ஞாயிறு, ஏப்ரல் 05, 2020

தாவரங்கள் எதை சுவாசிக்கும்?


தாவரங்கள் எதை சுவாசிக்கும்?


 (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)


மு.சிவகுருநாதன்

   (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 71) 

  
7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை:


    இதே தலைப்பில் ஒரு கட்டுரையை ‘எனது கல்விக் குழப்பங்கள்’ நூலில் காணலாம். தேவைப்படுவோர் கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கி வாசிக்கலாம்.


     மீண்டும் அதே தலைப்பில்  எழுத நேர்வது கெடுவாய்ப்பு என்றே கூற வேண்டும்.

     பொதுவாக உயிரினங்கள் எதை சுவாசிக்கும் என்றுதான் வினவ வேண்டும். தாவரங்கள், விலங்குகள் என ஒட்டுமொத்த உயிரினங்களின் மூச்சாதாரம் உயிர்வளி எனப்படும் ஆக்ஸிஜன் மட்டுமே. தாவரங்கள் ஒளிச்சேர்க்கை என்ற உணவு தயாரித்தலை அதுவும் மனிதனால் இயலாதச் செயலைச் செய்கின்றன. அப்போது சுவாசத்திற்கு மாற்றாக கார்பன் டை ஆக்சைடு (கரியமில வாயு) எடுத்துக்கொள்ளப்பட்டு ஆக்சிஜன் வெளியிடப்படுகிறது. இதன் மூலமே வளிமண்டலத்திற்கு மீண்டும் ஆக்சிஜன் கிடைக்கிறது. இதனால் குழப்பம் உண்டாகிறது. எடுத்துகொள்வது என்றால் சுவாசிக்க மட்டுமல்ல, ஒளிச்சேர்க்கைக்கும்தான் என்கிற புரிதலை கல்வி உருவாக்கியிருக்க வேண்டும்.

      ஆனால் எட்டாம் வகுப்பு III பருவ அறிவியல் பாடநூல் தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்க எடுத்துக்கொள்வதாக தவறான தகவலை அளிக்கிறது. 


‘உலக வெப்பமயமாதல்’ எனும் தலைப்பிலுள்ள கீழ்க்கண்ட வரிகளைப் படியுங்கள்.

    “வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை நாம் உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடை கழிவுகளாக வெளியிடுகிறோம். இதையொட்டி  மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி  நமக்கு ஆக்ஸிஜனை வழங்குகின்றன”.  (பக்.110)
  
ஆங்கில வழியில்,

    “We inhale oxygen present in the atmosphere  and release carbon dioxide as waste. In turn trees  absorb the carbon dioxide and provide us the  oxygen during photosynthesis. Deforestation  reduces the number of trees and hence the  amount of carbon dioxide accumulates in the  atmosphere”. (Page:96)

   “நாம் ஆக்ஸிஜனை உள்ளிழுக்கிறோம். இதையொட்டி  மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சிகின்றன”, எனில் நாம் உள்ளிழுப்பது சுவாசம் என்றால் தாவரங்கள்  கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதும் சுவாசம் என்றுதானே பொருள். “தாவரங்கள்  கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கின்றன”, என்ற பொருளில் ஓர் அறிவியல் பாடம் பேசும் நிலை நம்மை எங்கு கொண்டு சேர்க்கும்? 




      ஆங்கில வழியில், “In turn trees  absorb the carbon dioxide and provide us the  oxygen during photosynthesis”, என்று சரியாகவே எழுதியுள்ளனர். அதைத் தமிழில் பெயர்த்த புத்திசாலிகள்,  ‘during photosynthesis’ என்ற சொற்களை நீக்கி குழப்பத்திற்கு வழி வகுத்துவிட்டனர். இவர்களது மொழிபெயர்ப்பு மற்றும் ‘copy – paste’ புலமையைப் பாராட்ட சொற்களைத் தேட வேண்டிய நிலைதான்!  



