பகுத்தறிவோடு உற்றுநோக்கி ஆராய்ந்தறியும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது இம்மாதிரியான மூடத்தனங்களை அகற்ற உதவும் என்பதே ஆசிரியரின் கருத்தாக உள்ளது. 

தவளை (நெரிக்கப்பட்ட குரல்)

    குழந்தைகளுக்காக தவளை பேசுவதுபோன்று எளிய மொழியில் எழுதப்பட்ட நூல் இது. இன்று கொசுக்கடிக்கு எவ்வளவு சிரமங்களையும் துயரங்களையும் எதிர்கொள்கிறோம். பல்வேறு வேதிப்பொருள்களைப் பயன்படுத்தி நமது உடலையும் சூழலையும் ஒருசேரக் கெடுத்துக் கொள்கிறோம். மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்களில் சிக்குகிறோம். 

    ஒரு சூழலியல் மண்டலத்தில் தவளைகள் குறிப்பிட்ட அளவிருந்தால் அங்கு கொசு உற்பத்தி கட்டுப்பாட்டில் இருக்கும். ஏனெனில் தவளையின் உருமாற்றத்தில் உள்ள தலைப்பிரட்டைகள் கொசுவின் புழுக்களை உணவாக உட்கொள்ளும். உணவுச்சங்கிலி உருக்குலைந்து சூழல் அலங்கோலமாகியுள்ளது. இன்று தவளைகள் சிவப்புப் பட்டியலில் உள்ளன. இது நமது சூழலியச் சீர்கேட்டை உணர்த்தும் தொடக்கப் புள்ளியாகும். 

    இரு வாழ்விகளான தவளைகளில் இந்தியாவில் சுமார் 350 இனங்கள் இருக்கின்றன. அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஐந்து தவளையினங்கள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தவளைக்கு நீர் ஓரு வாழிடம் மட்டுமே; உணவல்ல என்பதும் தவளையால் நன்னீரில் மட்டுமே வாழ்முடியும் உப்பு நீரில் வாழ இயலாது என்பதையும் இந்நூல் உணர்த்துகிறது. 

  வெளிக்கருவுறுதல் நடைபெறும் உயிரிகள் என்றாலும் வெளியேற்றப்படும் முட்டைகளை ஆண் தவளைகள் பாதுகாப்பது பெண்தவளையின் முதுகில் முட்டைகளை ஒட்டச்செய்து குஞ்சுகளைப் பாதுகாக்கும் செய்கைகளும் நமக்கு வியப்பைத் தருவன. தவளைகளுக்கும் தேரைகளுக்கு உள்ள வேறுபாடுகளும் சுட்டப்படுகின்றன. 

   இவ்வாறு ஒவ்வொரு உயிரினங்களிலும் பல்வேறு அரிய பண்புகள் காணப்படுகின்றன. அவற்றை உற்றுநோக்கி, நூல்களை வாசித்தறிந்து இயற்கையோடு அதிக புரிதலும் உறவாட  இம்மாதிரியான சூழலியல் நூல்கள் நமக்குப் பெரிதும் உதவுவதை மறுக்கவியலாது. 

  சில்லுக்கோடு (தாண்ட முடியாத நினைவுகள்)

    இயற்கையோடு இயைந்த விளையாட்டுக்களைத் தொலைத்துவிட்டோம். இன்றைய ‘கார்ப்பரேட்’ விளையாட்டுக்கள் விளையாடுவதற்கல்ல; சினிமாவைப் போல பார்த்து மட்டும் ரசிப்பது என்கிற நிலையை எட்டியிருக்கிறது. இத்துடன் இணையதள விளையாட்டுகளும் சேர்ந்து குழந்தைகளோடு விளையாட்டுக்களையும் விழுங்கிய நீலத் திமிங்கிலங்களாக (Blue Whale) இவைகள் உள்ளன. 

   காலங்காலமாக கிராமங்களில் குழந்தைகள் விளையாடிய சில விளையாட்டுக்களை மீட்டெடுத்து அறிமுகம் செய்வதன் வாயிலாக இன்றைய குழந்தைகளுக்கான விடுதலையும் கூடவே நம்மையெல்லாம் குழந்தைப்பருவத்திற்குக் கூட்டிச் செல்லும் அதிசயமும் ஒருங்கே நிகழ்கிறது.  

   விளையாட்டு வெறும் பொழுது போக்கன்று; உடல், உள்ள நலனைப் பெற விளையாட்டுகள் அவசியம். அது இயற்கையோடு இணைந்திருந்தால் சூழலியல் புரிதல் அவர்களுக்குக் கிடைக்கும். கொங்கு வட்டார வழக்கில் ‘குள்ளாம் பூச்சி’ என்றழைக்கப்படும் கூம்பு மணற்குழியை உண்டுபண்ணி அதனுள் இருக்கும் பூச்சியுடன் விளையாடியதை முன்னுரையில் விவரிக்கிறார். எறும்பு உள்ளிட்ட உயிரிகளை உணவுக்காகப் பிடிக்கும் அமைப்புதான் இந்த கூம்பு மணற்குழி என்பதை அறிந்து வியக்கிறோம். தொட்டால் சுருங்கியுடன்  விளையாடாத கிராமத்துக் குழந்தைகளும் இருக்கக்கூடுமோ! 


  • பலிஞ்சடுகுடு
  • பச்சைக் குதிரை
  • மரப்பாச்சி
  • கிட்டிபுள்
  • நுங்கு வண்டி
  • நொண்டி
  • கும்மாயம்… கும்மாயம்…
  • கோலிக் குண்டு
  • குலை குலையா முந்திரிக்கா
  • பல்லாங்குழி
  • கண்ணாமூச்சி
  • தாயம்
  • கிச்சி கிச்சி தாம்பாளம்
  • சங்கிலி… புங்கிலி…
  • பம்பரம்
  • தட்டாமாலை
  • ஒரு குடம் தண்ணீ ஊத்தி…
  • தட்டாங்கல்
  • பட்டம்
  • நிலாச் சோறு
  • சில்லுக்கோடு

        என 21 சிறு விளையாட்டுக்களை அறிமுகம் செய்கிறது இந்நூல். இம்மாதிரியான சிறார் விளையாட்டுக்களை மீட்டெடுத்து அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பணிகளில் தற்போது பலர் (‘பல்லாங்குழி’ இனியன்) ஈடுபட்டிருப்பது மகிழ்வளிக்கிறது. 

     
நூல் விவரங்கள்:

பல்லி (ஓர் அறிவியல் பார்வை)
கோவை சதாசிவம்
மூன்றாம் பதிப்பு: மார்ச் 2017
பக்கங்கள்: 32
விலை: 25

தவளை (நெரிக்கப்பட்ட குரல்)
கோவை சதாசிவம்
மூன்றாம் பதிப்பு: மார்ச் 2017
பக்கங்கள்: 32
விலை: 25

சில்லுக்கோடு (தாண்ட முடியாத நினைவுகள்)
கோவை சதாசிவம்
இரண்டாம் பதிப்பு: மார்ச் 2017
பக்கங்கள்: 72
விலை: 60

 வெளியீடு:

குறிஞ்சி பதிப்பகம்,
4/610, குறிஞ்சி நகர்,
வீரபாண்டி – அஞ்சல்,
திருச்சி – 641605.
கைபேசி: 9965075221  9894777291
மின்னஞ்சல்:  kurinjisadhasivam@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக