சனி, ஏப்ரல் 18, 2020

சுயமரியாதை இயக்கமும் தாழ்த்தப்பட்டோரும்


சுயமரியாதை இயக்கமும் தாழ்த்தப்பட்டோரும்

(நூலறிமுகம்… தொடர்: 005)

மு.சிவகுருநாதன்

(காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஆகஸ்ட் 2017 இல் வெளியான, ஆ. திருநீலகண்டன் எழுதிய ‘நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்’ என்ற ஆய்வு நூல் குறித்த பதிவு.)


    


     28/12/1937 நீடாமங்கலத்தில் நடந்த தென் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் மாநாட்டின் சமபந்தி விருந்திலும் அடுத்தடுத்த நாள்களிலும் தலித்கள் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய இழிவன்கொடுமை குறித்த ஆய்வு நூல் ஒன்றை ஆ.திருநீலகண்டன் எழுதியுள்ளார். ஆ.இரா.வேங்கடசலபதி சொல்வதைப்போல, சேரன்மாதேவி, முதுகுளத்தூர், கீழ்வெண்மணி முதலான குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக நீடாமங்கலம் இழிவன்கொடுமையை முன்னுறுத்தியுள்ளார் என்பதில் அய்யமில்லை. 

    திராவிட இயக்கம், தலித்கள் உறவுநிலைகளில் இன்று நிலவிவரும் எதிர்மறை நோக்கிலான கருத்துப் பகிர்வுகளுக்கு ஒரு வரலாற்றுப் பரிமாணத்தை அளிப்பதாக முடிவுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்த வன்கொடுமையை அன்று பிறரனைவரும் பெரும்பாலும் புறக்கணித்த நிலையில் சுயமரியாதை இயக்கம் கைகளில் எடுத்துகொண்டுப் போராடியது முதன்மையான ஒன்று. அப்பிரச்சினையை பொதுவெளிக்குக் கொண்டு சென்றும் போராடியும் தலித்களின் உரிமைமிட்பில் தனக்குரிய வரலாற்று கடமையைச் செவ்வனே செய்தாகவே கருதலாம். 

    நீடாமங்கல உணவு விடுதிகளில் அன்று நிலவிய தீண்டாமையை முறியடிக்க சுயமரியாதை இயக்கத்தின் ‘வடைத்தட்டு’ ராதாகிருஷ்ணன் தொடங்கிய ‘சமவுரிமை ஓட்டல்’, ஆர். விசுவநாதன் நடத்திய ‘பெரியார் உணவு விடுதி’, கடம்பூர் சிதம்பரத்தின் ‘திராவிடர் உணவு விடுதி’ ஆகியன (பக்.74) இந்த ஆய்வு நூலில் சொல்லப்படுகின்றன. சிறப்பான கள ஆய்வு மற்றும் அன்றைய ஆவணங்களைத் தேடியுழைத்து இந்த ஆய்வு நூலை ஆக்கியுள்ளதைப் பாராட்ட வேண்டும். 

    விடுதலை, குடிஅரசு போன்ற சுயமரியாதை இயக்க ஏடுகள் மூலமாகவே நீடாமங்கலம் கொடுமை வெளிச்சத்திற்கு வந்ததையும் அதற்கு உள்ளூர் இயக்கத் தோழர்களின் அர்ப்பணிப்பும் சுட்டப்படுகிறது. இதற்கு மாறாக காங்கிரஸ் மற்றும் பிராமண ஆதரவு ஏடான ‘தினமணி’ வன்கொடுமையாளர்களுக்கு ஆதரவாகப் பொய்செய்திகளை வெளியிட்டதும் சுயமரியாதை இயக்கத்தை இழிவு செய்ததையும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து எடுத்துக்காட்டியுள்ளார். 

  “ஆர். சீனிவாசன், எம்.சி. ராஜா, என். சிவராஜ், வி.ஐ. முனுசாமி பிள்ளை, ஜே. சிவசணமுக பிள்ளை, கோவை ஆர். வீரய்யன், எல்.சி. குருசாமி, எச்.எம். ஜெகந்நாதம் ஆகியோருள் மேயர் ஜெ. சிவஷண்முகம் பிள்ளையிடம் மட்டுமே இச்சிக்கலின் தொடர்பில் ஓரளவு உடன்பாட்டு நிலையில் அமைந்த சில அசைவுகளைக் காண முடிகிறது”, (பக்.53)

   அன்றைய தலித் தலைவர்கள் இதை எவ்வாறு கணித்தனர் என்பது விளங்கவில்லை. நிலப்பிரபுத்துவத்தை எதிர்க்கும் இயக்க பலம் அவர்களிடம் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். கிறித்தவர், பள்ளர் சார்ந்த பிரச்ச்சினைகள் என்று ஒதுங்கியிருந்திருக்கக் கூடுமோ! அன்றும் தலித் தலைவர்களிடம் பெருமளவு ஒருங்கிணைப்பு இல்லை. சென்னை மாகாண தேவேந்திர வேளாள சங்கத்தினர் உடன் குழு ஒன்று அமைத்து உண்மையை வெளிப்படுத்தி சுயமரியாதை இயக்கத்திற்கு துணை நின்றது. 

    நீடாமங்கலம் ‘நீதி’ எப்படியிருக்கும் என்பதை சுயமரியாதை இயக்கதினரும் பெரியாரும் உணராத ஒன்றல்ல. எனவேதான், “தாழ்த்தப்பட்ட மக்கள் ‘ஹிந்து’ சமூகத்தில் ஒரு மனிதனாய் இருந்துகொண்டு மானத்துடன் வாழ முடியாது என்பதுடன் இம்மாதிரியான அவமானங்களுக்கும் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாது”, (பக்.132) என்கிற முடிவிற்கு குடி அரசு வருகிறது. பின்னாளில் 1968 கீழ்வெண்மணிப் படுகொலைகளுக்கு கிடைத்த ‘நீதி’ நமக்கெல்லாம் தெரியுந்தானே! இந்த வழக்கு மன்றங்களில் கிடைக்கும் ‘நீதி’ இதுதான்!  

   “சமதர்ம/பொதுவுடைமைவாதிகள் இந்நீடாமங்கல வன்கொடுமையை அறிந்து அதற்கு எதிர்வினையாற்றியதாகத் தெரியவில்லை”, (பக்.62) (நூலில் ‘எதிரிவினை’ என்றுள்ளது.)

    அன்றைய நிலையில் இப்பகுதிகளில் கம்யூனிஸ்ட்கள் வலுவாக இல்லை, மேலும் நாடெங்கும் அவர்கள் வேட்டையாடப்பட்ட தருணம். அதன் பின்னரே இங்கு வலுவான விவசாயத் தொழிற்சங்களைக் கட்டியதை நாம் காண்கிறோம். 

    “இந்த மொட்டை அடித்து துன்புறுத்தி சாணி அபிஷேகம் செய்யப்பட்ட ஆட்களில் ஒருவராவது முஸ்லீமாய் இருந்திருந்தால் இன்று நீடாமங்கலமோ, தஞ்சை ஜில்லாவோ, சட்டசபையோ, சர்கார் நிலையோ என்ன கதி ஆயிருக்கும் என்று ஒரு நிமிஷம் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். ஆதிதிராவிடர்களை நாம் முஸ்லீம்களாக மாறிவிடும்படி இந்த இருபது வருஷகாலமாய் வெளிப்படையாய் சொல்லிவரும் காரணம் இதுவேயாகும்”, (பக்.68) ‘குடி அரசு’ தலையங்கம்

  “நீடாமங்கல விஷயம் எங்களை ஜெயிலுக்கு அனுப்பும் போலிருகிறது. 1000, 2000 ரூ செலவாகும் போல் இருக்கிறது. இக்கொடுமையை எத்தனை நாளைக்குச் சகிப்பது. ஆகவே தோழர்களே உங்களுக்கு இழிவு போகவேண்டுமானல், நீங்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டுமானால், உங்களை மேல் ஜாதிக்காரர்கள் நாயிலும் மலத்திலும் கேடாக மதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் ஒர்ரெ கூட்டமாய் துருக்கிக் குல்லா தலையில் அணியுங்கள். உங்களைக் கண்டால் மேல் ஜாதியார் நடுங்குவார்கள். அரசியல், சமூக இயல், பொருளியல் ஆகியவற்றில் உங்களுக்கு சம்பங்கு கிடைக்கும்”, (பக்.73) பெரம்பலூரில் முதலாவது தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் பெரியார் உரை, 06/03/1938 

      என்று தொடர்ந்து பெரியார் வலியுறுத்தி வந்தார். சாதி இழிவு நீங்கவேண்டும், அதற்கு இஸ்லாமே நன்மருந்து என்றும் சொன்னார். போராடுவது, தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவு நிலையடுப்பது போன்றவற்றிற்கு மாற்றாக அவர்களை சொந்தக் காலில் தன்மானத்துடம் வாழவேண்டும் என்ற உணர்வு பெரியாரிடம் மேலோங்கியிருந்தது. அதனால் அவரது இயல்பின்படி சில சமயங்களில் கோபத்துடன் உரையாற்றினார். இவ்வரிகளைக் கொண்டே அவரை தலித்களுக்கு எதிரானவராக சித்தரிக்கும் போக்கு அதிகரித்தது. ‘காலச்சுவடு’ இதழும் விடுதலைச் சிறுத்தைகளின் ரவிக்குமார் தொடங்கி வைத்த இந்த போக்கு இன்றும் நீடிக்கிறது. தமிழ்தேசியர்கள் அவரைக் கன்னட வடுகர் என்று தூற்றுகின்றனர். அதே ‘காலச்சுவடு’ இந்நூலை வெளியிடுவதும் வியப்பளிக்கிற செய்தி. 

    “நீடாமங்கல வன்நிகழ்விற்குச் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய திராவிட இயக்கத்தின் மற்றொரு முக்கியக் கூறு, வாக்கு வங்கி சார்ந்த தேர்தல் அரசியலில் இறங்கியது. இதன் பின்னர், தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக, நீடாமங்கல வன்நிகழ்வு குறித்து ஆற்றியது போன்ற உடன்பாடான எதிர்வினைகள் இவ்வியக்கத்தின் தரப்பில் குறைந்து வந்ததைக் கவலையோடு நோக்க வேண்டியுள்ளது” (பக்.89 & 90) என்று குறிப்பிடுகிறார்.

   இப்பத்தியில் தி.மு.க. என்ற கட்சியின் பெயரை ஏன் சொல்லாமல் தவிர்க்கிறார் என்று தெரியவில்லை. இது ஒரு ஆய்வு நூலுக்கு அழகு சேர்க்குமா என்று தெரியவில்லை. அரசியல் பாதையைத் தேர்வு செய்த திராவிட இயக்கத்தின் பிரிவுகள் தலித்களுக்கு எதிராகவே மாறியது உண்மைதான். 

  ஆனால் பெரியார் 1973 வரை இந்திய அரசியலில் இருந்திருக்கிறார். 1968 கீழ்வெண்மணி தலித் படுகொலைகள் குறித்தும் எதிர்வினையாற்றியுள்ளார். அவரது திராவிடர் கழகம் இன்றும் அரசியல் சாராத சமூக இயக்கமாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு விமர்சனங்கள் இருப்பினும் தலித் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு பிற்காலத்தில் பெரியாரோ அவரது இயக்கமோ வந்தடைந்ததாக வரலாற்று ஆதாரங்களில்லை. இருப்பின் அதையும் சுட்டியிருக்கலாம். 

