வியாழன், ஏப்ரல் 30, 2020

கல்வி உரிமையும் களவு போன கல்வியும்


கல்வி உரிமையும் களவு போன கல்வியும்

(நூலறிமுகம்… தொடர்: 017)

மு.சிவகுருநாதன்


(இரா. எட்வின் எழுதிய  இவனுக்கு அப்போது மனு என்று பெயர், 7 Bனா சும்மாவா?, என் கல்வி என் உரிமை  ஆகிய மூன்று கல்வி குறித்த நூல்கள் குறித்த  பதிவு.)

 இவனுக்கு அப்போது மனு என்று பெயர் 

      சின்னச் சின்ன வாக்கியங்களில் தனது உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகளை அவர் வடித்து வைக்கிறார். அனைத்துக் கட்டுரைகளிலும் காணக்கிடைக்கும் இந்த சின்ன வாக்கியங்களும், பத்திகளும் நம்மை எளிதில் கவர்ந்து உள்ளிழுத்துக் கொள்கின்றன. அதனாலேயே வாசிப்பது இலகுவாகிறது. சொல்ல வந்த விஷயத்தை ஒரே நேர்கோட்டில் சொல்வது, அதை சுவாரஸ்யமாகச் சொல்வது தோழர் எட்வினுக்கு வெகு நேர்த்தியாக கைவந்திருக்கிறது”, என்று முன்னுரையில் கவின்மலர் குறிப்பிடுகிறார். 

     எட்டாண்டுகளுக்கு முன்பு வெளியான நூல் என்றாலும் சற்றுத் திரும்பிப் பர்க்கவும் மதிப்பீடு செய்யவும் உதவும். உதாரணமாக, 

“பத்தாம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகளே வேண்டாம்.
பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் இப்போது உள்ள முறையை மாற்றி ‘செமஸ்டர் முறை’யை அறிமுகப் படுத்தலாம்”, (பக்.53) ‘எது செய்யக் கல்வி’ கட்டுரையில் வலியுறுத்துகிறார். 

   இன்று எவ்வளவோ தூரம் தள்ளி வந்திருக்கிறோம். +1 க்கு பொதுத் தேர்வு, 10 ஆம் வகுப்பிற்கு கடுமையான முறையிலான தேர்வு என்ற நிலையை எட்டியுள்ளோம். ‘கொரோனா’ காலத்தில் கூட தேர்வுகளை நடத்தியே தீருவோம் என்று அடம்பிடிப்பதைப் பார்க்கிறோம். 

     20 கட்டுரைகள் நிறைந்த இத்தொகுப்பில் கல்வியைவிட குழந்தைகளைப் பேசிய கட்டுரைகளே அதிகம். குழந்தைகளைப் பேசுவதும் கல்வியைப் பேசுவதுதானே! அவர்களிடம் கற்க நிறைய இருக்கிறது. அதனால்தான் தன்னைத் தவிர அனைவரையும் குழந்தைகளாக மாற்றிவிட விரும்புகிறார் ஆசிரியர். 

    மனு எல்லா காலத்திலும் இருக்கிறான். அவன் பெயர் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது என தலைப்புக் கட்டுரை எடுத்துரைக்கிறது. (பக்.72, இவனுக்கு அப்போது மனு என்று பெயர்

   ரூப் கன்வர் கொலை (சதி), நெ.து.சுந்தரவடிவேலுவின் தமிழ்ப்பற்று, திப்புவின் வீரமரணம், பெருந்தலைவர் காமராஜர், ஜென் கதை, ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வகுப்புக் கொடுமை, வாங்கப்படும் வாக்குகள், இளைய மருத்துவனின் எதிர்வினை, மணற்கொள்ளை, புவி வெப்பமயமாதல், நீராதாரச் சேமிப்பு என ஒரு சமூகத்தை உற்றுநோக்கும் படைப்பாளிக்கு சொல்ல எவ்வளவோ இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை வெறுமனேச் சொல்லிவிடாமல் தனது பாணியில் எட்வின் அரசியல்மயப் படுத்துகிறார் என்றே சொல்ல  வேண்டும். இதுவே இன்றைய முதன்மைத் தேவையாக இருக்கிறது. 

   7 B னா சும்மாவா?

      முகநூல் நிலைத்தகவல்களைத் தெரிவு செய்து கோட்டோவியங்களுடன் அழகான வடிவமைப்பில் நூல் தாயாரிக்கப் பட்டுள்ளது. நூலில் உள்ளவை கிட்டத்தட்ட கவிதைகள். 


“நீ படிச்சு என்னவாவ?
கலக்ட்ராவேன்.
கலக்டராயி?
டி.வி. பார்ப்பேன். எல்லாருக்கும் சாக்லெட்
வாங்கித் தர்ருவேன். ஐஸ் க்ரீம் வாங்கித் தருவேன்.
குழந்தைகள் இப்படியே வளரட்டும். (பக்.23)

   இதைப் படிக்கும்போது விக்ரமாதித்யனின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. அது வெறொன்றுமில்லை.

“குழந்தைகள்
குழந்தைகளாகவே
இருக்கிறார்கள்”, - விக்ரமாதித்யன்

     குழந்தைகளிடம் கொட்டு வாங்கிய உதவித் தலைமையாசிரியரை நீங்கள் பார்த்திருக்க முடியுமா? 

“……………
“வேணாம் ஒங்களையே கொட்டலாம்”.
“சரிங்க பெரிசு கொட்டுங்க…”
“கொட்டுன்னுட்டு மரமாட்டமா நின்னா எப்படி கொட்டுவேன்? குனிங்க…”
குனிந்து வாங்கினேன்.
“7 பி னா சும்மாவா?’ என்றபடியே ஒரு கொட்டு கொட்டினாள்.
கொடுப்பினை இருந்திருக்கு நேத்தெனக்கு. (பக்.13)

   அந்தக் குழந்தைகள் கூட கொடுத்து வைத்தவர்கள்! தலைகுனிந்து கொட்டு வாங்கும் எட்வின்களிடம் வந்து சேர்ந்ததால். 

“கீர்த்தனா சாப்பிட அழைத்ததை கவனிக்கவில்லை  நான்.
கோவத்தோடு கத்தினாள்.
“இரா.எட்வின் சாப்பிட வாங்க…”
“ஏண்டி அப்பா இல்லையா நான்?”
“அப்ப எட்வின் இல்லையா நீங்க?”
அதானே”. (பக்.39)

     குழந்தைகள் உலகில் அப்பாவாகவும் எட்வினாகவும் இருப்பதை விடவும் குழந்தையாக இருக்க வேண்டிய கட்டாயமாகும். அப்போதுதான் அதிகாரங்கள் இல்லாது சமத்துவம் நிலவும்.  அப்பா, ஆசிரியர் எல்லாம் அதிகாரப்  பீடங்கள்தான்.  

    “உம்மன் சாண்டி”, என்று முதலமைச்சரை பெயர் சொல்லி அழைக்கும் உரிமையையும் பக்குவத்தையும் அங்கு குழந்தைகளும் முதல்வரும் பெற்றிருக்கிறார்கள். “குழந்தைகளை குழந்தைகளாக இயங்க அனுமதி அங்கு உண்டு”, என்ற இறுதிவரி பெரிய அரசியல் விமர்சனமாக முன்நிற்கிறது. 

    சில கவிதைகளாகவே உருப்பெற்றிருக்கின்றன.

“சாமி வேஷம் போட்ட குழந்தைகளை
உங்களுக்குப் பிடிக்கும்தானே?
சாமி வேஷம் போட்டாலும்
குழந்தைகளை எனக்குப் பிடிக்கும்”, (பக்.63) 

என் கல்வி என் உரிமை  

     நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசையில் கவிஞர் எட்வினின் 10 கட்டுரைகள் இத்தலைப்பில் நூலாக்கம் பெற்றுள்ளது. பெருந்தொழில்கள், கல்வி மட்டுமல்ல; தெருவோர ‘சிப்ஸ்’ விற்பனையையும் முதலாளித்துவம் தன் கைக்குள் கொண்டு வந்துவிட்டது. “எதையும் சரி செய்து விடலாம் முதலாளிகளிடமிருந்து கல்வியை மட்டும் அப்புறப்படுத்திவிட்டால்”, என்று நம்பிக்கை விதைக்கிறார். மறுபக்கம் எல்லாம் கானல் நீராகத்தான் இருக்கிறது. முதலாளித்துவம் அரசுகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டன. 


   தேர்வறையில் பெஞ்ச் போடச் சொல்லும் 6 பி மாணவி. “உறுதியாகச் சொல்லலாம். நாங்கள் கங்குகளை தயாரித்து சமூகத்திற்குத் தருகிறோம்”, இந்தக் கங்குகளின் எண்ணிக்கை இன்று அருகி வருகிறது. பறவைகளுக்குக்கூட சிவப்பு விவரப் புத்தகம் உண்டு. இவர்களின் எண்ணிக்கை குறைவது பலருக்கு மகிழ்ச்சி. இனி கேள்வி கேட்க, எதிர்க்குரலெழுப்ப பெரும்பான்மை ‘பிராய்லர்’ குழந்தைகளால் இயலாது. இது முதலாளித்துவத்தின் சூழ்ச்சிதான். எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமிருக்கிறது. 

    நாளந்தா பல்கலைக்கழக  தீப்பந்தங்களுக்கு மத்தியில் 10,000 மாணவர்களுக்கு உண்டுறைவிடக் கல்வி அளிக்க முடிந்திருக்கிறது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது நம் மண்ணின் கனவாகவே இருப்பதைச் சுட்டுகிறார். 

    கல்விக்கடன் வலையில் மாணவர்கள் எவ்வாறு சிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதை ‘கடன் வாங்கிப் படித்தல்’ கட்டுரை விவரிக்கிறது. (பக்.17) குழந்தைகளோடு நாம் எவ்வளவுதான் நெருங்கினாலும் நம்மால் இயலாத காரியங்களை சாதிக்கும் திறன் அம்மாவுக்கு உண்டு என்பதையும் ஒரு கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.

    எவ்வளவுதான் கல்வி உரிமையைப் பற்றிப் பேசினாலும் இறுதியில் அது களவுபோகும் உரிமையாகவே இருக்கிறது. மருத்துவப் படிப்பை ‘நீட்’டால் தோற்றோம், இனி கலை, அறிவியல் படிப்புகளையும் பொது நுழைவுத் தேர்வால் தோற்கப்போகிறோமா? இனி நாம் என்னதான் செய்வது? விழிப்புணர்வு பெறுதலும் முடிந்தவரை போராடுவதுமே ஒற்றை வழியெனக் கிடக்கிறது.  

நூல் விவரங்கள்:
இவனுக்கு அப்போது மனு என்று பெயர்
 வெளியீடு:
சந்தியா பதிப்பகம்,
77, 53 வது தெரு, 9 வது அவென்யூ,
அசோக்நகர்,
சென்னை – 600083.
பேச: 044 24896979
இணையம்:   www.sandhyapublications.com
மின்னஞ்சல்:  sandhyapathippagam@gmail.com
இரா. எட்வின்
முதல் பதிப்பு: 2012
பக்கங்கள்: 104
விலை: 70
 7 Bனா சும்மாவா?
இரா. எட்வின்
முதல் பதிப்பு: நவம்பர் 2016
பக்கங்கள்: 64
விலை: 40
வெளியீடு:
வானம்,
M 22, 6 வது அவென்யூ,
ராமாபுரம்,
சென்னை – 600089.
கைபேசி: 9176549991
மின்னஞ்சல்:  noolvanam@gmail.com
என் கல்வி என் உரிமை 
இரா. எட்வின்
மூன்றாம் பதிப்பு: பிப்ரவரி 2017
பக்கங்கள்: 32
விலை: 20
வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் (NCBH),
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600098.

044-26258410, 26251968, 26359906, 48601884
மின்னஞ்சல்: info@ncbh.in

புதன், ஏப்ரல் 29, 2020

கல்வியை அறிதல்


கல்வியை அறிதல்

(நூலறிமுகம்… தொடர்: 016)

மு.சிவகுருநாதன்

(இரா. எட்வின் எழுதி,  நற்றிணைப் பதிப்பக வெளியிட்ட, எது கல்வி?’ என்ற கட்டுரைத் தொகுப்பு குறித்த  பதிவு.)


     கல்விச் சிந்தனைகளை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்குமான எளிய மொழி நடையில் எழுதுபவர்கள் என என்னால் இப்போதைக்கு இருவரைச் சுட்டமுடியும். ஒருவர்: பேரா. ச.மாடசாமி, இன்னொருவர்: கவிஞர் இரா.எட்வின். இவர்கள் தங்களுடைய அனுபவங்கள் வாயிலாக சிக்கல் மிகுந்த கல்விப் பிரச்சினைகளை மிக  எளிமையாகவும் நேர்மையாகவும் அணுகி கல்விச் சிந்தனைகளை அகலிக்கச் செய்கின்றனர்.  பேரா. ச.மாடசாமி அவர்களின் நூல்கள் பலவற்றை இங்கு அறிமுகம் செய்துள்ளோம். இப்போது எட்வின். 

    ‘எது கல்வி’ எனும் இந்நூலில் தினமணி டாட் காமில் வெளியான ‘முடியும் வரையும் கல்’ என்ற தொடரில் இடம்பெற்ற 29 கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது. எழுதத் தூண்டிய உமா ஷக்திக்கும் நூலாக்கத்திற்கு கவிஞர் தம்பிக்கும் புகைப்படக் கலைஞர் சமயபுரம் ரவிக்கும் நன்றி மட்டும் சொல்லி, நூல் குறித்து முன்னுரைக்க விரும்பாமல், வாசகர்கள் மவுனமாக கடக்காமல் கருத்துகள் சொல்ல வேண்டுகிறார். ஒவ்வொரு கட்டுரையிலும் அனுபவ வீச்சுக்களின் விவரணையும் இறுதியில் முத்தாய்ப்பாய் கவிதை போன்று ‘நச்’சென்று தாக்குகிறார் எட்வின். கல்வி மற்றும் சமூக அனுபவங்கள், ஆதங்கங்கள் என நீண்டு இறுதியில் ஒரு தீர்வை நோக்கி நகர்கின்றன. 

    நமது மூளையில் தேவையில்லாமல் திணிக்கப்பட்டவற்றை வெளியெற்றுவதே கல்வி என்பார் பெரியார். கல்வி குறித்த இன்றைய சமூகத்தின் புரிதல் மிகவும் பின்னோக்கியதாக உள்ளது. மதிப்பெண்கள், வேலை, பணம்,  ஆங்கிலம் போன்றவற்றின் மீதான அதீத வெறியாக கல்வியின் தடம் மாறியிருக்கிறது. 

   ஊருக்கு ஒரு தொடக்கப்பள்ளி இருந்த நிலை மாறி இங்கு 10 குழந்தைகளுக்குக் குறைவான பள்ளிகளை மூடுதல், 25 குழந்தைகளுக்கு குறைந்த பள்ளிகளைக் கணக்கெடுத்தல் என்று போய்க்கொண்டிருக்கும் சூழலில் வாக்காளர் ஒருவருக்கு ஒரு வாக்குச்சாவடி சாத்தியமெனில் ஒரு மாணவனுக்காக ஒரு பள்ளியும் சாத்தியமே என்று சொல்கிறார், நியாயம்தானே! (பக்.20) அன்றைய நாளந்தாவில் மூன்று மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியல்லாத ஊழியரும் இருந்த வரலாற்றாதாரங்களை எடுத்துக்காட்டி, அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் வகுப்பு ஒரு ஆசிரியர், பள்ளிக்கு  ஒரு ஆசிரியல்லாத ஊழியர் அவசியம் என்பதை உணரவைக்கிறார். (பக்.142)

  வீட்டுப்பாடச் சுமையை என்ன செய்வது? இதை ஒழித்து, பொதுப்பள்ளி அமைப்பை வளர்த்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் கல்வித்துறை அதிகாரிகள், ஊழல் அரசியல்வாதிகள், கல்வித்தந்தைகள் ஆகியோர் இரண்டாண்டுகள் பள்ளிக்கு போய் படிப்பது. (பக்.26) பட்டும் புத்தி வருமா இவர்களுக்கு?


  பள்ளிகளில் கழிவறை வசதிகளில்லை; இருந்தாலும் வெளியே அனுமதியில்லை, என்ற நிலையில் கொஞ்சம் மாற்றம் தற்போது 10 நிமி. இடைவேளை கிடைக்கிறது. ஆனால் தேர்வறையில் 200 நிமி. மாணவனை முடக்குவது கொடிய வன்முறையன்றி வேறென்ன? (பக்.32) சிறுநீருக்கு மணியடித்த நிலைமை சற்றுமாறி இப்போது தண்ணீர் குடிக்க மணியடித்துக் கொண்டுள்ளனர். இவர்களைத் திருத்த முடியுமா?

    கல்வியின், பள்ளியின் பணிதான் என்ன? “நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டுமல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை உருவாக்கித் தரவேண்டியதும் பள்ளியின் கடமைதான்”, (பக்.43)

   “முன்வரிசை பிள்ளைகளில் இருந்து நம்மால் சான்றோனை, மருத்துவனை, வழக்கறிஞனை, பொறியியல் வல்லுனனை, பெரிய அதிகாரிகளை உருவாக்க முடியும். அதைச் செய்வோம். அதே வேளை சமூக அக்கறையுள்ள கங்குகளை, தலைவர்களை பின்னிருக்கைகளிலிருந்து (மாப்பிள்ளை பெஞ்ச்) உருவாக்க முடியும். அதையும் தவிர்க்காமல் செய்வோம்.”, (பக்.49)

    எல்லாக் கட்டுரைகளும் எட்வினின் ஈரம் காயாத நெகிழ்வானுபவங்கள்தான். திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி பற்றிய கட்டுரை அனைவரையும் நெகிழவைக்கும். ஆனால் திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி, திண்டிவனம் ரோசனையில் பேரா. பா.கல்யாணி நடத்தும் பள்ளி என விதிவிலக்குகளை எவ்வளவு காலம் பேசுவது? கல்வி பற்றிச் சிந்திப்பவர்கள் தனிப்பள்ளி தொடங்கியாக வேண்டுமா? பொருளில்லையேல் ஒரு கட்டத்தில் அது என்னவாகும்? பொதுக்கல்வி இந்நிலையை எட்டும் வாய்ப்புகள் அருகிவருவதை என்ன செய்வது? இதை எவ்வாறு மாற்றப் போகிறோம்? என்பதே இன்றைய கேள்வி. 

“மலம் அள்ளுபவனின்
எந்தக் கை
பீச்சாங்கை” எனும் சதீஷ்பிரபுவின் கவிதையில் தொடங்கும் ‘வந்தே மாதரம் சொல்லு’ கட்டுரை பாடநூல்களில் மறைக்கப்பட்ட வரலாறுகளை இணைக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. 

   “இப்படியாக மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பதிவு செய்வது பொதுத்தளத்திற்கு அறியத் தருவது மிகவும் அவசியமானதாகும். அவற்றைப் பாடத்திட்டத்தில் வைத்து மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டியது வேறெதையும்விட அவசியமானது”, (பக்.89)

  “நல்ல கல்வி ஆரோக்கியமான விவாதங்களுக்கு மாணவர்களை உந்தித் தள்ளும். இங்கோ பாடப்புத்தகம் சொல்வதை அப்படியே மாணவனை நம்பச் சொல்கிறது. பாடப்புத்தங்களை அவற்றை எழுதுபவர்கள் சித்தாந்தம் முடிவு செய்கிறது. பாடநூல்களை எழுதுபவர்களை ஆளும் வர்க்கம் முடிவு செய்கிறது”, (பக்.105) 

    ரோஹித் வெமுலா பற்றிய கட்டுரை அவர் தலித்தா இல்லையா என்று வாதிட்டதைக் குறிப்பிடுகிறது. உ.பி. கொல்லப்பட்ட இஸ்லாமியர் வீட்டில் இருந்தது மாட்டுக்கறியா இல்லையா என தடயவியல் சோதனை எல்லாம் நடத்தினர். தலித் என்றால் அல்லது இல்லையென்றால், மாட்டுக்கறி என்றால் கொல்லலாம் என்று எந்தச் சட்டத்தில் இருக்கிறது? மநுவின் சட்டத்தில் மட்டுமே. மநுவின் ஆட்சி (தாக்கம்) என்று ஒழிக்கப்படும்போதுதான் சமத்துவக் கல்வி மலரும்.
  
    சாக்ரடீஸ் தொடங்கி ரோஹித் வெமுலா என நீளும் கொலை (நஞ்சு கொடுத்து கொல்வதும் தற்கொலைக்குத் தூண்டுவதும் கொலைதான்.) எது குறித்தும் விவாதிக்கிற, விவாதித்துக் கண்டுணரும் விஷயத்தை ஒப்புக்கொள்கிற ஒரு கல்வித்திட்டத்தைச் சத்தமாக கேட்போம்”, (பக்.105) என்று முடிக்கிறார்.  

   இருளர் வீட்டு குழந்தைகள் படிப்பதில் ஏற்படும் இன்னல்களையும் பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் சாதிப்பாகுபாடுகளையும் “பாம்பு பிடிப்பவன் பிள்ளை படிக்கக் கூடாதா?”, என்ற கட்டுரை பேசுகிறது. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. வாக்ரிகள், புதிரை வண்ணார் போன்ற பல சமூகங்கள் நிலை எழுத்தில் வடிக்க இயலாது. பள்ளிக்குள் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் சாதி, மதவாதிகளாகவேச் செயல்படுவது கல்வியின் பேரவலம்.

   ‘கலகல வகுப்பறை’ கட்டுரை அந்த அமைப்பின் செயல்பாடுகளையும் பொன்னீலன் பார்வையிட்ட வகுப்பறை நிகழ்வையும் இணைத்து ஒரு வகுப்பறை எப்படி இருக்கலாம் என்பதையும் விவரிக்கிறது. இந்தியா முழுமைக்கும் எப்படிப் பொதுவானப் பாடத்திட்டம் சாத்தியமாகும்? நிலவியல் வேற்றுமைகளைக் கணக்கில் கொள்ளாத பாடத்திட்டத்தால் பலனில்லை என்பதும் விளக்கப்படுகிறது.

    “சென்னைப் பெருவெள்ளம் (டிசம்பர் 2015) கொண்டு சேர்ந்த மூன்று நல்ல விஷயங்கள் என, 


  • இஸ்லாமிய சமூகத்தின் மீதான பொய்யான பிம்பங்களை அழித்தொழித்த இஸ்லாமியப் பிள்ளைகளின் தியாகம் செறிந்த மக்கள் சேவையும், அது கொடையளித்த மதம் கடந்த மனிதநேயமும்.
  • கூவத்தை சில காலம் சுத்தமாக வைத்திருந்தது.
  • ‘நாப்கின்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே தீட்டுப் பட்டு விட்டது போல் இருந்து வந்த அசூசையை பெருமளவு துடைத்துப் போட்டது”, (பக்.149) 


     என்பதைப் பதிவு செய்து பள்ளிகளில் ‘நாப்கின்’ எரியூட்டிகள் (incinerator) 50,000 செலவில் அமைக்க வேண்டும் என்பதைக் கோருகிறார்.

    இஸ்லாமியர்களின் தொண்டுகள் விடுதலைக்கு முன்னும் பின்னும் வரலாற்றில் பதிவானவை. இதற்கு முன் சுனாமில் (2004) அவர்களது அளப்பரிய பணி வெளிப்பட்டது. ஆனால் நமது சமூக மறதி நோயால் இதை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவலம் மிகக்கொடுமையானது. ‘கொரோனா’ சூழலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். 

   நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர் சமணராயினும் அவர் ஆசிரியர், மாணவர்களுக்கு வகுக்கும் இலக்கணங்கள் மோசமாக இருப்பதும் மகளுக்கு அதாவது பெண்ணுக்கு கல்வியளிக்கக் கூடாது என்பதை மறைமுகமாக வலியுறுத்துவது போல் இருப்பதும் சுட்டப்படுகிறது. 18 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை அரசுகள் தட்டிக் கழிக்கின்றன. 6-14 கட்டாய இலவசக் கல்வி ஒப்புக்காக நடத்தப்படுகிறது. 

   ‘வங்கிமுறைக் கல்வி’ கட்டுரையில் பாவ்லோ பிரைய்ரே சிந்தனைகளுடன் கல்வி, படிப்பு இவற்றின் வேறுபாடுகள் விளக்கப்படுகின்றன. இந்தியக் கல்வி முறையின் சீரழிவிற்கு மெக்காலே முன்நிறுத்தப்படுகிறார். அவர் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் உண்மைத்தன்மையற்றது என்று சொல்லும் ஆய்வுகள் உள்ளன. விடுதலைக்குப் பிந்தைய எந்தக் கல்வித்திட்டமும் வேத, குருகுலக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட்டதே காரணமாகும். இன்று கூட ஆசிரியர் பயிற்சிகளில் ‘Mentors’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். நமது கல்வியில் காலனியக் கறைகளைவிட வேதக் கறைகள் அதிகம்.  
   
    பெண்கல்வி, திருநங்கைகள், காட் ஒப்பந்ததால் அழிக்கப்படும் பொதுக்கல்வி, பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் தற்கொலை செய்யும் மனிதர்கள், +2 இல் 1110 மதிப்பெண்கள் எடுத்த மாணவனைத் திட்டித் தீர்க்கும் தாயார், எல்லாருக்கும் முதல் பரிசு வழங்கும் பள்ளி,  சூரியனைக் காட்டப் பயன்படும் திறன் வகுப்பறைத் (smart class) தொழில்நுட்பங்கள், தேர்ச்சியை விட குழந்தையின் உயிரே முதன்மையானது, கழிப்பிட, குடிநீர் வசதிகளின் தேவை போன்று கல்வியின் பன்முகங்கள் இங்கு ஆய்வுக்குள்ளாகின்றன. 

      பிசா (PISA) தேர்வில் 74 இல் 73 வது இடம் பெற்றிருக்கும் நாம், அனைவரும் தேர்ச்சி என்ற இலக்கு நோக்கிய ஓட்டத்தில் வெறு எதையும் கண்டுகொள்ள விரும்பாத கல்வித்துறை என்ற நிலையில்  பாடத்திட்டத்தையும் வினாத்தாளையும் கேரளாவைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறார். (பக்.116) ‘கொரோனா’ உள்பட நமக்கு எது என்றாலும் கேரள மாடல் அதாவது சிவப்பென்றால் ‘அலர்ஜி’! குஜராத் மாடல் இருந்தால் சொல்லுங்க, எட்வின்! 

   கல்விப்புலத்திற்கு வெளியிலிருந்து கல்வி பற்றிப் பேசுவது கல்விப்புலத்திலிருந்து பேசுவதும் ஒன்றாக இருக்க இயலாது. எனவே இவை முதன்மை வாய்ந்தாகின்றது. தமது நீண்ட கல்வி மற்றும் சமூக அனுபவங்களின் வாயிலாக கல்வி குறித்த ஆக்கச் சிந்தனைகளையும் தீர்வுகளையும் எட்வின் முன்வைத்துள்ளார். இவற்றை அரசுகள் செயல்படுத்தும் என்றெல்லாம் நம்ப முடியாது. இதனை வாசிப்பவர்களுக்கு கல்வி பற்றிய புரிதலையும் குறிப்பாக பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இருக்கின்ற கல்வி பற்றிய கற்பிதத்தையும் மாற்ற முடிந்தால் அதற்கே மகிழ்ச்சியடையலாம்

நூல் விவரங்கள்:
எது கல்வி?   
இரா. எட்வின்
முதல் பதிப்பு: டிசம்பர் 2016
பக்கங்கள்: 176
விலை: 150

 வெளியீடு:
நற்றிணை பதிப்பகம் (பி) லிட்.,
6/84, மல்லன் பொன்னப்பன் தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை – 600005.
பேச: 044 28482818
கைபேசி: 9486177208
இணையம்:   www.natrinaipathippagam.com
இணையம் மூலம் பெற: www.natrinaibooks.com
மின்னஞ்சல்:  natrinaipathippagam@gmail.com
மதுரைக் கிளை:
நற்றிணை புக் சென்டர்,
46/A1, மேல வடம்போக்கித் தெரு,
(கூடலழகர் பெருமாள் கோயில் அருகில்)
மதுரை – 625001.
கைபேசி: 9750972043