    “கார்பன் டை ஆக்சைடானது நீராவி, மீத்தேன், நைட்ரஸ்  ஆக்சைடு மற்றும் ஓசோன் ஆகியவற்றுடன் பசுமை இல்ல வாயுக்களை உருவாக்குகிறது”.  (பக்.110)

   ஆங்கில வழியில்,

   “Carbon dioxide along with water  vapor, methane, nitrous oxide and ozone  forms the green house gases. These gases are  responsible for global warming”. (Page:96)

   பசுமை இல்ல வாயுக்கள் தனித்தனியே வளிமண்டலத்தில் உருவானவை. கார்பன் டை ஆக்சைடு இவற்றை உருவாக்குவதாக எழுதுவது எப்படிச் சரியாகும்? “கார்பன் டை ஆக்சைடுடன்  நீராவி, மீத்தேன், நைட்ரஸ்  ஆக்சைடு, ஓசோன் போன்றவையும் பசுமை இல்ல வாயுக்கள் எனப்படுகின்றன”, என்று சொன்னால் குழப்பமில்லை.  
 
   ‘உங்களுக்குத் தெரியுமா?’ பகுதியில் அமேசான் காட்டைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்கள்.

   “அமேசான் காடு உலகின் மிகப்பெரிய மழைக்காடு, இது  பிரேசிலில் அமைந்துள்ளது.  இது 60,00,000 சதுர கி.மீ. ஆகும். இது  CO2 ஐ சமன்செய்வதன் மூலம் பூமியின் காலநிலையை உறுதிப்படுத்தவும், புவி  வெப்பமடைதலை மெதுவாக்கவும்  உதவுகிறது, மேலும் உலகின் 20%  ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. இதில்  சுமார் 390 பில்லியன் மரங்கள் உள்ளன.  இது பூமியின் நுரையீரல் ஆகும்”. (பக்.110)

   ஆங்கில வழியில்,

   “Amazon forest is the largest  rain forest in the world, located  in Brazil. It covers 6000000  square km. It helps to stabilize the earth’s  climate and slow global warming by fixing  Co2, and producing 20% of the world’s oxygen  in the process. It has about 390 billion trees.  It is the lungs of the planet”. (Page:96)

      இமயமலை இந்தியாவிலுள்ளது என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அதையும் தாண்டிய அபத்தம் அமேசான் காடு பிரேசிலில் இருக்கிறது என்று சொல்வதும். சுமார் பாதி (45%) அமேசான் காடுகள் பிரேசிலை விட்டு வெளியே கொலம்பியா, பெரு, வெனிசூலா, ஈக்வெடார், பொலிவியா, சுரிநாம், பிரஞ்சு கயானா ஆகிய நாடுகளில் இருக்கின்றது. தென் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கிறது என்று சொல்வது வேண்டுமானால் பொருத்தமாக இருக்க முடியும்.

       ‘காடு அழிப்பு’ என்ற பத்தியில், “புதுப்பிக்கத்தக்க வளங்கள் காடுகள். அவை உலகின் நிலப்பரப்பில் சுமார் 30 சதவீதத்தை உள்ளடக்கியது. அவை ஆக்ஸிஜனை உருவாக்கி வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவை பராமரிக்கின்றன”. (பக்.107) என்று சரியாக எழுதப்படுகிறது.

   

     ஆனால் அமேசான், “CO2 ஐ சமன்செய்வதன் மூலம் பூமியின் காலநிலையை உறுதிப்படுத்துவதாக”ச் சொல்வதன் பொருள் என்ன? வளிமண்டல கார்பன் டை ஆக்சைடின் அளவு 0.03%. இதைத் தக்க வைத்தல் அல்லது சரி செய்தல் என்பதுதானே பொருத்தமாக இருக்க முடியும்? CO2 எதனுடன் சமன்செய்யப்படுகிறது? ‘by fixing  CO2’ என்றால் சமன்செய்தல் என்று பெயர்ப்பது கொடுமை. கார்பன் டை ஆக்சைடின் மூலக்கூறு வாய்ப்பாட்டை  Co2 என்று எழுதாமல், CO2 என்று எழுதவேண்டுமென  அறிவியல் பாடநூலுக்கு யார் சொல்லித் தருவது? 


அபத்தங்கள் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக