திங்கள், ஜூன் 13, 2011

சமச்சீர் கல்வி உலகத்தரமாக இல்லையாம் !

சமச்சீர் கல்வி உலகத்தரமாக இல்லையாம் !  

                                                        -மு.சிவகுருநாதன் 



     

       சமச்சீர்கல்வி உலகத்தரமாக இல்லையென்ற காரணத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.அது என்ன உலகத்தரம் என்பதை கொஞ்சம் விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்.

      உலகத்தரத்திற்கு மெட்ரிக் பள்ளிகள் மட்டும் அளவுகோலா ? CBSE  பாடத்திட்டமும் உலகத்தரமாக அமைந்துவிடுமா ? மெட்ரிக் பள்ளிகளுக்கு ஆதரவாகக் கொடி பிடிக்கும் ஜெயமோகன், பா.ராகவன்,துக்ளக் சோ.ராமசாமி    வகையறாக்கள் மெட்ரிக் மற்றும் CBSE    பள்ளிப் பாடப்புத்தகங்களை ஆய்வு செய்ததுண்டா ? வேறு எப்படி அவற்றை தரமானதாக கட்டமைக்கிறார்கள்?


         ஜெயமோகன் தான் எழுதும் உள்ளூர் நாவல்களும் சிறுகதைகளையும் உலகத்தரம் என்று தானே சொல்லிக்கொள்வதைப்போல அடிப்பொடிகளும் சொல்லிச்சொல்லி மாய்கிறார்கள்.அதைப்போலவே மெட்ரிக் பள்ளிப் பாடத்திட்டமும் உலகத்தரம் என்று அவர்களாகவே சொல்லிக்கொண்டால்தான்  உண்டு.

        தற்போது சமச்சீர் கல்வி என்ற பெயரில் வந்துள்ள பாடத்திட்டமும் பாடநூற்களும் உண்மையான சமச்சீர் கல்வி இல்லை என்பதை நாம் பலமுறை சொல்லியாகிவிட்டது.அது ஒரு அடையாளம்; அவ்வளவே. பாடத்திட்டம், பாடநூற்கள்,மதிப்பெண் பட்டியல் ஆகியவை மட்டும்   சமச்சீர் கல்வியை தீர்மானித்துவிடக்கூடிய அம்சங்கள் இல்லை.



         பொதுப்பள்ளிமுறையே  கல்வியாளர்கள் சொல்லும் உண்மையான சமத்துவக்கல்வியாகும்.ஜெயமோகன்,பா.ராகவன்,துக்ளக் சோ.ராமசாமி, ஜெ.ஜெயலலிதா,மு.கருணாநிதி  வீட்டு குழந்தைகளும் தெருவோரக் 
குழந்தைகளும் ஒன்றாகப் படிக்கும் கனவுத்திட்டமது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி பொதுப்பள்ளிமுறையில் மட்டுமே கிடைக்கும்.
  
        சமத்துவம் குறித்த விவாதங்களை சமூகத்தின் பல மட்டங்களில் எழுப்பிருக்கிற வகையில் இப்புத்தகங்களையும் இத்திட்டத்தையும் முதல்படி என்ற நிலையில் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.உண்மையான சமத்துவக்கல்வியை நோக்கி இன்னும் நெடுந்தூரம்  பயணிக்க வேண்டியுள்ளது. 
 
       முந்தைய அ.இ அ.தி.மு.க.ஆட்சியிலும்  அரசியல்வாதிகள் பற்றிய பாடங்கள் இடம்பெற்றன.இவற்றையெல்லாம் கல்வியாளர்கள் மட்டுமே சுட்டிக்காட்டினார்கள்.தி.மு.க.காரர்கள் கூட கண்டுகொண்டதில்லை.
எம்.ஜி ஆர்.,ஜெ.ஜெயலலிதா போன்றவர்கள் குறித்த பாடங்கள்உண்டு. ஜெ.ஜெயலலிதா பாடத்தை நீக்கியவர்கள் எம்.ஜி.ஆர். பாடத்தை இன்றுவரை நீக்கவில்லை என்பது பலருக்கு தெரிவதில்லை.

        மேலும் பிழைகளே  இல்லாத பாடநூற்கள் இதுவரை தயாரிக்கபட்டதற்கு உதாரணம் சொல்லமுடியுமா?  பாடப்புத்தகங்கள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் இவ்வளவு  கருத்துக்களும் விமர்சனங்களும் முன்னர் வெளியானதும் இல்லை என்பதையும் ஒத்துக்கொண்டாகவேண்டும்.

      சமச்சீர் கல்விப் புத்தகங்கள் பிழைகள் மலிந்தவை,தரமற்றவை என்பதையும் ஒத்துக்கொள்வோம்.ஆனால் 2003 இல் தயாரிக்கப்பட்ட பழைய பாடநூற்கள் மட்டும்  எப்படி தரமானதாக ஆனது என்று தெரியவில்லை? 

       எனவே தரம் என்பது மட்டும் இங்குபிரச்சினையில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று தோற்றுத்  திரும்பிய மெட்ரிக் பள்ளிகளுக்கும் அதை நடத்தும் கல்விக்கொள்ளயர்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் வேலையை அரசு செய்கிறது. 
 
          கல்வியின்பாலும் குழந்தைகளின்பாலும் உண்மையான அக்கறை கொண்ட செயல்பாடு இதுவல்ல. அந்த உண்மையான அக்கறையுடன் ஜெ.ஜெயலலிதாவோ மு.கருணாநிதியோ செயல்பட வாய்ப்பில்லை என்பதே தமிழ்நாட்டின் அவலம். 

1 கருத்து:

ramalingam சொன்னது…

நம் நாட்டில் நல்ல கல்வி கானல் நீர்தான்.

கருத்துரையிடுக