கல்வி வகுப்பறைக்கு வெளியில் இருக்கிறது!
(நூலறிமுகம்… தொடர்:
006)
மு.சிவகுருநாதன்
(நீலவால்குருவி (புலம்) பதிப்பக
வெளியீடான ‘கலகல
வகுப்பறை’ சிவா எழுதிய ‘கரும்பலகைக்கு
அப்பால்…’, (2018) கல்வியினாலாய பயனென்கொல்?’ (2019) ஆகிய இரு குறு நூல்கள்
குறித்த பதிவு.)
வகுப்பறைகள் குழந்தைகளால் நிறைந்தது. உண்மைதான்.
ஆனால் அதிகாரம் யாரிடம் உள்ளது? ஜனநாயகப்படி பெரும்பான்மைக்கே அதிகாரமளிக்க வேண்டும்.
இங்கு ஜனநாயகத்திற்கு வேலையில்லை. இங்கு நிறைந்திருப்பது கலை - பாடத்திட்டங்கள், பாடநூல்கள்,
தேர்வுகள், ஆசிரியர்கள் என ஆதிக்கம், அதிகார மையங்களாய்…
மேற்கண்டவற்றைத் தவிர பிறவற்றுக்கு கல்விப்புலத்திற்குள்
இடமில்லை. கதைத் தாத்தாவை அல்லது கதைப்பாட்டியை அனுமதிக்குமா வகுப்பறை? ஒரு சினிமாவை
ஒரு ஓவியனை, ஒரு சிற்பியை எப்போதேனும் உள்ளே விடுமா? பாடத்திட்டங்கள், பாடநூல்கள் தாண்டி எதையும் உள்ளே
விடாத செல் சவ்வாகிப் போனதேன்? பாடநூல்களின் நவீன ஓவியங்கள் உண்டா என்று நண்பர் கேட்டார்.
தேடிப்பார்த்தேன்; கிடைக்கவில்லை.
+1, +2 பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ் கூட ஓவியக்கலைக்கு
இடமில்லை. நாடகவியல் (சினிமா, அரங்கம்) என ஏதோ அவர்கள் முடிவு செய்பவை மட்டுமே இருக்கிறது.
இவற்றை அனுமதிக்காத வகுப்பறையின் அதிகாரம், ஆதிக்கம் சினிமாவை நுழையவிடுமா?
ஆனால்
ஒவ்வோராண்டும் குழந்தைகளிடம் ₹10 பெற்றுக்கொண்டு குழந்தைகள் சினிமா
என்று அபத்த சினிமாக்களை காடுவதுண்டு. நண்பர் சிவா ‘கரும்பலகைக்கு அப்பால்…’ நூலில்
ஆசிரியர் குறித்த ஆங்கில, மலையாள, கொரியன், இந்தி, சீன மொழிகளில் வெளியான 12 திரைப்படங்களை
அறிமுகம் செய்கிறார். ஆசிரியர்கள் இப்படியும் இருக்கலாம் என ஒரு மாதிரிகளை இவர்கள்
உருவாக்குகிறார்கள்.
வெகு அபத்தமாக நடத்தப்படும் ஆசிரியர் பணியிடைப்
பயிற்சிகளில் இத்தகைய படங்களையும் நல்ல குறும்படங்களையும் திரையிட்டு ஆசிரியர்களை விவாதிக்கச்
செய்து அவர்களது மனப்பான்மையை மாற்ற முனையலாம்.
பெரும்பாலான திரைப்படங்களில் வரும் புதிய சிந்தனையுடைய
ஆசிரியர்கள் தனிப்பள்ளிகளை உருவாக்குவதைப் பார்க்கிறோம். இருக்கின்ற சமூக, அரசியல்
அமைப்பில் மாற்றங்களை உருவாக்காமல் தனித்த கல்விக்கூடங்களையோ மாதிரிகளோ உருவாகுவது
எதனை நோக்கிச் செல்லும் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.
நமது சூழலில் பொதுத்தேர்வுகள் இல்லாத வகுப்புகளில்
பல புதிய முயற்சிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவதும் ‘கனவு ஆசிரியராக’ வருவதுமான செய்திகள்
தொடர்கின்றன. இவை ஒரு நிலையில் மிகத் தேக்கமடைகின்றன. இவற்றிற்கு பொதுத்தேர்வுகளும்
ஒரு காரணம்.
வளரிளம் பருவச் சிக்கல்களை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்?
பாலியல் கல்வி அல்லது பாலியல் சார் விழிப்புணர்வு இங்கு எவ்வளவு உள்ளது? எட்டாம் வகுப்பு
முதலே அறிவியலில் மனிதனது இனப்பெருக்க மண்டலம் விலாவாரியாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலும்
அவை ஆசிரியர்களால் தாண்டிச் (Skip) செல்லப் படுகின்றன. மேலும் இவை வெறும் பாடங்களேத்
தவிர கலையாக உருவாக்கம் பெறாதவை. எனவே இவற்றின் வழியே பாலியல் கல்வியையோ அல்லது பாலியல்
விழிப்புணர்வையோ உண்டாக்க இயலாது. இந்த இடத்தை திரைப்படங்களால் நிரப்ப இயலும். இதைப்
போன்ற பல்வேறு களங்களில் சினிமாக்கள் பயன்படும். இந்நூல் ஆசிரியர் குறித்த திரைப்படங்களை
அலசுகிறது. சிவா தொடர்ந்து குழந்தைகள், கல்வி சார்ந்த படங்களை அறிமுகம் செய்கிறார்.
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
திரையரங்குகளில்
செய்திகள் மக்கள் தொடர்புத் துறையின் அரசு விளம்பரப்படங்களை (News Reel) படங்களுக்கு
முன்பாகத் திரையிடுவர். இதைத் தவிர்ப்பதற்காகவே மக்கள் தாமதமாக அரங்கினுள் நுழைவதுண்டு.
பழங்காலத்தில் போர் குறித்த செய்திப்படங்கள் அதிகமிருக்கும். எனவே இதை மக்கள் ‘War
Reel’ என்றே அழைத்தனர். அடுத்த கட்டத்தில் மத்திய அரசின் விளம்பரப் படங்கள் பெருமளவு
இந்தியில் திரையிடப்படும். இவற்றைப் பார்க்க யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதைவிட
ஒரு நிமிட விளம்பரம் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரையும் வசீகரிப்பதாக அமைந்துவிடும்.
புதிய பாடநூல்களில் விரைவுத் துலங்கல் குறியீடுகளைப் (QR Code) பார்க்கும்போது
மேலே உள்ள நிகழ்வுகள்தான் நினைவுக்கு வருகிறது. செய்திப்படங்களை விட மிக மோசமாகத் தயாரிக்கப்பட்ட
இந்த வீடியோக்கள் கற்றலில் பெரிய தாக்கத்தை நிகழ்த்த வாய்ப்பில்லை. அடிப்படையின்றி
வெட்டி ஓட்டப்பட்ட படங்கள் அல்லது காணொளிகள் ஒரு வகையில் இன்னல் தருவதாகவும் அமைகிறது.
பாடநூல் பிழைகளைக் கூட கண்டுபிடிக்கிறோம். இவற்றிலுள்ள அபத்தங்களை என்ன செய்வது?
தொழிற்நுட்பம் என்பது கற்றலில் ஒரு பகுதியாகவே
இருக்க முடியும் அதை முழுவதுமாக ஆக்ரமிக்க அனுமதிக்க முடியாது. மேலும் இதை பெருஞ்சாதனையாகக்
கொள்வதும் கல்வியின் அவலமாகும். ‘கல்வியினாலாய பயனென்கொல்?’ நூலில் உள்ள QR
Code, எல்லாருக்குமான தொழில்நுட்பம் ஆகிய கட்டுரைகள் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.
இந்நூலில்
உள்ள 14 கட்டுரைகளின் மைய இழை குழந்தைகள், கல்வி, ஆசிரியர்கள் என ஊடுபாவியுள்ளது. ஆசிரியர்களுக்கு
வழங்கப்படும் பயிற்சியின் நிலைகளை ‘கனவுப் பயிற்சி’ எடுத்துரைக்கிறது. குழந்தைகளின்
நிலை, அவர்களது தனித்திறன்கள் எவ்வாறு கல்வியால் அணுகப்படுகின்றன என்பதையும் இத்தொகுப்பிலுள்ள
கட்டுரைகள் பேசுகின்றன.
செயல் வழிக்கற்றல்,
திறனடைவுகள், செயல்பாடுகள் அனைத்தும் எங்கோ யாரால் மொண்ணையாக வடிவமைக்கப்பட்டு ஆசிரியர்கள்,
குழந்தைகள் அனைவரிடமும் திணிக்கின்ற செயல்கள்தானே ஆண்டுதோறும் நடக்கிறது!
குழந்தைகளால் அவர்களது தாய்மொழியிலேயே வாசிக்க
இயலவில்லை என்பதே இங்கு யதார்த்த நிலையாக உள்ளது. பாடநூல்கள் குழந்தைகள் வாசிப்பதற்கு
ஏற்றதாக உள்ளனவா? பாடநூல்களைத் தாண்டிய வாசிப்புப் பயிற்சிகள் இல்லாமற்போனதும் இலகுவான
மொழிநடைகளில் பாடநூலைத் தயாரிக்க இயலாமற்போனதும் நமது கல்வியின் அவலமே. இவற்றை இந்நூல்
சுட்டுவதோடு அதற்கான செல்வழிகளையும் நமக்குக் காட்டுகிறது. சிறிய நூல், சிறிய கட்டுரைகள்
பலரை எளிதில் சென்றடைய வாய்ப்பிருக்கிறது. கல்வியில் மாற்றம் உண்டாக இதுவும் உதவட்டும்.
நூல் விவரங்கள்:
கரும்பலகைக்கு
அப்பால்… (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
கலகல வகுப்பறை சிவா
முதல் பதிப்பு: ஜனவரி 2018
பக்கம்: 80
விலை: ₹ 70
கல்வியினாலாய
பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
கலகல வகுப்பறை சிவா
முதல் பதிப்பு: ஜனவரி 2019
பக்கம்: 68
விலை: ₹ 60
இரு
நூல்களும் வெளியீடு:
நீலவால்குருவி (புலம்)
அலைபேசி: 9840603499
9442890626
மின்னஞ்சல்: neelavalkuruvi@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக