துளைத்தெடுக்கும் கேள்விகளின் ஊடாக சாக்ரடீஸ் வரலாறு
மு.சிவகுருநாதன்
(நூலறிமுகம்… தொடர்: 003)
(ஜூலை 2018 இல் பாரதி புத்தகாலயத்தின் ‘Books for Children’
வெளியிட்ட யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில் ‘சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது ஏன்?’ என்ற நூல் பற்றிய பதிவு.)
வெளியிட்ட யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில் ‘சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது ஏன்?’ என்ற நூல் பற்றிய பதிவு.)
தத்துவ
அறிஞர் சாக்ரடீசை குழந்தைகளுக்கு எவ்வாறு அறிமுகம் செய்வது? அவரது தத்துவக் கருத்துகளைச்
சொல்லிக் குழந்தைகளைச் சலிப்படைய வைக்கக் கூடாதல்லவா? அவரது அடிப்படை கேள்வி கேட்பதுதானே!
அதுவும் குழந்தைகள் கேள்வி கேட்பதைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களிடம் கிளர்ந்தெழும்
கேள்விகளுக்கு பஞ்சமிருக்குமா? கேள்விகள் மூலம் சாக்ரடீஸ் கதை மட்டுமல்ல, அவரது தத்துவமும்
உயிர் பெறுகிறது.
குழந்தை மல்லிகாவின் துளைத்தெடுக்கும் வினாக்களுக்கு
அவளது அப்பா சொல்லும் பதில்களின் வழியே சாக்ரடீசின் வரலாறு குழந்தைகளிடம் முன்வைக்கப்படுகிறது.
எம்.எம்.சசீந்திரன் சிறப்பான உத்தியைத் தேர்வு செய்து எளிமையான வடிவில் விளக்கியுள்ளார்.
அதை யூமா வாசுகி மொழிபெயர்ப்பு என்ற தெரியாத அளவிற்கு தமிழாக்கியுள்ளார்.
காவியத் தன்மை ஊடுருவும் Jaques Louis David இன்
ஓவியமும், ‘சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது
ஏன்?’ என்ற கேள்வித் தலைப்பும் நூலுக்கு கூடுதல் மதிப்பூட்டுகின்றன.
“என்ன கேள்வி கேட்டதற்கு விஷம் கொடுத்தார்களா? அடக்கடவுளே!
அப்படியென்றால் என் பள்ளிக்கூடத்தில் இப்போது ஒரு வாத்தியாரும் டீச்சரும் மிச்சமிருக்க
மாட்டார்கள்”, (பக்.16) என்று மல்லிகா சொல்வது நமது கல்வி முறையின் மீதான விமர்சனமாக
எடுத்துக் கொள்ளலாம்.
அன்று சாக்ரடீஸ், புத்தர் போன்றோர் கேள்வி கேட்கச் சொன்னது விடுதலைக்கான, தன்னெழுச்சிக்கான
கேள்விகள். அவை குழந்தைகள், இளைஞர்களிடமிருந்து வெளிவர வேண்டுமென இவர்கள் விரும்பினர்.
ஆனால் இயற்கையாக எழும் வினாக்களை அழித்தொழித்துவிட்டு, செயற்கையாக முன் தயாரிக்கப்பட்ட
வினாக்களோடும் அதற்கான ‘நோட்ஸ்’களோடும் கல்விக்கூடங்களும் ஆசிரியர்களும் காத்திருக்கின்றன.
கேள்வி கேட்பது ஆசிரியர்கள் பதில் சொல்வது குழந்தைகள் என நமது கல்விமுறை சென்றுகொண்டுள்ளதை
விமர்சிக்க இது மட்டும் போதுமே.
மல்லிகா கேட்டாள்: “கடவுளுக்கு விஷம் கொடுப்பது
ஏன்?
(…)
“அப்புறம் சிறை அதிகாரி என்ன சொன்னார்?
சாக்ரடீஸ் சொன்னதை ஏற்றுக்கொண்டாரா?”
“இல்லை, ‘ஒருவர் இறப்பதற்குத்
தேவையான அளவு மட்டுமே நாங்கள் விஷம் தயாரிக்கிறோம்’ என்று சொன்னார்”.
“எப்படியானாலும் அது நல்லதுதான்,
அப்பா”
“ஏன் நல்லது?”
“இல்லை கடவுளுக்கு விஷத்தை சமர்ப்பித்தால்
சாக்ரடீஸுடன் சேர்ந்து கடவுளும் இறந்து போய்விடுவார் அல்லவா, அதனால் கேட்டேன்”.
“உனக்கு தமாஷாக இருக்கிறதா?”.
(பக்.56 & 57)
சாக்ரடீஸுடன் சேர்ந்து கடவுளும் இறந்து போயிருந்தால்
நல்லதுதானே! உண்மையில் குழந்தைகள் இப்படி யோசிப்பார்கள்தானே! இன்னும் சாகாமல் இருந்துகொண்டு
இந்த உலக மக்களை அச்சுறுத்தும் கடவுள்கள் மரணிப்பது எந்நாளோ?
குழந்தைகளிடம் வரலாற்றையும் அறிவியலையும் முறையாகக்
கொண்டு சேர்க்க இம்மாதிரியான புதிய உத்திகளைக் கண்டடைந்து அவற்றை முயற்சிப்பது நமது
குழந்தைகளின் வருங்காலத்தை வளமாக்கும். கேள்வி கேட்கவும் ஆராயவும் காரண காரியத்தைத்
தேடவும் அவர்களை முன்னோக்கி செலுத்த இவை உதவும்.
நூல் விவரங்கள்:
சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது
ஏன்?
எம்.எம்.சசீந்திரன்
(தமிழில்) யூமா
வாசுகி
வெளியீடு:
Books for Children - பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு:
ஜூலை 2018
பக்கங்கள்: 64
விலை: ₹ 50
தொடர்பு முகவரி:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.
தொலைபேசி: 044 24332424, 24332924,
24356935
இணையம்: www.thamizhbooks.com
1 கருத்து:
அருமையான அறிமுகம்
கருத்துரையிடுக