  “அன்றைய தஞ்சை மாவட்டத்தின் பெருநிலவுடமையாளர்களுள் ஒருவரான இவர் (ஏ.டி.பன்னீர்செல்வம்) மதத்தால் கிறிஸ்தவராயினும் உடையார் சாதியில் பிறந்தவர். அதே உடையார் சாதியைச் சேர்ந்த, நீடாமங்கல வன்நிகழ்வின் மூலகாரணமாக விளங்கிய டி.கெ.பி.எஸ். உடையாருக்கு எதிராகவே இவர் வழக்காடினார்”, (பக்.76)

   நீடாமங்கல வன்கொடுமைக்குள்ளான 20 பேர் கிறிஸ்தவர்கள். அந்த சமயப் பிரமுகர்கள் என்ன செய்கிறார்கள்? என்று ‘குடியரசு’ கேட்டபிறகே,  சர். ஏ.டி.பி. தயார் என்ற செய்தியும் ‘குடி அரசில்’ வந்தது சுட்டப்படுகிறது.

   “நீடாமங்கல வன்கொடுமையை வெளியிட்டதால் சு.ம.இயக்க ஏடுகளின் மீது  டி.கெ.பி.எஸ். உடையார் தொடுத்த மான நட்ட வழக்கில் சு.ம.இயக்கத்திற்குப் பல்வேறு வழிகளில் உதவி புரிந்த சர் ஏ.டி.பன்னீர்செல்வம் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்”, (பக்.96) 

     ஏ.டி.பன்னீர்செல்வம்  கிறித்தவ உடையார் சமூகத்தைச் சார்ந்தவர். முதலில் இது குறிக்கப்பட்டாலும் பிறகு சாதி மட்டும் குறிக்கப்படுகிறது. வன்கொடுமைக்குக் காரணமானவருடைய சாதியைச் சார்ந்தவர் என்று சொல்வதற்காக இவ்வாறு சொல்லப்படுகிறதா? பல நேர்வுகளில் இவ்வாறாக தவறான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.  பாதிக்கப்பட்ட கிறித்தவர்களுக்காக தனது மதம் சார்ந்து வழக்காடினார் என்றும் சொல்ல இயலுமா? அப்பகுதியிருந்த இன்னொரு பெருநிலவுடமையாளராக இருந்த போதிலும் வன்கொடுமைக்குக் காரணாமானவர்களுக்கு எதிராக வழக்காடி சுயமரியாதை இயக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்றார் என்பது கூடச் சரியாக இருக்கும்.  

  “இத்தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய திருவாரூர் மாவட்டம்) தஞ்சாவூர் – திருவாரூர் பெருவழியில் அமைந்துள்ள் வளமிக்க ஊர்தான் நீடாமங்கலம். காவிரியின் கிளை ஆறான வெண்ணாறு இவ்வூரைத் தழுவிச் செல்கிறது. தஞ்சை, திருவாரூர், கும்பகோணம் என்ற முக்கோணங்களிடையே மன்னார்குடி தாலுகாவில் இவ்வூர் அமைந்துள்ளது”, பக்.26)

   நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியிலிருந்து பிரிந்து தனி வட்டமாக (தாலுகா) செயல்பட்டு வருகிறது. 

   “1986 இல் 66 வயதில் தஞ்சை மாவட்டம் ஆலத்தம்பாடியிலுள்ள தன் சொந்த வீட்டில் காலமானார்”, (பக்.92) திரு. ஆறுமுகத்தைப் பற்றிய குறிப்பில் உள்ளது.  1937 மற்றும் 1986 யிலும் தஞ்சை மாவட்டத்திலிருந்த ஆலத்தம்பாடி தற்போது திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறது. 

நூல் விவரங்கள்:

 நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
ஆ. திருநீலகண்டன்  

முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2017
இரண்டாம் பதிப்பு: அக்டோபர் 2017

பக்கம்: 152
விலை: 175

வெளியீடு: 

காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் – 629001.

பேச: 04652 – 278525,
மின்னஞ்சல்: publications@kalachuvadu.com
இணையதளம்: www.kalachuvadu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக